EPS ADMK Alliance | ”பாஜகவுக்கு NO சொன்ன EPS” விஜய்க்கு ஸ்ட்ரிக்ட் கண்டிஷன்!முதல்வர் வேட்பாளர் யார்?
பாஜகவை சேர்ந்தவரை முதல்வர் வேட்பாளராக அறிவிக்க வேண்டும் என சொன்னதற்காக அந்தக் கூட்டணியில் இருந்து வெளியேறிய இபிஎஸ், விஜய்யை முதல்வராக்கி விடுவாரா என பண்ருட்டி ராமச்சந்திரன் சொல்லியுள்ளது விவாதமாக மாறியுள்ளது.
2026 சட்டப்பேரவை தேர்தலுக்கான கூட்டணி வேலைகள் தற்போதே தொடங்கிவிட்டன. குறிப்பாக இந்த முறை வலுவான கூட்டணியை அமைத்து விட வேண்டும் என திமுக கூட்டணியிருக்கும் தூது அனுப்பி வருகிறது அதிமுக. அதுவும் விஜய்யும் கூட்டணி அமைப்பதில் முனைப்பு காட்டி வருகிறார் அதிமுக பொதுச்செயலாளர் இபிஎஸ். அதிமுக தரப்பில் இருந்து விஜய்க்கு 60 சீட் தருவதாகவும், அமைச்சரவையில் இடம் ஒதுக்கி தருவதாகவும் பேச்சுவார்த்தை நடந்துள்ளதாக மூத்த பத்திரிகையாளர் எஸ்.பி.லட்சுமணன் தெரிவித்திருந்தார். சமீபத்தில் நடந்த அதிமுக மாவட்ட செயலாளர்கள் கூட்டத்திலும் விஜய் பற்றிய ஆலோசனை நடந்துள்ளது.
என்ன நடந்தாலும், முதல்வர் வேட்பாளர் அதிமுகவில் இருந்து தான் இருக்க வேண்டும் என அக்கட்சியினர் தெளிவாக சொல்லியுள்ளனர். வேண்டுமானால் விஜய்க்கு துணை முதலமைச்சர் பதவி கொடுப்பதாக பேசிப் பார்க்கலாம் என திட்டமிடப்பட்டுள்ளது. ஆனால் இதற்கு விஜய் ஒத்துவருவது சந்தேகம் தான் என பேச்சு இருக்கிறது. அதிமுகவினர் மத்தியிலும் இதே விவாதமே நடந்து வருகிறது.
அதிமுக மூத்த தலைவரும், தற்போது ஓபிஎஸ் தரப்பில் இருக்கக் கூடிய பண்ருட்டி ராமச்சந்திரன், இபிஎஸ்-ன் கூட்டணி ப்ளான் நடப்பதற்கான வாய்ப்பு இல்லை என அடித்து சொல்லியுள்ளார். பாஜகவுக்கு எதிராக அமைந்துள்ள திமுக கூட்டணி பலமாக இருப்பதாகவும், அதற்கு எதிரில் யாரும் பலமாக இல்லை என்றும் தெரிவித்துள்ளார்.
அதேபோல் விஜய்யுடன் கூட்டணி அமைப்பதில் இருக்கும் சிக்கல் தொடர்பாகவும் பேசியுள்ளார். இபிஎஸ், விஜய்யை முதல்வராக்க ஒத்துக் கொள்ள மாட்டார், அதேபோல் விஜய்யும், இபிஎஸ்-ஐ முதல்வராக்குவதற்கு நிச்சயம் கட்சி ஆரம்பித்திருக்க மாட்டார் என்று குறிப்பிட்டுள்ளார். இதே காரணத்திற்காக தான் அதிமுகவுடன் கூட்டணி வைப்பதில் விஜய் யோசனையில் இருப்பதாக அரசியல் வட்டாரத்தில் பேச்சு இருக்கிறது.
வரவிருக்கும் சட்டசபை தேர்தலில் பாஜகவை சேர்ந்த ஒருவரை முதல்வர் வேட்பாளராக அறிவிக்க வேண்டும் என்று சொன்னதால், கூட்டணியில் இருந்து விலகிய இபிஎஸ், விஜய்க்கு மட்டும் பதவியை தூக்கி கொடுத்து விடுவாரா என பண்ருட்டி ராமச்சந்திரன் சொல்லியுள்ளார். அதிமுக, பாஜக கூட்டணியில் இருந்து விலகியதன் பின்னணியில் அண்ணாமலையுடன் ஏற்பட்ட வாக்குவாதம் உள்ளிட்ட ஏராளமான காரணங்கள் சொல்லப்பட்டன. தற்போது முதல்வர் வேட்பாளர் விவகாரம் தான் காரணம் என சொல்லியுள்ளது விஜய்யுடன் கூட்டணி அமைப்பதற்கான வேலைகளிலும் தாக்கத்தை ஏற்படுத்த வாய்ப்புள்ளதாக சொல்கின்றனர் அரசியல் நோக்கர்கள்.