தஞ்சாவூர் கலெக்டர் அதிரடி ஆய்வு: அங்கன்வாடி & முதியோர் காப்பகங்களில் நிகழ்ந்த நெகிழ்ச்சியான சம்பவங்கள்!
மனநல காப்பகத்தில் தங்கியுள்ள முதியோர்களுடன் மாவட்ட கலெக்டர் பிரியங்கா பங்கஜம் கலந்துரையாடினார். தொடர்ந்து அவர்களின் தேவைகள் மற்றும் குடும்ப சூழ்நிலைகள் குறித்தும் விரிவாக கேட்டறிந்தார்.

தஞ்சாவூர்: தஞ்சாவூர் மாவட்டம் ஒருங்கிணைந்த குழந்தைகள் வளர்ச்சி திட்டத்தின் சார்பில் செயல்பட்டு வரும் அங்கன்வாடி மையம் மற்றும் அன்பகம் மனநல காப்பகத்தை கலெக்டர் பிரியங்கா பங்கஜம் பார்வையிட்டு ஆய்வு செய்தார்.
தஞ்சாவூர் மாவட்டம் ஒருங்கிணைந்த குழந்தைகள் வளர்ச்சி திட்டத்தின் சார்பில் செயல்பட்டு வரும் பூக்குளம் அங்கன்வாடி மையம் மற்றும் அன்பகம் மனநல காப்பகத்தை மாவட்ட கலெக்டர் பிரியங்கா பங்கஜம் பார்வையிட்டு ஆய்வு செய்தார். தஞ்சாவூர் மாநகராட்சிக்குட்பட்ட பூக்குளம் பகுதியில், ஒருங்கிணைந்த குழந்தைகள் வளர்ச்சி திட்டத்தின் சார்பில் செயல்பட்டு வரும் அங்கன்வாடி மையத்தினை பார்வையிட்ட மாவட்ட கலெக்டர் பிரியங்கா பங்கஜம் மையத்தின் மூலமாக பயன் பெற்று வரும் குழந்தைகளின் எண்ணிக்கைகள் குறித்து கேட்டறிந்தார்.

தொடர்ந்து அவர்களுக்கு நாள்தோறும் வழங்கப்பட்டு வரும் உணவு வகைகள் மற்றும் சிற்றுண்டிகள் குறித்தும் கேட்டறிந்து, வருகை பதிவேட்டின்படி குழந்தைகள் மையத்திற்கு வருகை தருகிறார்களா என்பது குறித்தும், குழந்தைகளின் வயதுக்கு ஏற்ப உயரம் மற்றும் எடை உள்ளனவா என்பது குறித்தும் ஆய்வு மேற்கொண்டார்.
மேலும், எடை குறைவாக உள்ள குழந்தைகளுக்கு ஊட்டச்சத்து மிக்க உணவுப் பொருட்களை வழங்கவும் மாவட்ட கலெக்டர் அங்கன்வாடி மைய பணியாளர்களுக்கு அறிவுறுத்தினார். மேலும் அங்கன்வாடி மையத்திற்கு தேவையான அடிப்படை கட்டமைப்பு வசதிகளை மேம்படுத்திடவும் தொடர்புடைய அலுவலர்களுக்கு அறிவுறுத்தினார்.
இதனைத் தொடர்ந்து, தஞ்சாவூர் மாநகராட்சியில் செயல்பட்டு வரும் வடக்கு வாசல் சிரேயஸ் சத்திரம் அன்பகம் மனநல காப்பகத்தில் மாவட்ட கலெக்டர் பிரியங்கா பங்கஜம் பார்வையிட்டு ஆய்வு செய்தார்.
அன்பகம் மனநல காப்பகத்தில் தங்கியுள்ள முதியோர்களுடன் மாவட்ட கலெக்டர் பிரியங்கா பங்கஜம் கலந்துரையாடினார். தொடர்ந்து அவர்களின் தேவைகள் மற்றும் குடும்ப சூழ்நிலைகள் குறித்தும் விரிவாக கேட்டறிந்தார். மனநலம் மேம்பட்ட நபர்களை அவர்களின் உறவினர்களிடம் ஒப்படைக்க தேவையான நடவடிக்கைகளை மேற்கொள்ளவும் சம்மந்தப்பட்ட அலுவலர்களை அறிவுறுத்தினார்.
அதேபோல், அன்பகம் மனநல காப்பகத்தில் வழங்கப்படும் உணவு, மருத்துவ சேவைகள், அடிப்படை வசதிகள் குறித்தும் அலுவலர்களிடமிருந்து தகவல் பெற்று அவற்றை மேம்படுத்த உடனடி நடவடிக்கை எடுக்கவும் உத்தரவிட்டார். மற்ற மாநிலங்களில் இருந்து தங்கியுள்ள நபர்களையும் அவர்களின் உறவினர்களை தொடர்புகொண்டு ஒப்படைக்க தேவையான முயற்சிகள் மேற்கொள்ளப்படும். மேலும் மையத்தில் எத்தனை நபர்கள் தங்கியிருக்கின்றனர் என்பது குறித்தும், அவர்களுக்கு நாள்தோறும் வழங்கப்படும் உணவுப் பட்டியல் குறித்து மேலும் வயதான மற்றும் நோயாளி முதியோருக்குக் கிடைக்கும் தொடர்ச்சியான சிகிச்சை முறைகள் குறித்தும் காப்பாளர்களிடம் கேட்டறிந்தார்.
மேலும், அங்கு தங்கி உள்ள முதியோரின் உடல்நிலையை அடிப்படையாகக் கொண்டு, அவர்களுக்கு சிறிய சிறிய வேலைகளை ஒதுக்கி அளிக்க வேண்டும் எனவும். இதன் மூலம் அவர்களுக்கு புதிய தன்னம்பிக்கை உருவாகும் என மாவட்ட கலெக்டர் பிரியங்கா பங்கஜம் தெரிவித்தார்.
இந்த ஆய்வின் போது.தஞ்சாவூர் வட்டாட்சியர் சிவகுமார், சத்திரம் வட்டாட்சியர் சக்திவேல் மற்றும் பலர் கலந்து கொண்டனர்.



















