Kota Srinivasa Rao: பாவம்யா.. பெத்த புள்ள மரணத்தையே பாத்தவரு.. கவலையிலே உயிரை விட்ட கோட்டா சீனிவாசராவ்!
உடல்நலக்குறைவால் உயிரிழந்த நடிகர் கோட்டா சீனிவாச ராவ் கடந்த 2010ம் ஆண்டு சாலை விபத்தில் தனது மகனை பறிகொடுத்த துயர சம்பவமும் அரங்கேறியது/

தெலுங்கு மற்றும் தமிழ் திரையுலகின் பிரபல நடிகர் கோட்டா சீனிவாசராவ். தன்னுடைய தனித்துவமான உடல் மொழியாலும், வசன உச்சரிப்பாலும், நடிப்பாலும் தனக்கென்று தனி ரசிகர்கள் பட்டாளத்தை உருவாக்கியவர். கடந்த சில ஆண்டுகளாகவே உடல்நலக்குறைவு மற்றும் வயது மூப்பு காரணங்களால் இன்று அதிகாலை அவர் காலமானார்.
புத்திர சோகம்:
பொதுவாக எந்த மனிதனும் சந்திக்கக்கூடாது என்று கருதும் புத்திர சோகத்தையே பார்த்தவர் கோட்டா சீனிவாசராவ். ருக்மணி என்பவரை திருமணம் செய்த கோட்டா சீனிவாச ராவிற்கு 2 மகள்கள், ஒரு மகன். இவரது ஒரே மகன் கோட்டா வெங்கட சாய்பிரசாத்.

தந்தையைப் போலவே நடிகராக வளரத் தொடங்கியபோது, கடந்த 2010ம் ஆணடு ஹைதரபாத்தில் உள்ள நட்சத்திர ஓட்டல் ஒன்றில் சாப்பிடுவதற்கு இருசக்கர வாகனத்தில் சென்றுள்ளார். அந்த இரு சக்கர வாகனமானது 1000 சிசி கொண்ட வாகனம் ஆகும். இதை வெளிநாட்டில் இருந்து பிரத்யேகமாக வெங்கட சாய் பிரசாத் இறக்குமதி செய்திருந்தார்.
மகனை பறிகொடுத்த கோட்டா சீனிவாசராவ்:
ஆனால், துரதிஷ்டவசமாக அந்த சாலையில் வந்த லாரியுடன் மோதியது. இந்த கோர விபத்தில் வெங்கட சாய் பிரசாத் ரத்த வெள்ளத்தில் சரிந்தார். அவரை அருகில் இருந்தவர்கள் மீட்டு மருத்துவமனைக்கு அழைத்துச் சென்றனர். ஆனால், அவர் பரிதாபமாக உயிரிழந்தார். இந்த கோர சம்பவத்தின்போது நடிகர் கோட்டா சீனிவாசராவ் படப்பிடிப்பில் இருந்தார்.
தகவல் அறிந்த அவர் சம்பவட இடத்திற்கு கண்ணீருடன் வந்தார். தனது ஒரே மகனை விபத்தில் பறிகொடுத்த பிறகு கோட்டா சீனிவாசராவ் மிகவும் மனம் உடைந்தே காணப்பட்டார். அதன்பின்பு, படங்களில் அவர் நடித்துக் கொண்டு வந்தாலும் அவரது மகன் மரணம் அவரை கடுமையாக பாதித்தது.
பிரபலங்களுக்கு வில்லன்:
பின்னர், வயது மூப்பு மற்றும் உடல்நலக்குறைவால் அவதிப்பட்டு வந்த கோட்டா சீனிவாசராவ் இன்று அதிகாலை ஹைதரபாத்தில் உள்ள அவரது இல்லத்தில் 4 மணியளவில் உயிரிழந்தார். தெலுங்கு திரையுலகின் பிரபலங்களான சிரஞ்சீவி, பாலகிருஷ்ணா, வெங்கடேஷ், பவன் கல்யாண், மகேஷ்பாபு, பிரபாஸ் என பல பிரபலங்களுடன் இணைந்து நடித்தவர். தமிழிலும் விக்ரம், சிம்பு, அஜித், சரத்குமார், விஜய், கரண், விஷால், கார்த்திக் என பல பிரபலங்களுடன் நடித்துள்ளார். தமிழில் இவர் நடித்த பெருமாள் பிச்சை, சனியன் சகடை, சொக்கநாதன் கதாபாத்திரம் மிகவும் பிரபலம்.





















