தைலாபுரத்தில் அன்புமணி ENTRY! 5 நிமிடத்தில் பேசி முடித்த ராமதாஸ்! மயிலாடுதுறையில் நடந்தது என்ன?
ராமதாஸ் இல்லாத நேரத்தில் தைலாபுரம் தோட்டத்தில் ENTRY கொடுத்த நிலையில், ராமதாஸ் மயிலாடுதுறை கூட்டத்தில் அன்புமணி பற்றி எதுவும் பேசாமல் 5 நிமிடங்களிலேயே உரையை முடித்துக் கொண்டு வெளியேறியது கவனம் பெற்றுள்ளது.
பாமகவில் ராமதாஸ் மற்றும் அன்புமணி இடையே அதிகார மோதல் நடந்து வருகிறது. அன்புமணிக்கு ஆதரவாக இருப்பவர்களை ராமதாஸ் கட்சியில் இருந்து நீக்கி வருகிறார். ஆனால் கட்சி விதிகளின்படி தலைவராக நீடிக்கும் தனக்கு தான் நிர்வாகிகளை நீக்கும் அதிகாரம் இருப்பதாக சொல்லி வருகிறார். ராமதாஸ் அவ்வப்போது செய்தியாளர்களை சந்தித்து அன்புமணி மீது பல்வேறு புகார்களை அடுக்கி வருகிறார்.
இந்தநிலையில் என்னுடைய பெயரை பயன்படுத்தக் கூடாது, இனிஷியல் போட்டுக் கொள்ளலாம் என அன்புமணிக்கு ஆர்டர் போட்டார் ராமதாஸ். திண்டிவனத்தில் நடந்த மாநில செயற்குழு கூட்டத்தில் கட்சிக்கு களங்கம் ஏற்படுத்தும் அன்புமணி மீது நடவடிக்கை எடுக்க ராமதாஸூக்கு முழு அதிகாரம் வழங்கும் தீர்மானமும் நிறைவேற்றப்பட்டது. இருவரும் பேசி முடித்து சுமூகமாக கட்சியை நடத்த வேண்டும் என பாமகவினர் புலம்பி வருகின்றனர்.
இந்தநிலையில் தைலாபுரம் தோட்டத்திற்கு நேற்று இரவு அன்புமணி திடீரென வந்திருந்தார். மயிலாடுதுறையில் நடந்த கட்சி நிர்வாகிகள் கூட்டத்திற்கு ராமதாஸ் சென்றிருந்தார். அவர் வீட்டில் இல்லாத நேரத்தில் அன்புமணி வந்தது கவனம் பெற்றது. திருமண நிகழ்ச்சி ஒன்றுக்கு வந்திருந்த அவர் அப்படியே தனது அம்மாவை பார்த்து விட்டு செல்வதற்காக வந்ததாக சொல்கின்றனர்.
அந்த நேரத்தில் மயிலாடுதுறை கட்சி நிர்வாகிகள் கூட்டத்தில் இருந்த ராமதாஸ், அன்புமணியை விமர்சனம் செய்து பேசுவார் என எதிர்பார்க்கப்பட்டது. மயிலாடுதுறை மாவட்டத்தின் மருத்துவ கல்லூரி உள்ளிட்ட கோரிக்கைகள், பூம்புகாரில் ஆகஸ்ட் 10ஆம் தேதி நடைபெற உள்ள வன்னியர் சங்க மகளிர் மாநாடு உள்ளிட்டவற்றை பற்றி மட்டுமே ராமதாஸ் பேசினார். அன்புமணி பற்றி எதுவும் பேசாமல் 5 நிமிடங்களிலேயே உரையை முடித்துவிட்டு கிளம்பினார். ராமதாஸ் செய்தியாளர்கள் சந்திப்பையும் தவிர்த்து விட்டு சென்றது பேசுபொருளாக மாறியுள்ளது.





















