TVK Vijay: நீங்க எதுக்கு? Sorryமா சர்காராக மாறிய திமுக அரசு - மு.க.ஸ்டாலினை விளாசித்தள்ளிய விஜய்
தமிழ்நாட்டில் லாக்கப் மரணத்தில் உயிரிழந்த 24 குடும்பத்திடமும் மன்னிப்பு கேட்டீர்களா? என்றும், சாரி மா சர்கார் மாடலாக திமுக அரசு உள்ளது என்றும் விஜய் ஆவேசமாக பேசினார்.

சிவகங்கை மாவட்டம் திருப்புவனத்தில் காவல்துறையினர் தாக்குதலில் உயிரிழந்த அஜித்குமார் மரணம் ஒட்டுமொத்த தமிழ்நாட்டையும் உலுக்கியுள்ளது. இந்த விவகாரத்தில் அனைத்து கட்சியினரும் திமுகவிற்கும், காவல்துறைக்கும் கண்டனம் தெரிவித்த நிலையில், முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் அஜித்குமார் தாயிடம் தொலைபேசியில் தொடர்பு கொண்டு மன்னிப்பு கேட்டார்.
சென்னையில் விஜய் போராட்டம்:
மு.க.ஸ்டாலின் தலைமையிலான திமுக ஆட்சியில் 25 லாக்கப் மரணங்கள் என்று தரவுகள் வெளியாகி அதிர்ச்சியை உண்டாக்கியுள்ள நிலையில், இன்று சென்னையில் லாக்கப் மரணங்களில் உயிரிழந்தவர்களுக்கு நீதி கேட்டு தவெக சார்பில் போராட்டம் நடந்தது. அந்த போராட்டத்தில் தவெக தலைவரும், நடிகருமான விஜய் பேசினார்.
தமிழக வெற்றிக் கழகத்தின் தலைவர் விஜய் பேசும்போது, திருப்புவனம் மடப்புரம் அஜித்குமார் ஒரு சாதாரண எளிய குடும்பத்தைச் சேர்ந்த இளைஞர். அந்த சாதாரண குடும்பத்துக்கு நடந்த கொடுமைக்கு சிஎம் சாரி சொன்னாங்க. தப்பு இல்லை. இப்போது, அதனுடன் சேர்த்து இதையும் கொஞ்சம் பண்ணிடுங்க சார்.
24 குடும்பத்திடம் மன்னிப்பு கேட்டீங்களா?
உங்கள் ஆட்சிக்காலத்தில் போலீஸ் விசாரணையில் 24 பேர் உயிரிழந்துள்ளனர். அந்த 24 பேரின் குடும்பத்திற்கும் நீங்கள் மன்னிப்பு கேட்டீர்களா? தயவு செய்து மன்னிப்பு கேளுங்கள். அஜித்குமார் குடும்பத்திற்கு நீங்கள் நிவாரணம் கொடுத்த மாதிரி நீங்கள் நிவாரணம் கொடுத்தீர்களா? இந்த 24 குடும்பத்திற்கும் நிவாரணம் கொடுங்க.
சாத்தான் ஜெயராஜ், பென்னிக்ஸ் வழக்கு சிபிஐக்கு மாற்றியபோது இது தமிழ்நாட்டின் காவல்துறைக்கு அவமானம் என்று சொன்னீர்கள். இன்று நீங்கள் உத்தரவிட்டதற்கு என்ன பெயர் சார்? அதேதானே. அன்று நீங்கள் சொன்னதும், நீங்கள் நடப்பதும் அதேதானே. அதே சிபிஐ ஆர்எஸ்எஸ் - பாஜகவின் கைப்பாவையாகத்தானே இருக்கிறது. ஏன் நீங்க அங்க போய் ஒளிந்து கொள்கிறீர்கள்?
நீங்க எதுக்கு சார்?
ஏனென்றால், தமிழக வெற்றிக்கழகம் சார்பில் நீதிமன்றத்தின் நேரடி கண்காணிப்பில் சிறப்பு புலனாய்வுக்குழு விசாரணை அமைக்கனும்னு ரொம்ப வலுவாக கேட்ருக்கோம். அதுனால, அந்த பயத்துல ஒன்றியத்தோட ஆட்சியின் பின்னால் ஒளிந்துகொள்வதே காரணம்.
உங்கள் ஆட்சியில் இன்னும் எத்தனை அட்ராசிட்டிஸ்? அண்ணா பல்கலைக்கழக வழக்கில் இருந்து, இன்று அஜித்குமார் வழக்கு வரை. எல்லாத்துக்கும் நீதிமன்றம் தலையிட்டு உங்கள் அரசை கேள்வி கேட்டுகிட்டு இருக்கு? எல்லாத்துக்கும் நீதிமன்றம் கேள்வி கேட்கனும்னா நீங்க எதுக்கு சார்?
சாரிமா சர்கார் மாடல் ஆட்சி:
உங்க ஆட்சி எதுக்கு சார்? நீங்க உட்காந்து இருக்குற அந்த முதலமைச்சர் பதவி எதுக்கு சார்? எப்படி கேள்வி கேட்டாலும் உங்ககிட்டு இருந்து எந்த பதிலும் வரப்போறது இல்ல. இருந்தாதானே வரும். அதிகபட்சம் உங்களிடம் இருந்து வரும் பதில் சாரிமா. தெரியாம நடந்துடுச்சுமா.. இல்லனா நடக்கக்கூடாது நடந்துடுச்சுமா.. சாரிமா அவ்ளோதானே. வெத்து விளம்பர மாடல் விளம்பர திமுக சர்கார் இப்போ சாரிமா மாடல் சர்காரா மாறிடுச்சு.
இந்த நிலையற்ற ஆட்சியை விட்டு நீங்க போறதுக்குள்ள நீங்க செஞ்ச எல்லா தப்புக்கும் பரிகாரமாக சட்டம் ஒழுங்கை சரிசெஞ்சே ஆகனும். இல்லனா மக்களோட மக்களா ஒன்னா நின்னு உங்களை சரிசெய்ய வைப்போம். தவெக சார்பில் அதற்கான அத்தனை போராட்டமும் எடுத்து நடத்தப்படும்.
இவ்வாறு அவர் பேசினார். விஜய் நடத்திய இந்த போராட்டத்தில் லாக்கப் மரணத்தில் உயிரிழந்தவர்களின் குடும்பத்தினரும் பங்கேற்றனர்.





















