IND Vs ENG 3rd TEST: டிராவில் முடிந்த முதல் இன்னிங்ஸ்.. நான்காவது நாளில் மிரட்டுமா இந்தியா? இங்கி., வீழ்த்துமா?
IND Vs ENG Lords TEST: இந்தியா - இங்கிலாந்து அணிகளுக்கு இடையேயான மூன்றாவது டெஸ்ட் போட்டி விறுவிறுப்பான கட்டத்தை எட்டியுள்ளது.

IND Vs ENG Lords TEST: லார்ட்ஸில் நடைபெற்று வரும் மூன்றாவது டெஸ்ட் போட்டியின் இரண்டாவது இன்னிங்ஸில் இங்கிலாந்து அணி 2 ரன்கள் முன்னிலை பெற்றுள்ளது.
கே.எல். ராகுல் அபாரம்:
இந்தியா - இங்கிலாந்து அணிகளுக்கு இடையேயான மூன்றாவது டெஸ்ட் போட்டி, லார்ட்ஸ் மைதானத்தில் நடைபெற்று வருகிறது. முதல் இன்னிங்ஸில் இங்கிலாந்து அணி 387 ரன்களுக்கு ஆட்டமிழந்த நிலையில், இரண்டாவது நாள் முடிவில் இந்திய அணி 3 விக்கெட்டுகளை இழந்து நிதானமாக ஆடி வந்தது. தொடர்ந்து நேற்றைய ஆட்டம் தொடங்கியதும் ரிஷப் பண்ட் மற்றும் கே.எல். ராகுல் ஆகியோர் பொறுப்பான ஆட்டத்தை வெளிப்படுத்தினர். இதன் மூலம், லார்ட்ஸ் மைதானத்தில் தனது இரண்டாவது சதத்தை பூர்த்தி செய்து அசத்திய கே.எல். ராகுல் கூடுதலாக ஒரு ரன் கூட சேர்க்காமல் ஆட்டமிழந்தார். அவரை தொடர்ந்து அரைசதம் விளாசி அபாரமாக விளையாடி வந்த பண்டும், எதிர்பாராத விதமாக ரன் அவுட் ஆகி ஏமாற்றமளித்தார்.
இந்திய அணி ஆல்-அவுட்:
முதல் இன்னிங்ஸில் இந்திய அணி பின் தங்கிவிடுமோ என எதிர்பார்க்கப்பட்ட நிலையில், ஜடேஜா மற்றும் நிதிஷ்குமார் கூட்டணி நிதானமான ஆட்டத்தை வெளிப்படுத்தி அணியை சரிவில் இருந்து மீட்டது. இந்த கூட்டணி 72 ரன்களை சேர்த்து அணியை வலுவான நிலைக்கு கொண்டு சென்றது. நிதிஷ்குமார் 30 ரன்களில் ஆட்டமிழக்க, ஜடேஜா அபாரமான பேட்டிங்கை வெளிப்படுத்தி 72 ரன்களை விளாசி ஆட்டமிழந்தார். அவரை தொடர்ந்து வந்த வாஷிங்டன் சுந்தர் 23 ரன்களை சேர்க்க மற்ற வீரர்கள் சொற்ப ரன்களில் ஆட்டமிழந்தனர். இதனால், இந்திய அணி 387 ரன்களுக்கு ஆல்-அவுட்டானது. அதாவது இந்தியா மற்றும் இங்கிலாந்து ஆகிய இரு அணிகளும் முதல் இன்னிங்ஸில் ஒரே ஸ்கோரை எட்டி ஆல்-அவுட்டாகின.
நான்காவது நாளில் மிரட்டுமா இந்தியா?
தொடர்ந்து களமிறங்கிய இங்கிலாந்து, மூன்றாவது நாள் முடிவில் வெறும் இரண்டு ரன்களை மட்டுமே சேர்த்துள்ளது. முதல் இரண்டு போட்டிகளை போன்று இல்லாமல், லார்ட்ஸ் ஆடுகளம் பேட்ஸ்மேன்களுக்கு மிகவும் சிரமமானதாக காட்சியளிக்கிறது. இதனால் வீரர்கள் அதிரடியாக ரன் சேர்க்க முடியாமல் திணறி வருகின்றனர். பந்துவீச்சாளர்களுக்கு சாதகமான சூழல் நிலவுவதால், இங்கிலாந்து அணியை குறைந்த ஸ்கோருக்கு ஆல்-அவுட்டாக்கி வெற்றி பெற இந்திய அணி தீவிரம் காட்டுகிறது. ஆனால், இத்தகைய ஆடுகளங்களில் ரன் குவிப்பதில் கைதேர்ந்தவராக விளங்கும் ரூட் கடும் சவால் அளிப்பார் என எதிர்பார்க்கப்படுகிறது. அவரை, ஆரம்பத்திலேயே வீழ்த்தி, பும்ரா நம்பிக்கை அளிப்பாரா என்ற எதிர்பார்ப்பும் நிலவுகிறது.
லார்ட்ஸ் மைதானத்தில் கடைசியாக விளையாடிய மூன்று டெஸ்ட் போட்டிகளில், இரண்டில் இந்திய அணி வெற்றி பெற்று இருப்பது குறிப்பிடத்தக்கது. தற்போதைய 5 போட்டிகள் கொண்ட தொடரில், முதல் 2 போட்டிகள் முடிவில் இரு அணிகளும் தலா ஒரு வெற்றியை பதிவு செய்துள்ளது குறிப்பிடத்தக்கது.




















