NASA Job: நாசாவே வேண்டாம், வேலையை விட்டு கிளம்பும் 2000+ பணியாளர்கள் - அப்படி என்ன தான் ஆச்சு?
NASA Job: அமெரிக்காவின் விண்வெளி ஆராய்ச்சி நிறுவனமான நாசாவில் 2 ஆயிரத்திற்கும் அதிகமான மூத்த பணியாளர்கள் அடுத்தடுத்து வேலையை ராஜினாமா செய்தது அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

NASA Job: அமெரிக்காவின் விண்வெளி ஆராய்ச்சி நிறுவனமான நாசாவில் அனுபவ பணியாளர்களுக்கு வறட்சி ஏற்படும் சூழல் ஏற்பட்டுள்ளதாக வல்லுநர்கள் எச்சரித்துள்ளனர்.
நாசாவிற்கு குட் பாய் சொன்ன மூத்த பணியாளர்கள்:
அமெரிக்காவைச் சேர்ந்த பொலிடிகோ எனும் நிறுவனம் வெளியிட்டுள்ள தகவல்களின்படி, அந்நாட்டின் விண்வெளி ஆராய்ச்சி நிறுவனமான நாசாவில் இருந்து 2 ஆயிரத்திற்கும் அதிகமானோர் தங்களது பணியை ராஜினாமா செய்ய உள்ளனர். அதில் GS-13 முதல் GS-15 குழு வரையிலான 2,145 ஊழியர்கள் அடங்குவார்கள் என்றும், அதிகபட்சமாக GS-15 குழுவைச் சேர்ந்த 875 பேர் தங்களது பணியை விட்டு விலக உள்ளதாகவும், இதனால் நாசா கணிசமான நிபுணத்துவ இழப்பை எதிர்கொள்ள உள்ளதாகவும் கூறப்படுகிறது.
காரணம் என்ன?
முக்கியமான நிர்வாக மற்றும் தொழில்நுட்ப நிபுணத்துவத்தை பிரதிநிதித்துவப்படுத்தும் இந்த ஊழியர்கள், ட்ரம்ப் தலைமையிலான அரசின் ஆட்குறைப்பு நடவடிக்கையின் ஒரு பகுதியாக முன்கூட்டியே ஓய்வு பெறுதல், ஒத்திவைக்கப்பட்ட ராஜினாமாக்களை ஏற்றுக்கொள்ளும் முயற்சியில் ஈடுபட்டுள்ளனர். நாசாவின் நிதியை 25% குறைத்து 5,000 க்கும் மேற்பட்ட ஊழியர்களைக் குறைக்கும் ட்ரம்ப் நிர்வாகத்தின் முடிவால், 1960 களின் முற்பகுதியில் இருந்த அளவிற்கு நாசா அமைப்பை சுருக்கி விடும் என துறைசார் வல்லுநர்கள் எச்சரித்துள்ளனர்.
பற்றாக்குறையால் தவிக்கும் மையங்கள்:
ஆட்குறைப்பு நடவடிக்கை காரணமாக நாசாவின் 10 பிராந்திய ஆராய்ச்சி நிலையங்கள், பணியாளர்கள் பற்றாக்குறையை எதிர்கொள்கின்றன. அதன்படி, கோடார்ட் விண்வெளி விமான மையம் 607 ஊழியர்களை இழந்துள்ளது. ஜான்சன் விண்வெளி மையம் 366 ஊழியர்களையும், கென்னடி விண்வெளி மையம் 311 ஊழியர்களையும், நாசா தலைமையகம் 307 ஊழியர்களையும், லாங்லி ஆராய்ச்சி மையம் 281 ஊழியர்களையும், மார்ஷல் விண்வெளி விமான மையம் 279 ஊழியர்களையும் மற்றும் க்ளென் ஆராய்ச்சி மையம் 191 ஊழியர்களையும் இழந்துள்ளது.
அனுபவ பணியாளர்களுக்கு வறட்சி:
ஊழியர்கள் தாமாகவே பணியை ராஜினாமா செய்வது, வெள்ளை மாளிகையின் ஆட்குறைப்பு நடவடிக்கையுடன் ஒருபுறம் ஒத்துப்போகிறது. அதேநேரம், 2027ம் ஆண்டின் நடுவே நிலாவை நோக்கிய பயணமும் அதனை தொடர்ந்து செவ்வாய் கிரகத்தை நோக்கிய பயணம்ஜ்ம் திட்டமிடப்பட்டுள்ளது. இந்த சூழலில் அனுபவம் வாய்ந்த பணியாளர்கள் ராஜினாமா செய்வது ஒருவிதமான திறன் வறட்சியை நாசாவில் ஏற்படுத்தியுள்ளது. இதுகுறித்து பேசிய ராஜினாமா செய்யும் ஊழியர் ஒருவர், “ஆட்குறைப்பு நடவடிக்கையால் நாசாவின் நிர்வாக மற்றும் முக்கிய தொழில்நுட்ப நிபுணத்துவம் குறைவதோடு, செயல்பாடுகளும் சீர்குலைக்கப்படுகிறது” என வேதனை தெரிவித்துள்ளார். இதனிடையே, மார்ச் மாத மசோதாவில் நாசா ஊழியர்களைத் தக்கவைத்துக்கொள்வதற்கு செனட் வர்த்தகக் குழு தீவிரம் காட்டி வருகிறது. இதனால், ராஜினாமா முடிவில் உள்ள ஊழியர்களில் பலர் தக்கவைத்துக் கொள்ளப்படும் எனவும் எதிர்பார்க்கப்படுகிறது.





















