Watch Video: ஐயாவை பாத்த மாதிரியே இருந்துச்சு.. கோலியாகவே மாறிய சுப்மன்கில்.. ஜாக் கிராவ்லிக்கு மிரட்டல்!
லார்ட்ஸ் டெஸ்ட் போட்டியில் நேரத்தை வீணடித்த ஜாக் கிராவ்லியை இந்திய கேப்டன் சுப்மன்கில் விரலை நீட்டி எச்சரித்த வீடியோ வைரலாகி வருகிறது.

லண்டன் லார்ட்ஸ் மைதானத்தில் நடைபெற்று வரும் 3வது டெஸ்ட் போட்டியில் இந்திய அணி - இங்கிலாந்து அணி மோதி வருகிறது. இந்த போட்டியில் இரு அணிகளும் முதல் இன்னிங்சில் 387 ரன்கள் எடுத்த நிலையில், இங்கிலாந்து அணி 3வது நாள் ஆட்ட நேர முடிவில் 2 ரன்கள் எடுத்து ஆடி வருகிறது.
நேரத்தை வீணடித்த கிராவ்லி:
இந்திய அணி நேற்று ஆல் அவுட்டான பிறகு களமிறங்கிய இங்கிலாந்து அணிக்காக ஜாக் கிராவ்லி - பென் டக்கெட் ஆட்டத்தை தொடங்கினர். பும்ரா முதல் ஓவரை தாமதப்படுத்துவதன் மூலம் இந்திய அணி வெறும் 1 ஓவர் மட்டுமே வீச வைப்பதே இங்கிலாந்தின் வியூகமாக இருந்தது.
அதற்காக பும்ரா வீசிய முதல் 2 பந்துகளை ஆடிய ஜாக் கிராவ்லி, பும்ரா 3வது பந்தை வீசி கிரீஸ் வரை ஓடி வந்த பிறகு திடீரென பேட்டிங் செய்யாமல் நகர்ந்து விட்டார். அதனால், பும்ரா அதிருப்தி அடைந்தார். மேலும், கேப்டன் சுப்மன்கில் ஆவேசம் அடைந்தார். ஆங்கிலத்தில் ஆவேசமாக ஜாக் கிராவ்லியை பார்த்து பேசிவிட்டு நகர்ந்தார்.
கோலி போல மிரட்டிய சுப்மன்கில்:
மீண்டும் 3வது பந்தை விட்ட ஜாக் கிராவ்லி, 4வது பந்தை பேட்டால் தடுத்தார். 5வது பந்தை பேட்டால் தடுத்த பிறகு சம்பந்தமே இல்லாமல் தனது கையுறையை கழட்டி வேறு கையுறையை கொண்டு வருமாறு கூறினார். இதைப் பார்த்த இந்திய வீரர்கள் ஆவேசம் அடைந்தனர்.
Always annoying when you can't get another over in before close 🙄 pic.twitter.com/3Goknoe2n5
— England Cricket (@englandcricket) July 12, 2025
இந்திய கேப்டன் சுப்மன்கில், கே.எல்.ராகுல் என ஸ்லிப்பில் நின்ற வீரர்கள் கைதட்டி நடிப்பு அபாரம் என்பது போல கைதட்டினர். பின்னர், கேப்டன் சுப்மன்கில் சிரித்துக்கொண்டே சென்று ஜாக் கிராவ்லியிடம் முடிவை மாற்றும் சைகையை காட்டினார். பின்னர், ஜாக் கிராவ்லியை கையை நீட்டி எச்சரித்தார். பதிலுக்கு ஜாக் கிராவ்லியும் அவரிடம் கையை நீட்ட பென் டக்கெட் சுப்மன்கில்லை சமாதானப்படுத்தினார்.
மேலும், அவரது கை விரலில் அடிபட்டது போல நடித்த ஜாக் கிராவ்லி விரலில் இங்கிலாந்து உடற்பயிற்சி நிபுணர் சோதித்தார். பின்னர், பும்ரா வீசிய கடைசி பந்தையும் விட்டு ஜாக் கிராவ்லி அந்த ஓவரில் பேட்டிங்கை முடித்தார். இதனால், நேற்றைய ஆட்டம் 1 ஓவர் மட்டுமே இந்திய அணி வீசியது.
வெற்றி பெற இந்தியா முனைப்பு:
விக்கெட் ஏதும் விழுந்தால் நைட் வாட்ச்மேன் இறக்க வேண்டிய சூழலைத் தடுப்பதற்காக இங்கிலாந்து பேட்ஸ்மேன் ஜாக் கிராவ்லி இந்த நாடகம் ஆடினார். இந்திய அணியில் ஆவேசம் என்றாலே விராட் கோலிதான் அனைவரது ஞாபகத்திற்கும் வருவார். அவர் இந்த தொடரில் இல்லாததால் இந்திய அணியில் ஆக்ரோஷம் குறைந்ததாக பலரும் கருத்து தெரிவித்தனர்.
தற்போது முன்னாள் கேப்டன் கோலியின் இடத்தில் ஆடி வரும் கேப்டன் சுப்மன்கில் அவரைப் போலவே எதிரணியினரை கையாண்ட விதத்தை பலரும் பாராட்டி வருகின்றனர். சுப்மன்கில்லின் இந்த செயலுக்கு பலரும் பாராட்டுகளையும், வரவேற்பையும் தெரிவித்து வருகின்றனர்.
லார்ட்ஸ் டெஸ்ட் போட்டியில் இன்னும் 2 நாட்கள் உள்ள நிலையில், இரு அணிகளும் முதல் இன்னிங்சில் சம ரன்கள் எடுத்திருப்பதால் இங்கிலாந்து அணி 2வது இன்னிங்சில் எடுக்கும் ரன்களை விட 1 ரன் அதிகமாக இந்திய அணிக்கு இலக்கு நிர்ணயிக்கப்படும்.
இந்திய அணி இங்கிலாந்து விக்கெட்டுகளை விரைவில் வீழ்த்தி இலக்கை அடைந்து வெற்றி பெற வேண்டும் என்று ஆர்வம் காட்டுவார்கள். இதனால், இந்திய அணி பந்துவீச்சு இன்று அனல்பறக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. அதேசமயம், ரூட், ப்ரூக், ஜேமி ஸ்மித் போன்ற வலுவான பேட்ஸ்மேன்களை இந்திய அணி வீழ்த்த வேண்டியது அவசியம் ஆகும்.




















