Kota Srinivasa Rao Death: காலையிலே சோகம்.. நடிகர் கோட்டா சீனிவாசராவ் காலமானார் - கண்ணீரில் திரையுலகம்
Kota Srinivasa Rao Death: பிரபல நடிகர் கோட்டா சீனிவாசராவ் உடல்நலக்குறைவால் இன்று அதிகாலை காலமானார். அவரது மறைவிற்கு ரசிகர்கள் இரங்கல் தெரிவித்து வருகின்றனர்.

Kota Srinivasa Rao Death: தமிழ், தெலுங்கு திரையுலகின் முன்னணி நடிகர் கோட்டா சீனிவாசராவ். வில்லன், குணச்சித்திர கதாபாத்திரம் என பல வேடங்களில் அசத்தியவர். தமிழில் ப்ளாக்பஸ்டர் வெற்றி பெற்ற சாமி படத்தில் வில்லனாக நடித்து அசத்தியிருப்பார்.
காலமானார் கோட்டா சீனிவாசராவ்:
சமீபகாலமாகவே உடல்நலக்குறைவால் அவதிப்பட்டு வந்த கோட்டா சீனிவாசராவ் இன்று அதிகாலை 4 மணிக்கு அவரது இல்லத்தில் காலமானார். அவரது மரணம் தெலுங்கு மற்றும் தமிழ் திரையுலகை சோகத்தில் ஆழ்த்தியுள்ளது. அவரது மறைவிற்கு பிரபலங்களும், ரசிகர்களும் இரங்கல் தெரிவித்து வருகின்றனர்.
யார் இந்த கோட்டா சீனிவாச ராவ்?

நடிகர் கோட்டா சீனிவாசராவ் 1942ம் ஆண்டு ஜுலை 10ம் தேதி பிறந்தவர். அவரது 83வது பிறந்தநாள் கடந்த 3 நாட்களுக்கு முன்புதான் கொண்டாடப்பட்டது. விஜயவாடாவில் உள்ள கனிகபடு கிராமத்தில் பிறந்தவர்.
1978ம் ஆண்டு ப்ரனம் கரீடு என்ற படம் மூலமாக நடிகராக அறிமுகமானார்.பின்னர், 5 ஆண்டுகளுக்கு பட வாய்ப்புகள் இல்லாமல் இருந்தவருக்கு, 1983ம் ஆண்டு மீண்டும் பட வாய்ப்பு கிட்டியது. பின்னர், 1985ம் ஆண்டு மீண்டும் பப்பாயி - அப்பாயி என்ற படம் மூலமாக நடிகராக களமிறங்கிய கோட்டா சீனிவாசராவ் மிகவும் பிசியான நடிகராக மாறினார். வருடம்தோறும் 10, 20 படங்கள் நடித்துக் கொண்டே இருந்தார்.
இவரது அபார நடிப்புத் திறமையைப் பார்த்த இயக்குனர் ஹரி, விக்ரம் நடித்த சாமி படத்திற்கு இவரை வில்லனாக களமிறக்கினார். விக்ரமிற்கு இணையான நடிப்பைத் தந்து மிரட்டியிருப்பார் கோட்டா சீனிவாசராவ். அடுத்தடுத்து தமிழில் இவருக்கு பட வாய்ப்புகள் குவிந்தது. தமிழில் இவர் நடித்த பெருமாள் பிச்சை, சனியன் சகடை கதாபாத்திரங்கள் மிகவும் பிரபலம். தெலுங்கு தமிழ் மட்டுமின்றி இந்தி, கன்னடத்திலும் ஏராளமான படங்கள் நடித்துள்ளார். டெக்கானி, மலையாளம் ஆகிய மொழிகளிலும் படம் நடித்துள்ளார்.
சொந்த வாழ்க்கை:

இவரது தந்தை ஒரு மருத்துவர் ஆவார். இவர் முதலில் தனது தந்தையைப் போலவே மருத்துவர் ஆக முயற்சித்துள்ளார். பின்னர், நடிகராக மாறிவிட்டார். கல்லூரிகளில் மேடை நாடகங்கள் மூலம் தொடங்கிய இவரது நடிப்பு பயணம் இவரை மிகப்பெரிய நடிகராக மாற்றியது. ருக்மணி என்பவரை திருமணம் செய்த இவருக்கு 2 மகள்கள், ஒரு மகன் உள்ளார். இவரது மகன் கோடா வெங்கட ஆஞ்சனேய பிரசாத் ஹைதரபாத்தில் நடந்த விபத்தில் 2010ம் ஆண்டு உயிரிழந்தார். அதன்பின்பே, சற்று மனம் உடைந்தே காணப்பட்டார்.
கோட்டா சீனிவாசராவ் கலைத்திறமையை பாராட்டி பத்மஸ்ரீ விருது வழங்கப்பட்டுள்ளது. 9 முறை நந்தி விருது பெற்றுள்ளார். சைமா விருது வாங்கியுள்ளார். சிரஞ்சீவி, பாலைய்யா, பவன் கல்யாண், வெங்கடேஷ், மகேஷ்பாபு என தெலுங்கு திரையுலகின் முன்னணி நடிகர்கள் அனைவருடனும் நடித்தவர். இவரது மறைவிற்கு அவர்கள் நேரில் சென்று அஞ்சலி செலுத்தி வருகின்றனர். வயது மூப்பு காரணமாக கடந்த சில ஆண்டுகளாகவே நடிப்பதிலும், பொது நிகழ்ச்சியில் பங்கேற்பதையும் தவிர்த்தே வந்தார் என்பதும் குறிப்பிடத்தக்கது.





















