DMK: ”இதுதான் போதைப்பொருளை ஒழிக்கும் லட்சணமா?” திமுக அரசில் காவல்துறை சூப்பர்? கெட்டொழியும் இளசுகள்
CM Stalin DMK: தமிழ்நாட்டில் போதைப்பொருள் விற்பனை வழக்கில் கைது செய்யப்படுபவர்களில், மூன்றில் ஒருவர் 25 வயதுக்கு குறைவானவர் என்ற தகவல் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

CM Stalin DMK: தமிழ்நாட்டில் போதைப்பொருள் பயன்பாட்டை ஒழிக்கும் காவல்துறையின் முயற்சி பலனளிக்கவில்லை என்பதையே, தரவுகள் தெரிவிக்கின்றன.
ஒரு பக்கம் அதிகார திமிர் - மறுபக்கம் உறக்கம்:
திமுக ஆட்சியில் சட்ட ஒழுங்கு சீர்கெட்டு விட்டதாக எதிர்க்கட்சிகள் தொடர்ந்து குற்றம்சாட்டி வருகின்றன. கொலை, கொள்ளை மற்றும் போதைப்பொருள் பயன்பாடு அதிகரித்து விட்டதாகவும் சாடி வருகின்றன. திருப்புவனத்தில் காவல்துறையினரால் இளைஞர் அடித்துக் கொல்லப்பட்டது அவர்கள் அதிகார திமிரில் செயல்படுவதை காட்டுவதாக ஒருதரப்பினர் குற்றம்சாட்டுகின்றனர். அதேநேரம், ஆந்திர மாநிலம் ஸ்ரீகாளஹஸ்தியில் கொல்லப்பட்ட ஒருவரின் உடலை, சென்னைக்கு கொண்டு வந்து கூவம் நதியில் ஒரு கும்பல் வீசி சென்றுள்ளது. இது காவல்துறை எந்த அளவிற்கு சட்ட - ஒழுங்கை காப்பதில் மெத்தனமாக உள்ளது என்பதை காட்டுவதாக மற்றொரு தரப்பினர் தெரிவிக்கின்றனர். இந்நிலையில் தான், போதைப்பொருள் பழக்கத்தால் தமிழகம் எந்த அளவிற்கு சீர்கெட்டுள்ளது என்பதை விளக்கும் தரவுகள் வெளியாகியுள்ளன.
கெட்டொழியும் இளசுகள்
கடந்த 10 மாதங்களில் சென்னையில் போதைப் பொருள் விற்பனை செய்யதாக, போதைப் பொருள் தடுப்பு பிரிவு காவல்துறையினரால் கைது செய்யப்பட்டவர்களில் 33 சதவிகிதம் பேர் 25 வயதுக்கும் குறைவானவர்கள் என்ற அதிர்ச்சி தகவல் வெளியாகியுள்ளது. சென்னை மாநகர காவல்துறை தகவல்களின்படி, கடந்த ஆண்டு ஆகஸ்ட் மாதம் தொடங்கி கடந்த ஜுலை 7ம் தேதி வரையிலான காலகட்டத்தில், சிந்தெடிக் போதைப்பொருள் விற்பனை கும்பலுடன் தொடர்பில் இருப்பதாக 534 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர். அவர்களில் 178 பேர் 20 முதல் 25 வயதுக்கு உட்பட்டவர்கள் என தரவுகள் தெரிவிக்கின்றன. குறிப்பாக 33 பேர் கல்லூரி மாணவர்கள் என்ற தகவல் அதிர்ச்சியை அளிக்கிறது.
பரவிக் கிடக்கும் போதைப் பொருள்:
கடந்த அக்டோபர் மாதம் கொடுங்கையூரில் போலீசார் நடத்திய சோதனையில், ஹாலிவுட்டில் வெளியான பிரபல சீரிஸான பிரேக்கிங் பேட் அடிப்படையில் வீட்டிலேயே ஆய்வகம் அமைப்பை ஏற்படுத்தி மாணவர்களே போதைப்பொருள் தயாரித்து வந்தது கண்டுபிடிக்கப்பட்டது. நான்கு பொறியியல் மாணவர்கள் மற்றும் வேதியியலில் முதுகலை பயின்று வரும் மாணவன் ஒருவன் சேர்ந்து, மிகவும் போதைத்தன்மை கொண்ட மெத்தம்பெடமைன் எனப்படும் பொருளை தயாரித்து வந்தது அம்பலமானது. இந்த போதைப்பொருளானது கிரிஸ்டல் மெத், ஐஸ் , ஸ்பீட்மற்றும் கிளாஸ் எனப்படும் பல்வேறு பெயர்களில் இளைஞர்களிடையே அதிகளவில் புழக்கத்தில் இருப்பது தெரிய வந்தது.
இளைஞர்கள் ஈடுபடக் காரணம் என்ன?
போதைப்பொருள் விற்பனையில் ஈடுபடுவதன் மூலம் எளிதாக அதிக பணம் கிடைப்பதே, இந்த பணியில் கல்லூரி மாணவர்கள் ஈடுபட காரணம் என காவல்துறையினர் தெரிவிக்கின்றனர். கஞ்சா மற்றும் சிந்தெடிக் போதைப் பொருளை விற்பனை செய்யும் கும்பல்கள் இணைந்து செயல்படாமல், தனித்தனி சிண்டிகேட்களாக செயல்படுவதும் காவல்துறை விசாரணையில் தெரிய வந்துள்ளது. இதுவரை 84 சிந்தெடிக் போதைப் பொருள் குழுக்கைளை அடையாளம் கண்டு கைது செய்துள்ளதாக, சென்னை மாநகர காவல்துறை விளக்கமளித்துள்ளது. குழுக்களுக்கு மூளையாக செயல்பட்ட 25 வெளிநாட்டவர்கள் உட்பட, நாட்டின் பல்வேறு பகுதிகளிலும் கைது நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டுள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
பலனளிக்காத ஆப்ரேஷன்கள்..
போதைப்பொருளை ஒழிப்பதற்காக ஆப்ரேஷன் கஞ்சா 2.0, 3.0 என பல தேடுதல் வேட்டைகளை தமிழ்நாடு காவல்துறை மேற்கொண்டு வருகிறது. ஆனாலும், போதைப்பொருள் பயன்பாடு தொடர்ந்து அதிகரித்து வருவதையே, இந்த அடுக்கடுக்கான கைது நடவடிக்கைகள் உணர்த்துகின்றன. காவல்துறை அமைச்சரும், முதலமைச்சருமான ஸ்டாலின் போதைப்பொருள் பயன்பாட்டை ஒழிக்க வேண்டும் என அவ்வப்போது பல உத்தரவுகளை பிறப்பித்து வருகிறார். ஆனால், அவை அனைத்தும் அவர் நடித்த கொரோனா கால விளம்பரத்தில் வரும் வசனத்தை போன்று ஒரு பயனும் இல்லாததாகவே உள்ளன. இதன் காரணமாகவே, நகரங்களை தாண்டி கிராமங்கள் வரையிலும், தனி அறைகளை தாண்டி வகுப்பறைகள் வரையிலும் போதைப்பொருள் பயன்பாடு அதிகரித்துள்ளது. இதனால், அவ்வபொபோது குற்றச் செயல்களும் அரங்கேறி வருகின்றன.
தள்ளாடும் தமிழ்நாடு?
போதைப்பொருள் பயன்பாடு மட்டுமின்றி விற்பனையிலும் மாணவர்கள் மற்றும் இளைஞர்கள் ஈடுபடுவது, பெரும் சமூக சீர்கேட்டிற்கு வழிவகுக்கும் என்பதை உணர்ந்து இனியாவது அரசு இதில் தீவிரம் காட்ட வேண்டும் என்பதே பொதுமக்களின் கோரிக்கையாக உள்ளது. இல்லையெனில், தமிழ்நாட்டை நாட்டிலேயே முதன்மை மாநிலமாகவும், ஒரு ட்ரில்லியன் பொருளாதாரம் கொண்ட மாநிலமாகவும் மாற்ற வேண்டும் என்ற ஸ்டாலின் கனவும் பலிப்பது சாத்தியமற்றதாகி விடும் என்பதே பலரின் கருத்தாகவும் உள்ளது. ஒருபுறம் அரசியல் கட்சி தலைவர்கள் போதைப்பொருள் ஒழிக்கப்பட வேண்டும் வீதிக்கு வீதி சூளுரைத்து வருகின்றனர். ஆனால், அதேகட்சியை சேர்ந்த பிரமுகர்களே தங்களது அரசியல் செல்வாக்கை பயன்படுத்தி போதைப்பொருள் விற்பனையில் ஈடுபடுவதையும் தமிழக மக்கள் பார்த்து கொண்டுதான் இருக்கின்றனர்.





















