டெஸ்லாவுக்கு போட்டியாக தமிழ்நாட்டில் களமிறங்கும் வியட்நாம் கார் நிறுவனம்! புக்கிங் எப்போது?
டெஸ்லா அதன் முதல் இந்திய டீலர்ஷிப் ஷோரூமை ஜூலை 15ஆம் தேதி மும்பையில் திறக்க உள்ளது.
டெஸ்லா (Tesla) நிறுவனத்தை தொடர்ந்து, வின்ஃபாஸ்ட் (Vinfast) என்கிற வியட்நாம் நாட்டை சேர்ந்த மிக பெரும் நிறுவனமும் அடுத்ததாக இந்திய மார்க்கெட்டில் நுழைய உள்ளது. இரண்டும் சொல்லி வைத்தது போல், ஜூலை 15ஆம் தேதி இந்திய மார்க்கெட்டில் நுழைய உள்ளன. இந்த நிலையில், வின்ஃபாஸ்ட் கார்களின் புக்கிங் தொடர்பான புதிய தகவல்கள் வெளியாகி உள்ளன.
உலகின் மிக பெரும் கார் சந்தைகளுள் ஒன்றான இந்தியாவில் கால்பதிக்கவே எந்தவொரு வெளிநாட்டு கார் நிறுவனமும் விரும்பும். இருப்பினும், சில காரணங்களினால் இந்திய மார்க்கெட்டிற்குள் நுழைய முடியாமல் இருந்த நிறுவனங்கள் ஒன்றன்பின் ஒன்றாக இந்தியாவில் களமிறங்கி வருகின்றன. அந்த வரிசையில்தான், டெஸ்லா மற்றும் வின்ஃபாஸ்ட் நிறுவனங்கள் அடுத்ததாக இந்திய மார்க்கெட்டிற்கு வருகின்றன. இதில், டெஸ்லா நிறுவனத்தை பற்றி நம்மில் நிறைய பேருக்கு தெரியும். ஏனெனில், அந்த அளவிற்கு உலகின் மிக பெரும் எலக்ட்ரிக் நிறுவனமாக டெஸ்லா உள்ளது. ஆனால், வின்ஃபாஸ்ட் நிறுவனத்தை பற்றி நம்மில் பலருக்கு தெரியாது. டெஸ்லா நிறுவனத்தை போன்று, வின்ஃபாஸ்ட் நிறுவனமும் மிக பெரும் ஆட்டோமொபைல் நிறுவனம் ஆகும்.
ஆனால், அது வியட்நாம் மற்றும் அதனை சுற்றியுள்ள நாடுகளில் மட்டுமே நன்கு வலுவாக நெட்வொர்க்கை கொண்டுள்ளதால் நம்மில் பலருக்கு தெரியவில்லை. டெஸ்லா அதன் முதல் இந்திய டீலர்ஷிப் ஷோரூமை ஜூலை 15ஆம் தேதி மும்பையில் திறக்க உள்ளது. ஆனால், வின்ஃபாஸ்ட் நிறுவனம் இந்தியா முழுக்க 32 டீலர்ஷிப் ஷோரூம்களை நிறுவி வருகிறது.
அதாவது, கடந்த ஜனவரி மாதத்தில் ஆட்டோ எக்ஸ்போ 2025 (Auto Expo 2025) கண்காட்சியில் கார்களை காட்சிக்கு நிறுத்தியதில் இருந்தே வின்ஃபாஸ்ட் நிறுவனம் இந்தியாவில் அதன் பணிகளை துவங்கிவிட்டது. ஆட்டோ எக்ஸ்போவில் வின்ஃபாஸ்ட் நிறுவனம் சார்பில் பல கார்கள் மற்றும் 2-வீலர்கள் காட்சிக்கு நிறுத்தப்பட்டு இருந்தன. அவற்றுள், வின்ஃபாஸ்ட் வி.எஃப்6 (VF6) மற்றும் வி.எஃப்7 (VF7) எலக்ட்ரிக் கார்களுக்கான ப்ரீ-புக்கிங்குகளை ஜூலை 15ஆம் தேதி முதல் துவங்கவுள்ளதாக வின்ஃபாஸ்ட் நிறுவனம் அதிகாரப்பூர்வமாக அறிவித்துள்ளது. இந்தியாவில் முழுவதும் 27 நகரங்களில் 32 டீலர்ஷிப் ஷோரூம்களை நிறுவி வரும் வின்ஃபாஸ்ட் நிறுவனம், இதற்காக 13 டீலர்கள் உடன் கூட்டணி சேர்ந்துள்ளது.
இந்த வகையில், தமிழ்நாட்டில் சென்னை மற்றும் கோயம்புத்தூரில் வின்ஃபாஸ்ட் நிறுவனத்தின் டீலர்ஷிப் ஷோரூம்கள் அமைய உள்ளன. இன்னும் சொல்லப்போனால், வின்ஃபாஸ்ட் நிறுவனத்தின் உற்பத்தி தொழிற்சாலை ஆனது தமிழ்நாட்டின் தூத்துக்குடியில் தான் அமைக்கப்பட்டு உள்ளது. இதனால், ப்ரீ-புக்கிங் துவங்கப்பட உள்ள விஎஃப்6 மற்றும் விஎஃப்7 எலக்ட்ரிக் கார்கள் தமிழ்நாட்டில்தான் உற்பத்தி செய்யப்பட உள்ளன. இந்தியாவில் அடுத்ததாக மிகுந்த ஆதிக்கத்தை செலுத்த போவதாக எதிர்பார்க்கப்படும் நிறுவனங்களுள் வின்ஃபாஸ்ட் ஒன்றாகும். ஏனெனில், அந்த அளவிற்கு பல தரப்பட்ட வாகனங்களை உற்பத்தி செய்யக்கூடியதாக வின்ஃபாஸ்ட் உள்ளது. ஆதலால், இந்த நிறுவனத்தில் இருந்து இரு எலக்ட்ரிக் கார்களுக்கு புக்கிங் துவங்கப்பட இருப்பது இந்திய மார்க்கெட்டில் கவனிக்கத்தக்க அம்சமாக உள்ளது.





















