IND vs ENG 3rd Test: ஆல் ஏரியாவுலயும் ஐயா கில்லிடா.. கபில்தேவ் சாதனையையே காலி செய்த பும்ரா!
லார்ட்ஸ் மைதானத்தில் இங்கிலாந்திற்கு எதிராக 5 விக்கெட்டுகள் வீழ்த்திய பும்ரா, வெளிநாட்டு மண்ணில் அதிகமுறை 5 விக்கெட்டுகள் வீழ்த்திய இந்தியர் என்ற புதிய சாதனையை படைத்தார்.

இந்திய கிரிக்கெட் அணி தற்போது இங்கிலாந்தில் சுற்றுப்பயணம் மேற்கொண்டு ஆடி வருகிறது. இந்த இரு அணிகளும் மோதும் 3வது டெஸ்ட் கிரிக்கெட் தற்போது புகழ்பெற்ற லண்டன் லார்ட்ஸ் மைதானத்தில் நடந்து வருகிறது. இந்த டெஸ்ட் போட்டியில் முதலில் பேட் செய்த இங்கிலாந்து அணி ஜோ ரூட் சதம், ஜேமி ஸ்மித் மற்றும் ப்ரைடன் கர்ஸ் ஆகியோர் அரைசதத்தால் 387 ரன்களை குவித்தது.
மிரட்டிய பும்ரா:
இங்கிலாந்து அணி முதல் நாள் ஆடிய ஆட்டத்தைப் பார்க்கும்போது, 500 ரன்களை கடக்கும் என்று எதிர்பார்க்கப்பட்டது. ஆனால், அவர்களை 400 ரன்களுக்குள் சுருட்டியதற்கு முக்கிய காரணம் பும்ரா. அவர் முதல் இன்னிங்சில் மட்டும் 5 விக்கெட்டுகளை வீழ்த்தினார். ஜோ ரூட், ஹாரி ப்ரூக், பென் ஸ்டோக்ஸ், கிறிஸ் வோக்ஸ், ஆர்ச்சர் ஆகிய 5 பேரை அவுட்டாக்கினார். இதில் வோக்ஸ் தவிர மற்ற 4 பேரும் போல்டாகினர்.
சாதனை மேல் சாதனை:

லண்டன் லார்ட்ஸ் மைதானத்தில் டெஸ்ட் போட்டிகளில் சதம் அடிப்பது எவ்வளவு புகழ்வாய்ந்ததோ, அதேபோல ஒரே இன்னிங்சில் 5 விக்கெட்டுகள் வீழ்த்துவதும் மிகவும் சிறப்பு வாய்ந்தது ஆகும். நேற்றைய போட்டியில் 5 விக்கெட்டுகள் வீழ்த்தியதன் மூலம் பும்ரா பல சாதனைகளை படைத்துள்ளார். 47வது டெஸ்ட் போட்டியில் ஆடும் பும்ரா 15வது முறையாக ஒரே இன்னிங்சில் 5 விக்கெட்டுகளை வீழ்த்துகிறார்.
குறிப்பாக, வெளிநாட்டு மண்ணில் அவர் ஒரே இன்னிங்சில் 5 விக்கெட்டுகள் வீழ்த்துவது இது 13வது முறையாகும். இந்த சாதனையை இதுநாள் வரை தன்வசம் வைத்திருந்த கபில்தேவிடம் இருந்து பும்ரா நேற்று தட்டிப்பறித்துள்ளார். கபில்தேவ் இதுநாள் வரை 12 முறை வெளிநாட்டு மண்ணில் ஒரே இன்னிங்சில் 5 விக்கெட்டுகளை வீழ்த்தியுள்ளார்.
பந்துவீச்சு சக்கரவர்த்தி:

கபில்தேவ் இந்த சாதனையை 66 டெஸ்ட்களில் படைத்திருந்தார். பும்ரா 13 டெஸ்ட்களில் படைத்துள்ளார். பும்ரா, கபில்தேவிற்கு அடுத்தபடியாக அனில் கும்ப்ளே 10 முறையும், இஷாந்த் சர்மா 9 முறையும் இந்த சாதனையை படைத்துள்ளனர். இந்திய அணிக்காக டெஸ்ட் போட்டிகளில் அதிக முறை 5 விக்கெட்டுகள் வீழ்த்திய பெருமையை கொண்ட அஸ்வின் இந்த பட்டியலில் முதல் 4 இடங்களில் இல்லை.
இன்றைய கிரிக்கெட்டில் டெஸ்ட், ஒருநாள் மற்றும் டி20 என 3 வடிவத்திலும் தலைசிறந்த பந்துவீச்சாளராக பும்ரா திகழ்கிறார். இந்திய அணிக்காக டெஸ்ட் அணியை வழிநடத்திய அனுபவமும் கொண்ட பும்ரா இந்திய அணியின் பந்துவீச்சை தலைமை தாங்கும் நபராக கருதப்படுகிறார். அவர் இதுவரை 47 டெஸ்ட் போட்டிகளில் ஆடி 215 விக்கெட்டுகள் வீழ்த்தியுள்ளார். அதிகபட்சமாக ஒரே இன்னிங்சில் 6 விக்கெட்டுகள் வீழ்த்தியுள்ளார். அதிகபட்சமாக ஒரே டெஸ்ட்டில் 9 விக்கெட்டுகள் வீழ்த்தியுள்ளார்.
89 ஒருநாள் போட்டிகளில் ஆடி 149 விக்கெட்டுகளையும், 70 டி20 போட்டிகளில் ஆடி 89 விக்கெட்டுகளை வீழ்த்தியுள்ளார். ஐபிஎல் தொடரில் 145 போட்டிகளில் ஆடி 183 விக்கெட்டுகளை வீழ்த்தியுள்ளார்.



















