போதைப் பொருள் வழக்கில் ஜாமின் கிடைக்குமா.? சிக்கலில் ஸ்ரீகாந்த், கிருஷ்ணா - தீர்ப்பை ஒத்திவைத்த நீதிபதிகள்
போதைப் பொருள் வழக்கில், நடிகர்கள் ஸ்ரீகாந்த், கிருஷ்ணா ஆகியோருக்கு ஜாமின் கிடைப்பதில் சிக்கல் ஏற்பட்டுள்ளது. அதற்கான காரணம் குறித்து தற்போது பார்க்கலாம்.

போதைப் பொருள் பயன்படுத்திய வழக்கில் சிக்கிய நடிகர்கள் ஸ்ரீகாந்த் மற்றும் கிருஷ்ணா ஆகியோர், ஜாமின் மனு தாக்கல் செய்தனர். அந்த மனு மீது விசாரணை நடந்த நிலையில், அதன் மீதான தீர்ப்பை, சென்னை போதைப் பொருள் தடுப்பு சிறப்பு நீதிமன்ற நீதிபதிகள் ஒத்தி வைத்துள்ளனர்.
போதைப் பொருள் பயன்படுத்திய வழக்கில் கைதான நடிகர்கள்
கொகைன் போதைப் பொருளை பயன்படுத்திய வழக்கில், நடிகர்கள் ஸ்ரீகாந்த், கிருஷ்ணா ஆகியோர் கைது செய்யப்பட்டு, புழல் சிறையில் அடைக்கப்பட்டுள்ளனர்.
முன்னதாக, ஸ்ரீகாந்த்திடம் விசாரணை செய்த சென்னை நுங்கம்பாக்கம் போலீசார், அவருக்கு மருத்துவ பரிசோதனை செய்தனர். அதில், அவர் கொகைன் பயன்படுத்தியது உறுதி செய்யப்பட்டதைத் தொடர்ந்து, அவர் கைது செய்யப்பட்டார்.
தொடர்ந்து அவரிடம் நடத்திய விசாரணையில், போதைப் பொருளை அவருக்கு வழங்கிய பிரசாத், சப்ளையரான கெவின் உள்ளிட்டோர் சிக்கினர். அந்த லிஸ்ட்டில் நடிகர் கிருஷ்ணாவின் பெயரையும் ஸ்ரீகாந்த் சொன்னதால், போலீசார் கிருஷ்ணாவை கைது செய்ய தேடினர்.
பின்னர் தானாக போலீசாரிடம் வந்த கிருஷ்ணா கைது செய்யப்பட்டு, மருத்துவ பரிசோதனை செய்யப்பட்டது. ஆனால், அவர் போதைப் பொருள் பயன்படுத்தியதற்கான அறிகுறிகள் இல்லை என ரிப்போர்ட் வந்தது.
அதற்கு முன்னதாகவே, தனக்கு அலர்ஜி இருப்பதால், தன்னால் போதைப் பொருளை பயன்படுத்த முடியாது என கிருஷ்ணா கூறியிருந்தார்.
இந்த நிலையில், கைது செய்யப்பட்ட இருவருக்கும், ஜூலை 7-ம் தேதி வரை நீதிமன்ற காவல் விதித்து கோர்ட் உத்தரவிட்டதையடுத்து, அவர்கள் சென்னை புழல் சிறையில் அடைக்கப்பட்டனர்.
ஜாமின் கோரிய ஸ்ரீகாந்த், கிருஷ்ணா
ஏற்கனவே, நடிகர் ஸ்ரீகாந்த் விசாரணைக்கு முழு ஒத்துழைப்பு வழங்கி வருவதாக கூறப்பட்ட நிலையில், அவர் ஜாமின் மனு தாக்கல் செய்தார். இதேபோல், நடிகர் கிருஷ்ணாவும் ஜாமின் மனு தாக்கல் செய்தார். இருவரது ஜாமின் மனுவும், சென்னை போதைப் பொருள் தடுப்பு சிறப்பு நீதிமன்றத்தில் விசாரணைக்கு வந்தது.
நடிகர்கள் தரப்பில் வைக்கப்பட்ட வாதம் என்ன.?
ஜாமின் மனு மீதான விசாரணையின்போது, விசாரணைக்கு முழு ஒத்துழைப்பு வழங்கி வருவதால், ஜாமின் வழங்க வேண்டும் என்று ஸ்ரீகாந்த் தரப்பில் வாதிடப்பட்டது.
இதேபோல், போதைப் பொருள் பயன்படுத்தியது உறுதி செய்யப்படவில்லை என்பதால் தனக்கு ஜாமின் வழங்க வேண்டும் என கிருஷ்ணா தனது மனுவில் குறிப்பிட்டிருந்தார்.
காவல்துறை பலத்த எதிர்ப்பு - தீர்ப்பு ஒத்திவைப்பு
இந்த நிலையில், ஸ்ரீகாந்த் மற்றும் கிருஷ்ணாவிற்கு ஜாமின் வழங்க காவல்துறை தரப்பில் பலத்த எதிர்ப்பு தெரிவிக்கப்பட்டது. இதையடுத்து, இருவரது மனுக்கள் மீதான தீர்ப்பை, சென்னை போதைப் பொருள் தடுப்பு சிறப்பு நீதிமன்றம் ஒத்திவைத்தது. இதனால், ஸ்ரீகாந்த், கிருஷ்ணா இருவருக்கும் ஜாமின் கிடைப்பதில் சிக்கல் ஏற்பட்டுள்ளது.
எனினும், இன்று மாலை அந்த மனுக்கள் மீது தீர்ப்பு வழங்கப்பட உள்ளது. போலீசார் கடும் எதிர்ப்பு தெரிவிப்பதால், விசாரணைக்கு ஏதுவாக ஜாமின் மறுக்கப்படுமா? அல்லது, ஜாமின் வழங்கப்படுமா என்ற எதிர்பார்ப்பு தற்போது எழுந்துள்ளது.





















