டிஎன்பிஎஸ்சி குரூப் 4 தேர்வு எப்படி? தேர்வர்கள் கருத்து- குறையும் கட் ஆஃப்?
50 சதவீத அளவுக்கு புத்தகத்துக்கு உள்ளே இருந்தும் மீதி புத்தகத்துக்கு வெளியில் இருந்தும் கேட்கப்பட்டன. பொது அறிவு கேள்விகள் கொஞ்சம் கடினமாக இருந்தன.

2025ஆம் ஆண்டுக்கான டிஎன்பிஎஸ்சி குரூப் 4 தேர்வு இன்று நடைபெற்ற நிலையில், தேர்வுக்கு மொத்தம் 13,89,738 தேர்வர்கள் விண்ணப்பித்து இருந்தனர். இதில், 11,48,019 பேர் தேர்வை எழுதினர். மீதமுள்ள 2,41,719 தேர்வர்கள் குரூப் 4 தேர்வை எழுதவில்லை. இதனால் தேர்வை எழுதியவர்கள் விகிதம் 82.61 சதவீதமாக உள்ளது.
வினாத்தாள் எப்படி?
இந்த நிலையில் தேர்வு வினாத்தாள் எப்படி இருந்தது என்று தேர்வர்கள் கலவையான கருத்துகளைத் தெரிவித்துள்ளனர்.
பிரபாகரன்
டிஎன்பிஎஸ்சி குரூப் 4 தேர்வைப் பொறுத்தவரை கணக்கு ஓகேவாக இருந்தது. பொது அறிவு பகுதி ஓரளவு விடையளிக்கும் வகையிலும் இருந்தது. இந்த ஆண்டு தமிழ் பகுதி கடினமாக இருந்தது. ’’காற்றுள்ளபோதே தூற்றிக்கொள்’’ என்ற வகையில், 2022 மற்றும் 2024 குரூப் 4 தேர்வை சரியாக எழுதி இருக்கலாம் என்று தோன்றுகிறது.
தேசிங்கு
யூபிஎஸ்சிக்கு ஆள் தேர்வு செய்வதுபோல கடினத் தன்மையுடன் வினாத் தாள் அமைக்கப்பட்டுள்ளது. இது நியாயமே இல்லை. எங்களுக்கு போதிய நேரமே இல்லை.
ஜேம்ஸ்
பொதுத் தமிழ் மிகமிக கடினமாக இருந்தது. இதே சூழல், வரக்கூடிய குரூப் 2, குரூப் 2ஏ தேர்விலும் நீடிக்கும் எனில், இது பொதுத் தமிழ் பிரிவை எழுதும் தேர்வர்களை கடுமையாக பாதிக்கும். பொதுத்தமிழ் மற்றும் பொது ஆங்கிலம் இரண்டுக்கும் இடையே சமநிலைத் தன்மையை ஏற்படுத்துங்கள்.
நாகராணி
Group 1-ல கூட இப்டி கஷ்டமா கேள்விகள் கேக்கல. இதுக்கு Group 4 தேர்வு வைக்காம அடுத்த வருஷம் சேர்த்தே வச்சுருக்கலாம், படுமோசம். திருவள்ளுவரே வந்து எழுதினாலும் பாஸாக முடியாது
சுவிதா
முதல் முறையாக குருப் 4 தேர்வில் பள்ளி பாடங்களை தவிர்த்து அதிக வினாக்கள் கேட்கப்பட்டுள்ளன. பெரும்பாலும் குரூப் 4 தேர்வு என்றால் SSLC தரம் என்பதால், பள்ளி புத்தகங்களே போதுமானது என்ற நம்பிக்கை தகர்க்கப்பட்டுள்ளது.
நேரடி கேள்விகளாக இல்லாமல், மறைமுகமாக நிறைய கேள்விகள் கேட்கப்பட்டிருந்தன. நீண்ட நாட்களாக படித்துக் கொண்டிருந்தவர்களுக்கு நல்ல வாய்ப்பு இது. தமிழ் வளர்ச்சி, நிர்வாகம் சார்ந்து கேள்விகள் கேட்கப்பட்டுள்ளன. பொருளாதார ஆய்வறிக்கை சார்ந்து 2, 3 கேள்விகள் இருந்தன.
கட் ஆஃப் மதிப்பெண்கள் என்னவாகும்?
50 சதவீத அளவுக்கு புத்தகத்துக்கு உள்ளே இருந்தும் மீதி புத்தகத்துக்கு வெளியில் இருந்தும் கேட்கப்பட்டன. பொது அறிவு கேள்விகள் கொஞ்சம் கடினமாக இருந்தன. தேர்வர்களின் கருத்துகளை வைத்துப்பார்க்கும்போது கட் ஆஃப் குறையும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.






















