Donald Trump: என்னா சார் இதெல்லாம்.? புதிதாக 6 நாடுகளுக்கு ட்ரம்ப் கடிதம் - இந்த முறை சிக்கிய நாடுகள் எவை தெரியுமா.?
அமெரிக்க அதிபர் ட்ரம்ப், ஏற்கனவே 20 நாடுகளுக்கு வரி தொடர்பான கடிதத்தை அனுப்பியுள்ள நிலையில், தற்போது மேலும் 6 நாடுகளுக்கு கடிதம் அனுப்பியுள்ளார். இந்த முறை எந்தெந்த நாடுகளுக்கு தெரியுமா.?

அமெரிக்க அதிபர் டொனால்ட் ட்ரம்ப், பல்வேறு நாடுகளுக்கு பரஸ்பர வரி தொடர்பாக கடிதம் அனுப்பி வரும் நிலையில், தற்போது புதிதாக 6 நாடுகளுக்கு அவர் கடிதம் அனுப்பியுள்ளார். ஏற்கனவே 20 நாடுகளுக்கு அவர் கடிதம் அனுப்பியுள்ள நிலையில், புதிதாக அந்த பட்டியலில் இணைந்த நாடுகள் குறித்த விவரங்களை தற்போது பார்க்கலாம்.
ட்ரம்ப் கடிதம் அனுப்பிய புதிய நாடுகள் எவை.?
பல்வேறு நாடுகளுக்கு பரஸ்பர வரியை விதித்த ட்ரம்ப், ஏற்கனவே வரி விதிப்பு காலக்கெடுவை ஆகஸ்ட் 1 வரை நீட்டித்து, அதற்குமேல் நீட்டிப்பு கிடையாது என்று கூறி, 20 நாடுகளுக்கு கடிதங்களை அனுப்பினார். இந்த நிலையில், நேற்று மேலும் 6 நாடுகளுக்கு அவர் கடிதங்களை அனுப்பியுள்ளார்.
அதன்படி, பிலிப்பைன்ஸ், ப்ருநேய், அல்ஜீரியா, லிபியா, ஈராக் மற்றும் மால்டோவா ஆகிய நாடுகளுக்கு புதிதாக பரஸ்பர வரி தொடர்பான கடிதங்களை அனுப்பியுள்ளார் டொனால்ட் ட்ரம்ப். அதில், ஆகஸ்ட் 1-ம் தேதி முதல், 20 சதவீதம் முதல் 30 சதவீதம் வரை வரி விதிப்பு அமலாகும் என்று குறிப்பிடப்பட்டுள்ளது.
சொன்னதைவிட குறைவாகவே வரி விதித்துள்ளேன் - ட்ரம்ப்
கடந்த திங்கட் கிழமை பல்வேறு நாடுகளுக்கு அனுப்பப்பட்ட வரி தொடர்பான கடிதத்தில், கடந்த ஏப்ரல் மாதம் ட்ரம்ப் மிரட்டிய அளவிற்கு வரிகளை விதிக்காமல், அதற்கு சற்று குறைவான அளவிலேயே வரிகள் விதிக்கப்பட்டுள்ளதாக கூறப்படுகிறது. அதிலும், குறிப்பாக சில நாடுகளுக்கு இந்த முறை வரி மிகவும் குறைவு என்றும் தெரிவிக்கப்படுகிறது.
கடந்த ஏப்ரல் மாதம், தங்களுடன் வர்த்தகம் செய்யும் அனைத்து நாடுகளுக்கும் 10 சதவீத வரி விதிக்கப்படும் என அறிவித்த ட்ரம்ப், சில நாடுகளுக்கு கூடுதலான வரிகளை விதித்திருந்தார். அந்த வரிகள் நேற்று அமலாக இருந்த நிலையில், தற்போது ஜூலை 1-ம் தேதிக்கு தள்ளி வைக்கப்பட்டுள்ளது.
அவ்வாறு அவர் அதிக வரி விதித்த நாடுகள், தற்போது அவர்களுக்கான வரி எவ்வளவு என்பதை குறிக்கும் கடிதங்களை பெற்று வருகின்றன. ஏற்கனவே கூறப்பட்ட பரஸ்பர வரிகளைவிட, தற்போது போடப்பட்டுள்ள வரிகள் குறைவாகவே இருப்பதாக ட்ரம்ப் கூறியுள்ளார்.
அமெரிக்காவில் உற்பத்தியை துவக்க ட்ரம்ப் அழைப்பு / மிரட்டல்
பரஸ்பர வரிகளிலிருந்து தப்பிக்க வேண்டுமானால், அந்தந்த நாடுகள் மற்றும் நிறுவனங்கள் தங்கள் நாட்டில் உற்பத்தியை துவக்குமாறு அமெரிக்க அதிபர் ட்ரம்ப் கூறியுள்ளார். மேலும், தற்போது விதிக்கப்பட்ட வரிகளுக்கு பதில் வரி விதித்தால், தங்கள் நாடும் வரிகளை மேலும் உயர்த்தும் எனவும் அவர் எச்சரிக்கை விடுத்துள்ளார்.
தற்போது மொத்தம் 26 நாடுகள் ட்ரம்ப்பின் வரி தொடர்பான கடிதங்களை பெற்றுள்ள நிலையில், வர்த்தகக் கொள்கையை தங்களுக்கு ஏற்றவாறு மாற்றிக்கொள்ளும் நாடுகளுக்கு, வரியில் சலுகை அளிப்பது குறித்து பரிசீலிக்கப்படும் என்றும் ட்ரம்ப் தனது கடித்தில் குறிப்பிட்டுள்ளதாக கூறப்படுகிறது.
இந்நிலையில், ஐரோப்பிய யூனியன் உள்ளிட்ட பல நாடுகளுக்கு இன்னும் கடிதங்கள் அனுப்பப்படவில்லை என்பதால், வரும் நாட்களில் அந்த வேலையை ட்ரம்ப் துவங்குவார் என கூறப்படுகிறது.
அமெரிக்கா இதுவரை, இங்கிலாந்து மற்றும் வியட்நாம் நாடுகளுடன் மட்டுமே வர்த்தக ஒப்பந்தத்தை இறுதி செய்துள்ளது. அதோடு, பழிக்குப் பழியாக சீனாவும், அமெரிக்காவும் விதித்துக்கொண்ட வரிகளை குறைக்கும் நடவடிக்கைகளும் மேற்கொள்ளப்பட்டு வருவது குறிப்பிடத்தக்கது.





















