Pothupani Thilagam | ’நீர்வளத்துறையில் முறைகேடு?’ துரைமுருகனுக்கே விபூதி அடித்த பொதுப்பணி திலகம்!
நீர்வளத்துறை அமைச்சர் துரைமுருகன் துறையில் மிகப்பெரிய அளவில் முறைகேடுகள் நடைபெற்று வருவதாகவும், ஒரே ஒருவருக்காக ஒட்டு மொத்த துறையையும் பலிகொடுக்க சிலர் முயற்சித்து வருவதாகவும் பரபரப்பு புகார் எழுந்துள்ளது.
பொதுப்பணித் துறைக்கு அடுத்து மிக முக்கியமான துறையாக இருப்பது நீர்வளத்துறை. திமுக ஆட்சி அமைந்ததும் பொதுப்பணித்துறையோடு சேர்ந்து இருந்த நீர்வளத்துறையை பிரித்து அதற்காக தனி அமைச்சகத்தை அமைத்து திமுக பொதுச்செயலாளர் துரைமுருகன் கைகளில் கொடுத்தார் முதல்வர் ஸ்டாலின். அமைச்சர் உருட்டி, மிரட்டி அதிகாரிகளை வேலை வாங்கினாலும், அதையெல்லாம் பொருட்படுத்தாமல், அவருக்கே விபூதி அடிக்கும் வேலையில் இறங்கியிருக்கிறார்கள் சில ஊழல் பெருச்சாளிகள் என்கிறார்கள் விவரம் அறிந்தவர்கள்.
இந்நிலையில், லஞ்ச ஒழிப்புத்துறை, அமலாக்கத்துறை என விஜிலென்ஸ் சோதனையில் சிக்கி, விசாரணையை எதிர்கொண்டிருக்கும் ‘பொதுப்பணி’ திலகம் என்பவருக்கு நீர்வளத்துறையில் முக்கிய பொறுப்பு கொடுக்கப்பட்டுள்ளது அனைவரையும் அதிர்ச்சியில் ஆழ்த்தியுள்ளது. முறைகேடு, ஊழல் புகார்களில் சிக்கியிருக்கும் பொதுப்பணித் திலகத்திற்கு முக்கிய பதவி கொடுத்து அவரை தலைமை அலுவலகமான சென்னையிலே பணி செய்ய அமர்த்தியுள்ளது சட்ட, திட்டங்களை மீறிய செயல் என கொந்தளிக்கிறார்கள் துறையின் முக்கிய அதிகாரிகள்.
சாதாரண புகாருக்குள்ளான நபரை கூட முக்கியமான முடிவெடுக்கும் பதவிகளில் பணியமர்த்தமாட்டார்கள். ஆனால், டெண்டரில் முறைகேடு, திருச்சியில் சட்டவிரோத குவாரி, அரசு வளங்களை தனியார் நலனுக்காக பயன்படுத்தியது, திறமையான அதிகாரிகளை திட்டமிட்டு புறக்கணிப்பது என வரிசைக்கட்டிய புகார்கள் பொதுப்பணி திலகம் மீது இருக்கும் நிலையிலும், அதோடு அவர் விசாரணை அமைப்புகளின் வளையத்தில் சிக்கி, அவர் வீட்டில் சோதனை நடத்தப்பட்டு விசாரணையை எதிர்கொண்டு வரும் சூழலிலும் அவருக்கு சென்னை சேப்பாக்கத்தில் உள்ள நீர்வளத்துறை தலையிடத்திலேயே முடிவுகளை மேற்கொள்ளும் வகையில் Joint Chief Engineer (General) என்ற பதவியை கொடுத்து அமர வைத்துள்ளது எப்படி என்ற கேள்வி எழுந்துள்ளது.
அதாவது கண்காணிப்பு பொறியாளர் (Superintending Engineer) கேடரில் உள்ள பொதுப்பணித் திலகத்தை, விதிகளை எல்லாம் மீறி எப்படி Joint Chief Engineer (General) ஆக நியமித்து, அவர் தலைமையிடத்திலும் அமர வைக்கப்பட்டிருக்கிறார் என்ற என்ற கொந்தளிப்பு நீர் வளத்துறையில் உச்சத்தை தொட்டிருக்கிறது. அரசு முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை அதிகமாக மேற்கொண்டும் 2021 – 23 காலக் கட்டத்தில் ஏற்பட்ட வெள்ள சேதத்திற்கு பொதுப்பணித் திலகமே என்ற பரபரப்பு குற்றச்சாட்டையும் நீர்வளத்துறையை சேர்ந்த பெயர் குறிப்பிட விரும்பாத அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.
திருச்சியில் AEE ஆக பொதுப்பணித் திலகம் பணிபுரிந்தபோது அங்கு சட்டவிரோதமாக, தன்னிச்சையாக மணல் குவாரிகளை இயக்கியதாக அதிகாரி பொதுப்பணித் திலகம் மீது புகார் அளிக்கப்பட்டு, அந்த வழக்கு உச்சநீதிமன்ற விசாரணையில் இருக்கிறது. நிராகரிக்கப்பட்ட, WRD/2693/B2/2024 என்ற கோப்பை மீண்டும் கொண்டு வந்து தன்னை WRD துறையின் Engineer-in-Chief – ஆக நியமிக்க பொதுப்பணித் திலகம் கடுமையாக முயற்சித்து வருவதாகவும், அவருக்கு தற்போதைய நீர்வளத்துறை செயலாளர் ஜெயகாந்த ஐ.ஏ.எஸ் உதவி வருவதாகவும் மிக முக்கியமான குற்றச்சாட்டு துறை அதிகாரிகளால் முன் வைக்கப்பட்டுள்ளது.
ஆனால், இதையெல்லாம் துறையின் அமைச்சர் துரைமுருகனின் கவனத்திற்கு யாரும் கொண்டுச் செல்வதில்லை என்றும் அவரின் ஒப்புதல் இல்லாமலேயே பொதுப்பணித் திலகத்திற்கு தற்போதைய பதவியும் புதிய பதவியும் உருவாக்கப்பட்டுள்ளது என்றும் திறமையான அதிகாரிகள் கவலையில் ஆழ்ந்துள்ளதாக கூறப்படுகிறது.
மதுரை மாநகராட்சியில் முறைகேட்டில் ஈடுபட்டதாக வெளியான புகாரில் மேயரின் கணவர் மீது நடவடிக்கை எடுத்ததோடு இல்லாமல், மண்டல தலைவர்கள் அத்தனை பேரையும் தயவு தாட்சண்யமின்றி கூண்டோடு ராஜினாமா செய்ய உத்தரவிட்ட முதல்வர் ஸ்டாலின்,நீர்வளத்துறையில் நடைபெறும் முறைகேட்டை தடுத்து நிறுத்த வேண்டும் என்ற கோரிக்கை வைக்கின்றனர் நீர்வளத்துறை அதிகாரிகள்.





















