இனி கடைசி இருக்கையே கிடையாது; ப வடிவ இருக்கை முறை- பள்ளிக் கல்வித்துறை அறிவிப்பு!
இதற்கு பலத்த வரவேற்பு எழுந்ததை அடுத்து, தமிழ்நாட்டிலும் புதிய இருக்கை முறை அறிமுகம் செய்யப்பட்டுள்ளது.

தமிழ்நாட்டுப் பள்ளிகளில் கடைசி பெஞ்ச் முறையைத் தவிர்க்கும் வகையில், ப வடிவ இருக்கை முறை அறிமுகம் செய்யப்பட்டுள்ளது. முன்னதாக, கேரள மாநில பள்ளி வகுப்பறைகளில் மாணவர்கள் வரிசை வரிசையாக அமரும், பெஞ்ச் முறையில் மாற்றம் செய்யப்பட்டது.
தமிழ்நாட்டிலும் புதிய இருக்கை முறை
மலையாளத்தில் வெளியான ஸ்தானார்த்தி ஸ்ரீகுட்டன் என்ற படத்தின் தாக்கத்தால் இந்த முடிவு எடுக்கப்பட்டது. இதற்கு பலத்த வரவேற்பு எழுந்ததை அடுத்து, தமிழ்நாட்டிலும் புதிய இருக்கை முறை அறிமுகம் செய்யப்பட்டுள்ளது.
பள்ளிகளில், முன் வரிசைகளில் நன்றாகப் படிக்கும் மாணவர்களும் நடு வரிசைகளில் சுமாராகப் படிக்கும் மாணவர்களும் கடைசி வரிசைகளில் ஒழுங்காய்ப் படிக்காத மாணவர்களும் அமர்வது/ அமர வைக்கப்படுவது வழக்கமான ஒன்றாக இருக்கிறது. இதனால் மாணவர்கள் மத்தியில் கல்வியிலும் மன ரீதியிலும் ஏராளமான ஏற்றத் தாழ்வுகள் உருவாகின்றன.
பள்ளிக் கல்வித்துறை இயக்குநரகம் அறிவிப்பு
இதைத் தவிர்க்கும் வகையில், கேரள மாநில தொடக்கப் பள்ளிகளில் ப வடிவ இருக்கை முறை அறிமுகம் செய்யப்பட்டது. இதைத் தொடர்ந்து தமிழ்நாட்டிலும் இந்த முறை அறிமுகம் செய்யப்பட்டுள்ளது.
கரும்பலகை, ஆசிரியர்களை தெளிவாகப் பார்க்கும் வகையிலும் கற்றல் முறையை கற்றுக் கொள்ளும் வகையிலும் இந்த முறை அறிமுகம் செய்யப்பட்டுள்ளதாக பள்ளிக் கல்வித்துறை இயக்குநரகம் தெரிவித்துள்ளது.
- அதேபோல குழு விவாதம், வினா விடை அமர்வுகள், சக கற்றல் ஆகியவற்றை ஊக்குவிக்கும்.
- பிற மாணவர்கள் சக மாணவர்களிடம் பேசவும் பார்க்கவும் உதவும்.
- ஆசிரியர்கள் எளிதில் மாணவர்களுடன் கலந்துரையாட முடியும்.
- வகுப்பறை பங்கேற்றலை உறுதி செய்யும்.
- திறந்தவெளி, மரியாதையான சூழலை உருவாக்கி, சம வாய்ப்பை ஊக்குவிக்கும்.
இதுகுறித்து அனைத்து மாவட்ட முதன்மைக் கல்வி அலுவலர்களும் தலைமை ஆசிரியர்களிடம் பேசி, ப வடிவ இருக்கை உருவாக்கப்படுவதை உறுதிசெய்ய வேண்டும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.























