மயிலாடுதுறை சுற்றுலா மாளிகை அவசரகதியில் திறந்த அமைச்சர்! பொதுமக்கள் ஆத்திரம்
முதலமைச்சர் ஸ்டாலின் திறக்க இருந்த சுற்றுலா மாளிகையை அவசரகதியில் அமைச்சர் திறந்து வைத்த சம்பவம் அதிர்ச்சியை கிளப்பியுள்ளது.
தமிழகத்தில் வருகின்ற 2026 ஆம் ஆண்டு சட்டப்பேரவைக்கான தேர்தல் வரவுள்ள நிலையில், அதற்கான ஆயத்த பணிகளில் தமிழகத்தில் உள்ள அனைத்து கட்சிகளும் தீவிரமாக ஈடுபட்டு வருகிறது. குறிப்பாக எதிர்க்கட்சி தலைவரான எடப்பாடி பழனிச்சாமி தமிழக முழுவதும் சுற்றுப்பயணம் மேற்கொண்டு வருகிறார். அதேபோன்று தமிழ்நாடு முதலமைச்சர் மு.க. ஸ்டாலின் தமிழகத்தில் உள்ள பல்வேறு மாவட்டங்களுக்கு சென்று நலத்திட்ட உதவிகள் வழங்குதல், நிறைவற்ற அரசு திட்டங்களை நடைமுறைப்படுத்துதல், புதிய அறிவிப்புகளை வெளியிடுதல், ரோடு ஷோ போன்ற பல்வேறு நிகழ்வுகளில் ஈடுபட்டு வருகிறார். அதன் ஒரு பகுதியாக வருகின்ற ஜூலை 15 மற்றும் 16 ஆம் தேதிகளில் மயிலாடுதுறை மாவட்டத்தில் அவர் பயணம் மேற்கொள்கிறார்.
மேலும் தேர்தல் அறிவித்த பின்னர் அரசு சார்ந்த திட்டங்களை நடைமுறைப்படுத்த முடியாது என்பதால் ஆளும் அரசு தற்போது நடைபெற்று வரும் பல்வேறு திட்டப்பணிகளை விரைந்து நிறைவேற்றி அவற்றை நடைமுறை படுத்த தீவிரம் காட்டி வருகிறது. ஆகையால் இன்னும் மூன்று மாதங்களில் வரும் அக்டோபர் மாதத்திற்குள் அதிக அளவில் நடைபெற்றுவரும் கட்டுமான மணிகளை முடித்தும், பெருமளவு கட்டுமான நிறைவுற்ற கட்டிடங்களை திறத்து வருகிறது. இதன் மூலம் அந்த கல்வெட்டுகளில் தங்கள் பெயர்கள் பொறிக்கப்பட்டு அது மூலம் மக்களிடம் நற்பெயர் ஏற்பட்டு அவை வாக்கு வங்கியாக மாறும் என அரசியல் விமர்சகர்கள் தெரிவித்துள்ளார்.
அதன் ஒன்றாக மயிலாடுதுறை மாவட்டத்தில் வருகின்ற 15 மற்றும் 16 -ம் தேதிகளில் தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின் வருகை புரிந்து நலத்திட்ட உதவிகள் வழங்குதல், மயிலாடுதுறை புதிய பேருந்து நிலையம் திறப்பு, விருந்தினர் மாளிகை திறப்பு, சிலைகள் திறப்பு என பல்வேறு நிகழ்ச்சிகளை மேற்கொள்ள உள்ளார். இந்நிலையில் மயிலாடுதுறை மாவட்ட ஆட்சியர் அலுவலக வளாகத்தில் 6 கோடியை 48 லட்சத்து 39 ஆயிரம் ரூபாய் மதிப்பீட்டில் 968 ச.மீ. பரப்பளவில், தரைதளத்தில் படுக்கை அறை (8 எண்ணிக்கை) கழிப்பறைகள், சமையலறை, சேமிப்பு அறை, மின்சாதன அறை போன்ற வசதிகளுடன் கட்டப்பட்டுள்ள அரசு சுற்றுலா மாளிகையை தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின் ஜூலை 16 -ம் தேதி திறந்து வைக்கப்படுவதாக ஏற்பாடுகள் நடைபெற்ற நிலையில் பிற்படுத்தப்பட்டோர் நலத்துறை அமைச்சர் சிவ.வீ.மெய்யநாதன் அவசர கதியில் இன்று குத்துவிளக்கேற்றி திறந்து வைத்தார்.
இதுகுறித்து சமூக ஆர்வலர்கள் தரப்பில் கூறுகையில், மயிலாடுதுறை புதிய பேருந்து நிலையம் இன்னும் முழுமையாக பணிகள் நிறைவடையவில்லை, ஏன் அதற்கான சாலைகள் கூட இன்னும் பல இடங்களில் சரியாக இல்லை, அதேவேளையில் முதல்வர் திறப்பதாக இருந்த இந்த அரசு சுற்றுலா மாளிகை இன்று முதல்வர் இங்கு தங்குவதாக வந்த தகவலை அடுத்து அவசரகதியில் திறந்துள்ளதாவும் கூறப்படுகிறது என்றனர்.





















