TVK Vijay: விஜய்யின் மாஸ் பிளான்; பவன் கல்யாண் பாணியில் போராட்டம் - அரசியலில் திருப்புமுனையை ஏற்படுத்துமா.?
தவெக தலைவர் விஜய், ஆந்திராவில் பவன் கல்யாண் செய்தது போல், காவல்துறை மற்றும் அரசுக்கு எதிராக போராட்டத்தில் குதித்துள்ளார். இவருக்கும் அதே போன்ற ஒரு திருப்புமுனையை இந்த போராட்டம் கொடுக்குமா.?

மடப்புரம் காவலாளி அஜித்குமார் போலீசாரால் தாக்கப்பட்டு கொலை செய்யப்பட்டதை கண்டித்து, காவல்துறை மற்றும் அரசுக்கு எதிராக விஜய் இன்று போராட்டத்தில் ஈடுபட்டுள்ளார். ஆந்திராவில், இதேபோல் காவல்துறை மற்றும் அரசை எதிர்த்துப் போராடிய பவன் கல்யாணிற்கு, அரசியலில் பெரும் திருப்புமுனை ஏற்பட்டது. அதே போல் விஜய்கு நடக்குமா.? அலசுவோம்.
விஜய் பேரணி / போராட்டம்
சிவகங்கை மாவட்டம் திருப்புவனம் அருகே உள்ள மடப்புரத்தில், கோவில் காவலாளியாக பணியாற்றிய அஜித்குமார், தனிப்படை போலீசாரால் விசாரணை என்ற பெயரில் அடித்துக் கொல்லப்பட்டார். இந்த விவகாரம் விஸ்வரூபமெடுத்த நிலையில், பல்வேறு நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டுள்ளன.
இந்த நிலையில், இது தொடர்பாக அரசுக்கு கண்டனம் தெரிவிக்கும் வகையில் தவெக சார்பில் போராட்டம் நடத்தப்படும் என விஜய் அறிவித்திருந்தார். அதன்படி, இன்று சென்னை சிவானந்தா சாலையில், தவெக சார்பில் அதன் தலைவர் விஜய் தலைமையில் போராட்டம் நடைபெறுகிறது.
காவல்துறை விதித்த 16 கட்டுப்பாடுகளுக்கு மத்தியில் தற்போது விஜய் தலைமையிலான பேரயி நடைபெற்று வருகிறது. இந்த போரணியில் ஆயிரக்கணக்கானோர் பங்கேற்றுள்ளனர்.

முன்னதாக, இதேபோன்று லாக் அப் மரணங்கள் காரணமாக பாதிக்கப்பட்ட பல்வேறு குடும்பத்தினரை சந்தித்து விஜய் நிதி உதவி அளித்த நிலையில், அக்குடும்பத்தினரும் இன்றைய பேரணியில் பங்கேற்றுள்ளனர்.
சென்னையில் உள்ளவர்கள் மட்டுமே பங்கேற் வேண்டும் என்று நிபந்தனை விதிக்கப்பட்டிருந்த நிலையில், வெளியூர்களிலிருந்து வந்த தவெகவினரை காவல்துறையினர் தடுத்து நிறுத்தி, கைதும் செய்துள்ளனர்.
பவன் கல்யாண் பாணியில் விஜய்
ஆந்திராவில் மட்டுமல்லாமல், தமிழ்நாட்டு மக்களுக்கும் நன்கு பரிட்சையமானவர் நடிகரும், அரசியல்வாதியுமான பவன் கல்யாண். திடீரென அரசியல் பிரவேசம் செய்த இவரது அரசியல் வாழ்க்கையை திருப்பிப் போட்டது ஆந்திராவில் இவர் நடத்திய போராட்டம்.
அதாவது, கடந்த 2023-ல், நந்தியாலா பகுதியில், அதிகாலையில் தெலுங்கு தேசம் கட்சித் தலைவர் சந்திரபாபு நாயுடு காவல்துறையினரால் கைது செய்யப்பட்டார். அதைத் தொடர்ந்து, அவருக்கு ஆதரவு தெரிவிக்கும் வகையில், பவன் கல்யாண் போராட்டத்தில் குதித்தார்.
தனது ஜனசேனா கட்சித் தொண்டர்களுடன், விஜயவாடா நோக்கி சென்று போராட்டத்தில் ஈடுபட்டார் பவன் கல்யாண். இதற்காக, சாலை மார்க்கமாக அவர் செல்ல முயன்றபோது, அவரது வாகன அணிவகுப்பு 2 முறை தடுத்து நிறுத்தப்பட்டது. பேரயின்போது, ஜீப் மீது அவர் அமர்ந்து சென்றது பெரும் கவனத்தை ஈர்த்தது.
அப்போது அவர் தடுத்து நிறுத்தப்பட்டதால், தனது வாகனத்திலிருந்து இறங்கி, மங்களகிரி நோக்கி நடந்தே சென்றார். அதன் பின்னும் விஜயவாடா செல்ல முடியாமல் அவர் தடுக்கப்பட்டதால், அனுமாஞ்சிபள்ளியில் சாலையில் படுத்து போராட்டத்தில் ஈடுபட்டார் பவன் கல்யாண்.
ஆந்திர அரசையும், காவல்துறையையும் எதிர்த்த அவரது இந்த போராட்டம் பெரிய அளவில் கவனம் பெற்றது. அதோடு மட்டுமல்லாமல், அவரது அரசியல் வாழ்க்கையையும் புரட்டிப் போட்டது. இந்த போராட்டம் தான், சந்திரபாபு நாயுடுவோடு அவர் கூட்டணி அமைப்பதற்கும், அந்த கூட்டணி வெற்றி வாகை சூடவும் காரணமாக இருந்தது.
இந்த நிலையில், தவெக தலைவர் விஜய்யும், பவன் கல்யாண் பாணியில், காவல்துறை மற்றும் அரசை எதிர்த்து போராட்டத்தில் குதித்துள்ளார்.
பவன் கல்யாணின் அரசியல் வாழ்க்கையை திருப்பிப் போட்ட அந்த போராட்டம் போல், விஜய்யின் அரசியல் வாழ்க்கையை இந்த போராட்டம் புரட்டிப் போடுமா.? பொறுத்திருந்து பார்க்கலாம்.





















