Gita gopinath: கொல்கத்தா டூ சர்வதேச நிதியம்... யார் இந்த கீதா கோபிநாத்?
நிதியத்தின் முதன்மைப் பொருளாதார வல்லுநராக இவர் 2018ம் ஆண்டு முதல் பணியாற்றி வந்த நிலையில் தற்போது அதன் இயக்குநராக நியமிக்கப்பட்டுள்ளார்.
இண்டர்நேஷனல் மானிட்டரி ஃபண்ட் என்னும் சர்வதேச நிதியத்தின் துணை நிர்வாக இயக்குனராக இந்திய வம்சாவளியைச் சேர்ந்த கீதா கோபிநாத் என்பவர் நியமிக்கப்பட்டுள்ளார். சர்வதேச நிறுவனங்களில் இந்திய வம்சாவளியைச் சேர்ந்தவர்கள் உயர் பொறுப்புகளில் அண்மைக் காலத்தில் தொடர்ச்சியாக நியமிக்கப்படுவதன் வரிசையில் தற்போது ஒரு பெண் அது போன்ற ஒரு பொறுப்பில் நியமிக்கப்பட்டுள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது. நிதியத்தின் முதன்மைப் பொருளாதார வல்லுநராக இவர் 2018ம் ஆண்டு முதல் பணியாற்றி வந்த நிலையில் தற்போது அதன் இயக்குநராக நியமிக்கப்பட்டுள்ளார். 2022 ஜனவரியில் இவர் பதவியேற்க உள்ளார். இந்தியாவில் பிறந்து அமெரிக்காவில் வளர்ந்தவர் கீதா கோபிநாத். ஹார்வர்ட் பல்கலைக்கழகத்தில் சர்வதேசப் பொருளாதார ஆய்வுப் பேராசிரியராகவும் பணியாற்றி வருகிறார்.
View this post on Instagram
இந்தியாவின் கொல்கத்தாவில் ஒரு மலையாளக் குடும்பத்தில் பிறந்தவர் கீதா. மறைந்த கேரள கம்யூனிஸ்ட் தலைவர் ஏ.கே.கோபாலனின் உறவினர்.மைசூரு நிர்மலா கான்வெண்ட்டில் பள்ளிப்படிப்பு, டெல்லி பல்கலைக்கழகத்தில் இளங்கலை மற்றும் முதுகலை பொருளாதாரம், வாஷிங்டன் பல்கலைக்கழகத்தில் முதுகலைப்படிப்பு மற்றும் பிரின்ஸ்டன் பல்கலைக்கழகத்தில் முனைவர் பட்டம் என இவரது படிப்புப் பட்டியல் நீள்கிறது. புகழ்பெற்ற சதுரங்க கிராண்ட் மாஸ்டர் கென்னத் ராகாஃப்பின் மாணவர். பாஸ்டன் ஃபெடரல் வங்கி மற்றும் நியூயார்க் ஃபெடரல் வங்கியில் பொருளாதார ஆலோசகராகப் பணியாற்றினார். இந்திய அளவில்
கேரள அரசின் பொருளாதார ஆலோசகராகவும் செயல்படுகிறார்.
கோபிநாத்தின் கணவர் இக்பால் சிங் தலிவால் தமிழ்நாட்டின் திருநெல்வேலி மாவட்டக் கலெக்டராகப் பணியாற்றியவர். பின்னர் புகழ்பெற்ற எம்.ஐ.டி.ன் பொருளாதாரத்துறையில் சர்வதேச நிர்வாக இயக்குநராகப் பணியாற்றி வருகிறார்.
கீதா கோபிநாத் இந்திய அரசின் டிமானிடைசேஷன் கொள்கையைக் கடுமையாக எதிர்த்தவர் என்பது குறிப்பிடத்தக்கது.