குரூப் 4 வினாத்தாள் கசிவு சர்ச்சை ஏன்? குரூப் 2 அறிவிப்பு எப்போது? டிஎன்பிஎஸ்சி தலைவர் பேட்டி!
போட்டித் தேர்வுக்கான கேள்விகளைப் பொறுத்தவரை ரகசியமாக நிபுணர் குழு தேர்வு செய்கிறது. அரசியல், சர்ச்சைக்குரிய கேள்விகளைக் கேட்கக் கூடாது என்று தெளிவாக அறிவுறுத்தி இருக்கிறோம்.

தமிழ்நாடு முழுவதும் இன்று குரூப் 4 தேர்வு நடைபெற்று வரும் நிலையில், டிஎன்பிஎஸ்சி தலைவர் பிரபாகர் சென்னையில் செய்தியாளர்களைச் சந்தித்துள்ளார். அப்போது அவர் கூறியதாவது:
வீடியோ கேமரா மூலம் பதிவு
வினாத்தாள்களை குறிப்பிட்ட மையப் பகுதி ஒன்றில் அச்சடித்து, மாவட்டத் தலைநகரங்களுக்கு ரகசியமாகக் கொண்டு செல்கிறோம். தேர்தல் நடைமுறை போலவே இதுவும் நடைபெறுகிறது. மத்திய இடத்தில் இருந்து மாவட்ட கருவூலங்களுக்கு, பாதுகாப்பான வாகனங்களில் சீல் வைத்து, வீடியோ கேமரா மூலம் பதிவு செய்து வினாத் தாள்களைக் கொண்டு செல்கிறோம். கொண்டு சென்று, ஆட்சித் தலைவரிடம் ஒப்படைக்கிறோம்.
மாவட்ட கருவூலங்களில் இருந்து, தாலுகா கருவூலங்களுக்கு அவை அனுப்பப்படும். அவற்றில் இருந்து உள்ளூர் வாகனங்கள் மூலம் தேர்வு அறைக்குக் கொண்டு செல்லப்பட்டே அவை திறக்கப்படும். காவல்துறை, அதிகாரிகள் கண்காணிப்பைக் கொண்டே இவை நடத்தப்படுகிறது.
மதுரை சர்ச்சைக்குக் காரணம் என்ன?
மதுரையில் பேப்பரை ஒட்டி, சம்பந்தப்பட்ட வாகனம் சென்றதால், அது சர்ச்சையாகி விட்டது. மற்ற இடங்களில் எந்தப் பிரச்சினையும் இல்லை.
போட்டித் தேர்வுக்கான கேள்விகளைப் பொறுத்தவரை ரகசியமாக நிபுணர் குழு தேர்வு செய்கிறது. அரசியல், சர்ச்சைக்குரிய கேள்விகளைக் கேட்கக் கூடாது என்று தெளிவாக அறிவுறுத்தி இருக்கிறோம். இதுகுறித்து மீண்டும் நிபுணர் குழுவுக்கு வலியுறுத்தி உள்ளோம். தற்கால வரலாறு குறித்து கேள்விகள் கேட்கப்படும்போது, அதை நாம் தவிர்க்க முடியாது.
குரூப் 2, 2ஏ தேர்வுகளுக்கு அறிவிக்கை எப்போது?
வருடாந்திர அட்டவணையின்படியே, டிஎன்பிஎஸ்சி செயல்பட்டு வருகிறது. கடந்த நவம்பரில் ஆண்டு முழுமைக்குமான பட்டியல் வெளியிடப்பட்டுள்ளது. குரூப் 2, 2ஏ தேர்வுகளுக்கு, ஜூலை 15ஆம் தேதி அறிவிக்கை வெளியிடப்பட உள்ளது’’.
இவ்வாறு டிஎன்பிஎஸ்சி தலைவர் பிரபாகர் ஐஏஎஸ் தெரிவித்துள்ளார்.
3 மாதங்களில் குரூப் 4 தேர்வு முடிவுகள்
முன்னதாக, ’’டிஎன்பிஎஸ்சி குரூப் 4 தேர்வு முடிவுகளை 3 மாதங்களில் வெளியிடுவோம் என்று கருதுகிறோம். முன்பாகவே வெளியாகவும் வாய்ப்பு உள்ளது.
கடந்த ஆண்டு 10,701 பேர் அரசுப் பணிகளுக்குத் தேர்வு செய்யப்பட்ட நிலையில், இந்த ஆண்டு ஜூன் மாதம் வரை 11,027 பேர் தேர்வு செய்யப்பட்டுள்ளனர். இன்னும் 4,300 பேர் அடுத்த 2 மாதங்களில் தேர்வு செய்யப்பட உள்ளனர். ஒட்டுமொத்தமாக 10 ஆயிரம் பேர் வரை தேர்வு செய்யப்படலாம்’’ என்றும் அவர் கூறி இருந்தது குறிப்பிடத்தக்கது.






















