விஜய்தான் வேண்டும்.. அடம்பிடிக்கும் அமித்ஷா.. என்ன செய்யப்போகிறார் எடப்பாடியார்?
திமுக-வை வீழ்த்த அதிமுக கூட்டணியில் விஜய் இடம்பெற வேண்டும் என்று எடப்பாடி பழனிசாமிக்கு அமித்ஷா தரப்பினர் அழுத்தம் அளித்து வருவதாக கூறப்படுகிறது.

இந்தியாவே உற்றுநோக்கும் அரசியல் களமாக தமிழ்நாடு நாளுக்கு நாள் மாறி வருகிறது. தமிழ்நாட்டில் அடுத்தாண்டு நடக்கும் சட்டமன்ற தேர்தலில் ஆட்சியை தக்க வைக்க திமுக-வும், மீண்டும் ஆட்சியை கைப்பற்ற அதிமுக கூட்டணியும் களத்தில் இறங்கியுள்ளன. திமுக, அதிமுக ஆகிய கட்சிகளுடன் இந்த தேர்தல் களத்தில் விஜய்யின் தமிழக வெற்றிக் கழகமும் இணைந்துள்ளது.
வலு இல்லாத அதிமுக கூட்டணி:
திமுக கூட்டணியில் காங்கிரஸ், மதிமுக, கம்யூனிஸ்ட், மார்க்சிஸ்ட், விசிக என வலுவான கூட்டணிகள் உள்ளது. எடப்பாடி பழனிசாமி தலைமையிலான அதிமுக கூட்டணியில் பாஜக, பாமக ஆகிய கட்சிகளுடன் த.மா.க கட்சிகள் மட்டுமே உள்ளது. திமுக போன்ற வலுவான கூட்டணி உள்ள கட்சியை வீழ்த்த வேண்டுமென்றால் வலுவான கூட்டணி அமைத்தால் மட்டுமே சாத்தியம் ஆகும்.
அதிமுக கூட்டணியில் பா.ஜ.க., பாமக இருந்தாலும் பாமக-வில் ராமதாஸ் - அன்புமணி இடையே நடக்கும் சண்டையால் முழு பாமகவாக கூட்டணியில் இடம்பெறுவார்ளா? என்பது பெரும் சந்தேகமாக உள்ளது.
விஜய்தான் அஸ்திரம்:
இந்த நிலையில், விஜய்யை கூட்டணிக்குள் கொண்டு வர வேண்டும் என்று அதிமுக-விற்கு பா.ஜ.க. தலைமை வலியுறுத்தி வருவதாக கூறப்படுகிறது. அதன் எதிரொலியாகவே அமித்ஷா தமிழ்நாட்டில் அனைத்து கட்சிகளையும் கூட்டணிக்குள் கொண்டு வருவோம் என்று பேட்டி அளித்துள்ளார்.
கோடிக்கணக்கான ரசிகர்களை கொண்ட விஜய், அடுத்தாண்டு நடக்கும் தேர்தலில் மிகப்பெரிய தாக்கத்தை ஏற்படுத்துவார் என்று எதிர்பார்க்கப்படுகிறது. குறிப்பாக, முதல் தலைமுறை வாக்காளர்கள் பெருவாரியாக விஜய்க்கு வாக்களிப்பார்கள் என்பதால் அவர் பெறும் வாக்குகள் வெற்றி, தோல்வியை தீர்மானிக்கும் சக்தியாக உருவெடுக்கும் என்று கணிக்கப்பட்டுள்ளது.
சிக்குவாரா விஜய்?
இதனால், விஜய்யின் தவெக தங்கள் பக்கம் இருக்க வேண்டும் அதிமுக-விற்கு பா.ஜ.க. அறிவுறுத்தியதாக தகவல் வெளியாகியுள்ளது. ஆனால், கட்சி தொடங்கியது முதலே திமுக-வை அரசியல் எதிரி என்றும், பா.ஜ.க.-வை கொள்கை எதிரி என்றும் விஜய் விமர்சித்து வருகிறார். இதனால், பாஜக இருக்கும் ஒரே காரணத்தினாலே விஜய் அதிமுக பக்கம் செல்வதற்கு துளியளவு கூட சாத்தியம் இல்லை என்று கணிக்கப்பட்டுள்ளது.
இதனால், ஒரு பக்கம் பாஜக-வை கழட்டிவிட்டு விஜய்யை கூட்டணிக்குள் கொண்டு வர எடப்பாடியாருக்கு சில மூத்த நிர்வாகிகள் வலியுறுத்தி வருகின்றனர். மேலும், தமிழ்நாட்டில் வெற்றி பெற்றால் கூட்டணி ஆட்சிதான் என்று அமித்ஷா பேசி வருவதும் அதிமுக-வினர் மத்தியில் அதிருப்தியை உண்டாக்கியுள்ளது.
என்ன செய்யப்போகிறார் எடப்பாடி?
அமித்ஷா ஒரு பக்கம் விஜய்யை கொண்டு வர வியூகம் வகுத்து வரும் நிலையில், கட்சியினர் சிலர் பா.ஜ.க.வை கழட்டிவிட வலியுறுத்தி வரும் நிலையில் தேர்தல் சுற்றுப்பயணத்தை தொடங்கியுள்ள எடப்பாடி பழனிசாமி என்ன செய்யப்போகிறார்? என்பதை பொறுத்திருந்து பார்க்கலாம்.





















