முடியாது.. முடியாது .. அதிமுக தனித்துதான் ஆட்சி.. அமித்ஷா முடிவுக்கு நோ சொன்ன எடப்பாடி!
தமிழ்நாட்டில் வெற்றி பெற்றால் கூட்டணி ஆட்சி என்று அமித்ஷா கூறியிருந்த நிலையில், அதிமுக தனித்து ஆட்சி என்று எடப்பாடி பழனிசாமி திட்டவட்டமாக தெரிவித்துள்ளார்.

சட்டமன்ற தேர்தல் அடுத்தாண்டு நடக்க உள்ள நிலையில், தமிழ்நாட்டில் அதற்கான தீவிர பணிகளில் அரசியல் கட்சிகள் பணியாற்றி வருகின்றனர். ஆளுங்கட்சி என்ற அந்தஸ்து, வலுவான கூட்டணியுடன் மீண்டும் ஆட்சிக்கட்டிலில் அமரத்துடிக்கும் திமுக-வை வீழ்த்தி, ஆட்சியை கைப்பற்ற அதிமுக வியூகம் வகுத்து வருகிறது.
கூட்டணி ஆட்சி என்ற அமித்ஷா:
அதிமுக கூட்டணியில் பா.ஜ.க., பாமக இடம்பிடித்துள்ள நிலையில், கூட்டணிக்குள் பாஜக வந்தது முதலே வெற்றி பெற்றால் தனித்து ஆட்சியா? கூட்டணி ஆட்சியா? என்ற கேள்வி அதிமுக-வை சுழன்றடித்து வருகிறது. டெல்லியில் இருந்து கொண்டு அதிமுக கூட்டணி விவகாரம் குறித்து பல கருத்துக்களை அமித்ஷா கூறி வரும் நிலையில், தமிழ்நாட்டில் வெற்றி பெற்றால் கூட்டணி ஆட்சியே என்று அவர் கூறியிருப்பது அதிமுக-வினர் மத்தியில் அதிருப்தியை உண்டாக்கியுள்ளது.
அமித்ஷா முடிவுக்கு நோ சொன்ன எடப்பாடி:
இந்த நிலையில், இந்த விவகாரம் தொடர்பாக நிருபர்களுக்கு பேட்டி அளித்த எடப்பாடி பழனிசாமி, தமிழ்நாட்டில் அதிமுக வெற்றி பெற்று தனிப்பெரும்பான்மையுடன் ஆட்சியமைக்கும் என்று கூறினார். இதன்மூலம், அமித்ஷாவின் கூட்டணி ஆட்சி என்ற கருத்தை முற்றிலும் நிராகரித்துள்ளார் எடப்பாடி பழனிசாமி.
ஜெயலலிதாவின் மறைவிற்கு பிறகு சசிகலா, தினகரன், ஓ.பன்னீர்செல்வம் ஆகியோருடனான மோதலுக்கு பிறகு அதிமுக-வை கைப்பற்றிய எடப்பாடி பழனிசாமிக்கு இந்த தேர்தல் மிக மிக முக்கியமானது ஆகும். இந்த தேர்தலில் வெற்றி பெற்றாக வேண்டிய கட்டாயத்தில் களமிறங்கியுள்ள எடப்பாடி பழனிசாமிக்கு, கூட்டணியில் உள்ள பாஜக அடிக்கடி குடைச்சலைத் தந்து வருகிறது.
எடப்பாடி பழனிசாமிக்கு தலைவலி:
பாஜக-வுடன் கூட்டணி வைத்தது அதிமுகவின் முக்கிய தலைவர்கள், நிர்வாகிகள், தொண்டர்கள் என பலருக்கும் பிடிக்காத நிலையில், தொடர்ந்து பாஜக சர்ச்சைக்குரிய கருத்துக்களைத் தெரிவித்து வருவது எடப்பாடி பழனிசாமிக்கு பெரும் தலைவலியை உண்டாக்கி வருகிறது.
மேலும், கட்சி தாெடங்கியது முதல் அதிமுக மீது பெரியளவு விமர்சனத்தை முன்வைக்காத விஜய்யை கூட்டணிக்குள் கொண்டு வர வேண்டும் என்றும், பாஜக-வை கழட்டிவிட வேண்டும் என்றும் எடப்பாடி பழனிசாமிக்கு பலரும் வலியுறுத்தி வருகின்றனர்.
தொடர்ந்து சர்ச்சை:
முன்னாள் அதிமுககாரரான தமிழக பாஜக-வின் தலைவர் நயினார் நாகேந்திரன் எடப்பாடி பழனிசாமியுடன் சுமூக உறவை மேற்கொண்டிருந்தாலும், அந்த கட்சியின் பிற தலைவர்கள், டெல்லி தலைமை அதிமுக-வுடனான கூட்டணியில் சர்ச்சையை ஏற்படுத்தும் வகையில் தொடர்ந்து பேசி வருவது அதிமுக-வின் மற்ற தலைவர்களுக்கு அதிருப்தியை ஏற்படுத்தியுள்ளது.
தமிழ்நாட்டில் திராவிட கட்சிகள் ஒருபோதும் தாங்கள் ஆட்சிக்கட்டிலில் அமர்ந்தபோது கூட்டணி கட்சியினருடன் ஆட்சியை பங்குபோட்டதே இல்லை. வட இந்திய பாணியை அதிமுக கூட்டணியால் அமல்படுத்த துடிக்கும் அமித்ஷாவிற்கு எடப்பாடி பழனிசாமி தனது பேட்டியால் பதிலடி அளித்துள்ளார். இதனால், கூட்டணியில் புகைச்சல் உண்டாகுமா? அல்லது சமாதனாம் ஆகுமா? என்பதை பொறுத்திருந்து பார்க்கலாம்.




















