Compact Suvs: காம்பேக்ட் எஸ்யுவிக்களுக்கு இனி பஞ்சமில்லை - மாருதி Vs டாடா, பட்ஜெட்டா? வசதிகளா? கார் லிஸ்ட்
Upcoming Compact Suvs: இந்திய ஆட்டோமொபைல் சந்தையில் அடுத்தடுத்து அறிமுகமாக உள்ள, 5 காம்பேக்ட் எஸ்யுவி கார் மாடல்கள் குறித்து இந்த தொகுப்பில் அறியலாம்.

Upcoming Compact Suvs: இந்திய ஆட்டோமொபைல் சந்தையில் அடுத்தடுத்து அறிமுகமாக உள்ள, 5 காம்பேக்ட் எஸ்யுவி கார் மாடல்களின் விவரங்கள் கீழே பட்டியலிடப்பட்டுள்ளன.
புதிய காம்பேக்ட் எஸ்யுவிக்கள்:
இந்திய ஆட்டோமொபைல் சந்தையில் காம்பேக்ட் எஸ்யுவி பிரிவில் தேவை அதிகரிக்க அதிகரிக்க, உற்பத்தி நிறுவனங்களும் புதுப்புது மாடல்களை அடுத்தடுத்து சந்தைப்படுத்தி வருகின்றன. இதனால் அந்த பிரிவு அதிவேகமாக விரிவடைந்து வருகிறது. இந்நிலையில் தான், நாட்டின் மிகப்பெரிய ஆட்டோமொபைல் உற்பத்தி நிறுவனங்களான, டாடா மற்றும் மாருதி சுசூகியும் பல புதிய காம்பேக்ட்ஸ் எஸ்யுவி கார்களை அறிமுகப்படுத்த முடிவு செய்துள்ளன. குறைந்த விலையில் காரை சொந்தமாக்க விரும்புவர்களுக்கு மாருதி நல்ல தேர்வுகளையும், தொழில்நுட்ப அம்சங்கள் மற்றும் பாதுகாப்பு வசதிகள் நிறைந்த காரை வாங்க விரும்புவோருக்கு டாடா நல்ல தேர்வாக இருக்கும். அந்த வகையில் குறிப்பிட்ட நிறுவனங்களிடமிருந்து விரைவில் வெளியாக உள்ள கார் மாடல்களின் விவரங்கள் கீழே பட்டியலிடப்பட்டுள்ளன.
1. டாடா ஸ்கார்லெட்
டாடா நிறுவனம் தனது முற்றிலும் புதிய காம்பேக்ட் எஸ்யுவி கார் மாடலில் பணியாற்றி வருவதாகவும், அந்த காருக்கு ஸ்கார்லெட் எனும் கோட்நேம் வழங்கப்பட்டுள்ளதாகவும் தகவல்கள் வெளியாகியுள்ளன. நெக்ஸானை தொடர்ந்து நிறுவனம் சார்பில் வெளியாகும் இரண்டாவது காம்பேக்ட் எஸ்யுவி ஆக ஸ்கார்லெட் இருக்கும் என்றும், அதேநேரம் விரைவில் அறிமுகமாக உள்ள சியாராவை போன்று பாக்ஸி தோற்றத்தை பெறக்கூடும் எனவும் கூறப்படுகிறது. மோனோகோக் சேஸிலில் உற்பத்தி செய்யப்படும் ஸ்கார்லெட் கார் மாடல், ஒரே நேரத்தில் இன்ஜின் மற்றும் மின்சார எடிஷனில் அறிமுகப்படுத்தப்பட வாய்ப்புள்ளது. இன்ஜின் மாடல் நெக்ஸானை பின்தொடரலாம் என கூறப்படும் நிலையில், மின்சார எடிஷனானது டூயல் மோட்டார் செட்டப்பில் ஆல் வீல் ட்ரைவ் அம்சத்தை கொண்டிருக்கலாம்.
மினி சியாரா என குறிப்பிடப்படும் இந்த காரின் இன்ஜின் எடிஷனின் விலை ரூ.8 லட்சத்தில் தொடங்கி ரூ.15 லட்சம் வரை நீட்டிக்கப்படலாம். மின்சார எடிஷனின் விலை ரூ.13 லட்சத்தில் தொடங்கிரூ.17 லட்சம் வரை நீட்டிக்கப்படலாம் என எதிர்பார்க்கப்படுகிறது. அதேநேரம், கார் எப்போது சந்தைப்படுத்தப்படும் என்ற தகவலும் தற்போது வரை இல்லை.
2. மாருதி Y43
உள்நாட்டு சந்தையில் டாடா பஞ்ச் மற்றும் ஹுண்டாய் எக்ஸ்டெர் போன்ற கார் மாடல்களை எதிர்கொள்வதற்கு ஏதுவாக, நாட்டின் மிகப்பெரிய கார் உற்பத்தி நிறுவனமான மாருதி தனது முற்றிலும் புதிய எஸ்யுவியை தயார்படுத்தி வருகிறது. நிறுவனத்தின் போர்ட்ஃபோலியோவில் ஃப்ராங்க்ஸ் கார் மாடலுக்கு கீழே நிலைநிறுத்தப்பட உள்ளது. நெக்ஸா விற்பனை நிலையங்களில் விற்பனைக்கு கொண்டுவரப்பட உள்ளது. Y43 என்ற பெயரை பெறும் என எதிர்பார்க்கப்படும் புதிய காரானது, தற்போது சந்தையில் உள்ள மாருதியின் இக்னிஸிற்கு மாற்றாக இருக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது. இதில் 1.2 லிட்டர் 3 சிலிண்டர் பெட்ரோல் இன்ஜின் ஸ்டேண்டர்டாக வழங்கப்படலாம் என தகவல்கள் தெரிவிக்கின்றன. இதில் ஹைப்ரிட் வேரியண்டும் வழங்கப்படலாம் என கூறப்பட்டாலும், அதிகாரப்பூர்வ தகவல் ஏதும் இல்லை. 2026-27 நிதியாண்டில் சந்தைப்படுத்தப்படலாம் என எதிர்பார்க்கப்படும் இந்த மைக்ரோ எஸ்யுவியின் விலை ரூ.6 லட்சத்தில் இருந்து தொடங்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.
3. மாருதி ஃப்ராங்க்ஸ் ஹைப்ரிட்
ஃப்ராங்க்ஸ் கார் மாடலின் ஃபேஸ்லிஃப்ட் எடிஷனானது மாருதியின் சுயமாக உருவாக்கப்பட்ட, வலுவான ஹைப்ரிட் அமைப்பை இந்திய சந்தையில் அறிமுகப்படுத்த உள்ளது. இந்த சீரிஸ் ஹைப்ரிட் சிஸ்டமானது, 1.2 லிட்டர் 3 சிலிண்டர் Z12E பெட்ரோல் இன்ஜின் மற்றும் எலெக்ட்ரிக் மோட்டாரின் கலவையில் லிட்டருக்கு 35 கிலோ மீட்டர் மைலேஜ் வழங்கும் என எதிர்பார்க்கப்படுகிறது. இதன் ஸ்டைலிங் மற்றும் தொழில்நுட்ப அம்சங்கள் தற்போதைய மாடலில் இருந்து அப்படியே தொடரும் என எதிர்பார்க்கப்படுகிறது. கூடுதலாக ஹைப்ரிட் பேட்ஜ் மட்டும் வழங்கப்படலாம். சோதனை ஓட்டத்தின் போது எடுக்கப்பட்ட புகைப்படங்களில் சென்சார்கள், ரேடார் மற்றும் கேமராக்கள் இருந்ததான் மூலம், புதிய ஃப்ராங்க்ஸின் டாப் வேரியண்ட்களில் ADAS தொழில்நுட்பம் இடம்பெறலாம் என நம்பப்படுகிறது.
தற்போதைய ஃப்ராங்க்ஸ் மாடலின் விலை ரூ.7.51 லட்சத்திலிருந்து ரூ.13.04 லட்சம் (எக்ஸ் - ஷோரூம்) வரை நீள்கிறது. புதிய மாடலின் விலை இதிலிருந்து ரூ.2 முதல் ரூ.2.5 லட்சம் வரை உயரலாம் என எதிர்பார்க்கப்படுகிறது. இந்த கார் அடுத்த ஆண்டு இந்திய சந்தையில் அறிமுகப்படுத்தப்படலாம்.
4. டாடா பஞ்ச் ஃபேஸ்லிஃப்ட்
டாடா பஞ்சின் ஃபேஸ்லிப்ட் எடிஷனானது ஒருவழியாக வெளியீட்டு தேதியை பெற்றுள்ளது. அதன்படி, உள்நாட்டு சந்தையில் வரும் அக்டோபர் மாதம் இந்த கார் விற்பனைக்கு கொண்டு வரப்பட உள்ளது. தோற்ற அடிப்படையில் இது பல அப்டேட்களை தற்போது விற்பனையில் உள்ள மின்சார பஞ்சிலிருந்து கடனாக பெற உள்ளது. உட்புற கேபினிலும் 2 ஸ்போக் ஸ்டியரிங் வீல், 10.25 இன்ச் டச்ஸ்க்ரீன் இன்ஃபோடெயின்மெண்ட் சிஸ்டம், முற்றிலும் டிஜிட்டல் இன்ஸ்ட்ரூமெண்ட் கிளஸ்டர் என பல மேம்படுத்தப்பட்ட அம்சங்களையும் பெற உள்ளது. மெக்கானிக்கல் அடிப்படையில் இன்ஜினில் எந்த மாற்றமும் இன்றி, அதே நேட்சுரலி ஆஸ்பிரேடட் 1.2 லிட்டர் பெட்ரோல் இன்ஜின் தொடர உள்ளது. இதன் விலை சற்றே உயர்ந்து ரூ.6.5 லட்சத்திலிருந்து தொடங்கி ரூ.12 லட்சம் வரை உயரலாம் என எதிர்பார்க்கப்படுகிறது.
5. புதிய தலைமுறை டாடா நெக்ஸான்:
டாடா நிறுவனத்தின் அடுத்த தலைமுறை நெக்ஸான் கார் மாடலனாது 2026ம் ஆண்டு இறுதி அல்லது 2027ம் ஆண்டின் தொடக்கத்தில் சந்தைப்படுத்தப்படலாம் என எதிர்பார்க்கப்படுகிறர்து. கருட் என்ற கோட்நேமை கொண்டுள்ள புதிய காரானது, தற்போதைய எடிஷன் உற்பத்தி செய்யப்படும் X1 பிளாட்ஃபார்மாமில் மிகபெரிய அளவில் திருத்தம் செய்யப்பட்டு உற்பத்தி செய்யப்பட உள்ளது. வெளிப்புற மாற்றத்தில் தீவிரமான மாற்றங்களை பெறுவதோடு, உட்புறத்திலும் ஒட்டுமொத்தமாக அப்கிரேட்களை பெறும் என எதிர்பார்க்கப்படுகிறது. இன்ஜின் அடிப்படையில் தற்போதுள்ள பெட்ரோல் மற்றும் டீசல் ஆப்ஷன்கள் மட்டுமின்றி, சிஎன்ஜி வேரியண்டும் அப்படியே தொடரும் என எதிர்பார்க்கப்படுகிறது. இதன் விலை ரூ.10 லட்சம் முதல் ரூ.20 லட்சம் வரை நிர்ணயிக்கப்படலாம் என கூறப்படுகிறது.






















