(Source: ECI/ABP News/ABP Majha)
களக்காடு முண்டந்துறை புலிகள் காப்பக வனப்பகுதிக்குள் அரிக்கொம்பன் - எதிர்ப்பு தெரிவித்த போராட்டக்காரர்கள் கைது
சுமார் நான்கு மணிநேர பயணத்தை தொடர்ந்து அந்த யானை நேற்று இரவு வனப்பகுதியில் விடப்படும் என வனத்துறை அதிகாரிகள் தெரிவித்தனர்.
கேரளா மற்றும் தமிழகத்தின் பல பகுதிகளில் அரிசி கொம்பன் யானை பொதுமக்களை அச்சுறுத்தி வந்தது. தொடர்ந்து தேனி மாவட்டம், எரசக்கநாயக்கனூர் ,சின்ன ஓவுலாபுரம், ராயப்பன்பட்டி சண்முகாநதி அணை அடர்த்த காப்புக்காடு வனப்பகுதியில், அரிகொம்பன் யானை கடந்த 7 நாட்களாக அடர்ந்த வனத்தில் முகாமிட்டது. அதனை பின் தொடர்ந்த கால்நடை மருத்துவர் பிரகாஷ் தலைமையிலான ஐந்து மருத்துவர்கள் அடங்கிய குழுவினர் அதிகாலை 3 மணி முதல் 3:30 மணிக்குள் மயக்க ஊசி செலுத்தினர். இதனை அடுத்து கம்பத்தில் நிறுத்தப்பட்டிருந்த கும்கி யானைகளான உதயா, சுயம்பு, சக்தி உள்ளிட்ட மூன்று காட்டு யானைகள் கொண்டுவரப்பட்டது. இதனையடுத்து மயக்க ஊசி செலுத்தப்பட்ட 30 நிமிடத்தில் யானையின் செயல்பாடு முழுவீச்சில் முடங்கியது. யானை தட வல்லுனர் குழுவினர் மிகத் தைரியமாகவும், இதே போல் யானைகளைப் பற்றி நன்கு அறிந்த பழங்குடியின பளியர்கள் குழுவினர் மிகத் தைரியமாகவும் அரிகொம்பன் அருகில் சென்றனர்.
இதன் பின்பு அரிக்கொம்பனை பிடித்து லாரியில் ஏற்றி பலத்த பாதுகாப்புடன் சின்ன ஓவுலாபுரத்திலிருந்து தேசிய நெடுஞ்சாலை வழியாக நெல்லை மாவட்டம் களக்காடு முண்டந்துறை புலிகள் காப்பக மேலக் கோதையார் வனப்பகுதியில் விடுவதற்கு கொண்டுவரப்பட்டது. 10 மணி நேர சாலை மார்க்கமான பயணத்திற்கு பின்பு மாலை சுமார் ஐந்து 40 மணியளவில் மணிமுத்தாறு சோதனை சாவடிக்கு அழைத்து வரப்பட்ட அரிக்கொம்பன் யானை மிகுந்த பாதுகாப்புடன் வனப் பகுதிக்கு அழைத்துச் செல்லப்பட்டது. குறிப்பாக நெல்லை மாவட்டம் களக்காடு முண்டந்துறை புலிகள் காப்பாகத்திற்குட்பட்ட வனப்பகுதிக்கு கொண்டு செல்ல 35 கிலோ மீட்டர் பயணித்து முத்துக்குளி என்ற இடத்தில் யானையை விட கொண்டு செல்லப்பட்டது.
மேலும், சுமார் நான்கு மணிநேர பயணத்தை தொடர்ந்து அந்த யானை நேற்று இரவு வனப்பகுதியில் விடப்படும் என வனத்துறை அதிகாரிகள் தெரிவித்தனர். இந்த நிலையில் ஆட்கொள்ளியான அரிக்கொம்பன் யானையை நெல்லை மாவட்ட வனத்துறை பகுதிக்குள் விடக்கூடாது என்றும், அப்படி யானையை விட்டால் எங்களது உயிருக்கு பாதுகாப்பு இல்லாத சூழல் உருவாகும். எனவே இந்த பகுதியில் இருந்து வெளியே கொண்டு செல்ல வேண்டும் என மணிமுத்தாறு வனத்துறை சோதனை சாவடி முன்பு எஸ்டிபிஐ கட்சியினர் மற்றும் பொதுமக்கள் மறியல் போராட்டம் நடத்தினர். அவர்களுடன் அம்பாசமுத்திரம் டிஎஸ்பி சதீஷ்குமார் பேச்சுவார்த்தை நடத்தினார் என்றாலும் அவர்கள் மறியல் போராட்டத்தை கைவிட மறுத்ததினால் அவர்கள் கைது செய்யப்பட்டனர். இதனால் அப்பகுதியில் பெரும் பரபரப்பு ஏற்பட்டது.
முன்னதாக நெல்லை மாவட்டம் களக்காடு முண்டந்துறை புலிகள் காப்பகத்துக்கு உட்பட்ட மாஞ்சோலை அடுத்த கோதையாறு அணை அருகே முத்துக்குளி பகுதியில் விடுவதற்காக அழைத்து வரப்பட்டு அங்கே ஆள் நடமாட்டம் இல்லாத காட்டுப்பகுதிக்குள் யானை விடப்பட உள்ளதாக வந்த தகவலையடுத்து அரிக்கொம்பன் யானையை கொண்டு வருவதற்கு எதிர்ப்பு தெரிவித்து மணிமுத்தாறு பகுதி மக்கள் மணிமுத்தாறு வன சோதனை சாவடி அருகே போராட்டத்தில் ஈடுபடலாம் என்று தகவல் வெளியானது. இதனால் துணை காவல் கண்காணிப்பாளர் தலைமையில் மணிமுத்தாறு சோதனை சாவடியில் போலீசார் குவிக்கப்பட்டனர். மேலும் காட்டுப்பகுதிக்குள் யானையை கொண்டு செல்லும்போது வழிப்பாதையை சீரமைப்பதற்காகவும், மயங்கிய நிலையில் உள்ள யானையை வாகனத்தில் இருந்து கீழே இறக்குவதற்கும் ஜேசிபி இயந்திரம் கொண்டு வரப்பட்டதாக கூறப்பட்டது குறிப்பிடத்தக்கது.