Citizenship: ஓஹோ இப்படிதான் தப்பிக்கிறாங்களா..! ரூ.1 கோடி இருந்தாலே போதுமாம், இந்த 9 நாடுகளில் குடியுரிமை வாங்கலாம்
Citizenship: இந்திய மதிப்பில் வெறும் ஒரு கோடிக்கும் குறைவான செலவிலேயே குடியுரிமை வழங்கும் நாடுகள் குறித்து இந்த தொகுப்பில் அறியலாம்.

Citizenship: இந்திய மதிப்பில் வெறும் ஒரு கோடிக்கும் குறைவான செலவிலேயே குடியுரிமை வழங்கும் நாடுகளின் விவரங்கள் கீழே பட்டியலிடப்பட்டுள்ளன.
பணத்திற்கு குடியுரிமை:
ஐக்கிய அரபு அமீரக அரசாங்கம் மற்ற நாடுகளைச் சேர்ந்த மக்களுக்கு, தங்களது மண்ணில் குடியுரிமை வழங்கும் வாய்ப்பை எளிதாக்கியுள்ளது. அதன்படி, வேறொரு நாட்டின் குடிமகன்கள் அங்கு சொத்து எதையும் வாங்காமலேயே துபாயின் குடிமகனாக மாறமுடியும். இதற்கான கட்டணமாக பயனர்கள் ரூ.23.30 லட்சம் செலுத்த வேண்டும். முன்னதாக, துபாய் குடியுரிமைக்காக 4 கோடிக்கு மேல் செலுத்தி கோல்டன் விசா பெற வேண்டி இருந்தது குறிப்பிடத்தக்கது. அதேநேரம், இந்திய குடிமக்கள் 1 கோடி ரூபாய்க்கும் குறைவாக செலுத்தி குடியுரிமை வாங்கக்கூடிய சில நாடுகளும் உள்ளன. அத்தகைய நாடுகளில் தான், இந்தியாவில் பண மோசடியில் சிக்கி தப்பிச் செல்லும் பெருமுதலாலிகள் தஞ்சமடைவது தொடர்கதையாகி வருகிறது.
மோசடிக்காரர்களின் புகலிடம்:
உதாரணமாக, பஞ்சாப் நேஷனல் வங்கியில் 13 ஆயிரத்து 500 கோடி ரூபாய் மோசடி செய்த மெஹுல் சோக்ஷி டொமினிகா தீவில் வைத்து தான் கைது செய்யப்பட்டார். அதே வங்கியில் மோசடியில் ஈடுபட்ட நீரவ் மோடி, வனுவாட்டு நாட்டில் தஞ்சமடைய முயற்சி செய்தார். இந்த நாடுகளில் எல்லாம், வெறும் 1 கோடிக்கும் குறைவான செலவிலேயே வெளிநாட்டு மக்களுக்கு குடியுரிமை வழங்கப்படுகிறது. அந்த வகையில் குறைந்த செலவில் இந்தியர்களுக்கு குடியுரிமை வழங்கும் நாடுகளின் பட்டியல் கீழே வழங்கப்பட்டுள்ளது. அதேநேரம்,நீங்கள் இந்திய குடியுரிமையை விட்டுக் கொடுக்க வேண்டி இருக்கும். ஏனென்றால் இந்தியாவில் இரட்டை குடியுரிமை அனுமதிக்கப்படுவதில்லை.
குறைந்த செலவில் குடியுரிமை அளிக்கும் நாடுகள்:
1. டொமினிகா
டொமினிகாவில் குறைந்தது ரூ.76 லட்சம் நன்கொடை அளித்து குடியுரிமை பெறலாம். வெறும் 3 முதல் 6 மாதங்களில் குடியுரிமை கிடைக்கும். இதற்காக நீங்கள் எந்த விசாரணையையும் வேண்டியதில்லை. அந்த நாட்டில் சொத்து ஏதும் வாங்காவிட்டாலும், உங்களுக்கு குடியுரிமை கிடைக்கும். கல்வித் தகுதியும் இல்லை, மொழித் தடையும் இல்லை. பணம் அனுப்பி டொமினிகாவின் குடிமகனாகலாம். அதன் பிறகு நீங்கள் விசா இல்லாமல் 145 நாடுகளுக்கு பயணிக்கலாம்.
2. செயிண்ட் லூசியா
இந்த நாட்டில் குடியுரிமை பெற குறைந்தபட்சமா ரூ.76 லட்சம் முதலீடு செய்தால் போதும். பின்னர் கோல்டன் விசாவிற்கு 4 முதல் 5 மாதங்கள் செயலாக்க நேரம் தேவைப்படும். இங்கு குடியுரிமை பெறுவதற்கு உலகளாவிய வரி எதுவும் செலுத்த வேண்டிய அவசியமில்லை.
3. வனுவாட்டு
இங்கு குடியுரிமை பெற குறைந்தபட்சம் ரூ.80 லட்சம் முதலீடு செய்ய வேண்டும். 60 நாட்களுக்குள் உங்களுக்கு குடியுரிமை வழங்கப்படும்.
4. கிரெனடா
இங்கு குடியுரிமை பெற குறைந்தபட்சம் ரூ.95 லட்சம் முதலீடு செய்ய வேண்டும். அமெரிக்க E-2 விசா ஒப்பந்தத்தை அணுகக்கூடிய ஒரே CBI நாடு இதுவாகும். இது அமெரிக்காவில் வசிக்கவும் வேலை செய்யவும் உங்களை அனுமதிக்கிறது.
5. ஆன்டிகுவா மற்றும் பார்புடா
இந்த நாட்டின் கோல்டன் விசாவிற்கு நீங்கள் குறைந்தபட்சம் ரூ.76 லட்சம் முதலீடு செய்ய வேண்டும்.
6. துருக்கி
இங்கு குடியுரிமை பெற, அந்த நாட்டில் உங்களுக்கு குறைந்தபட்சம் 1 கோடி மதிப்புள்ள அசையா சொத்துகள் இருக்க வேண்டும். இது முழு குடும்பத்திற்குமான குடியுரிமையையும், ஐரோப்பா தொடர்பான பாஸ்போர்ட்டுகளுக்கான அணுகலையும் வழங்குகிறது.
7. வடக்கு மாசிடோனியா
இங்கு குடியுரிமை பெற குறைந்தபட்சம் ரூ.92 லட்சம் முதலீடு செய்ய வேண்டும். இது ஐரோப்பாவின் பால்கன் பகுதிக்கான நுழைவாயில் என்றும் அழைக்கப்படுகிறது. ஐரோப்பிய ஒன்றியத்தில் குடியேற வேண்டும் என்ற லட்சியங்களுக்கு ஊக்கமும் அளிக்கிறது.
8. மால்டோவா
இந்த நாட்டின் கோல்டன் விசாவிற்கு நீங்கள் குறைந்தபட்சம் ரூ.92 லட்சம் முதலீடு செய்ய வேண்டும். இது 120க்கும் மேற்பட்ட நாடுகளுக்கு விசா இல்லாமல் பயணிக்க அனுமதிக்கிறது.சிறந்த விடுமுறை கொண்டாட்டங்களுக்கும் வாய்ப்பளிக்கிறது.
9. செயிண்ட் கிட்ஸ் மற்றும் நெவிஸ்
இந்த நாட்டின் குடியுரிமை பெற குறைந்தபட்சம் ரூ.92 லட்சம் முதலீடு செய்யலாம். சிறப்பு என்னவென்றால், இது முதலீடுகள் மூலம் குடியுரிமை வழங்கக்கூடிய உலகின் பழமையான நாடுகளில் ஒன்றாகும்.






















