Cyclone Mandous: மாண்டஸ் புயல்; அரசே வீடு கட்டி, படகுகளை சீரமைத்துத் தர வேண்டும்: அன்புமணி வலியுறுத்தல்
மாண்டஸ் புயலால் படகுகள், வீடுகளை இழந்த மீனவர்களுக்கு அரசே வீடுகளை கட்டித்தரவும், படகுகளை சீரமைத்துத் தரவும் முன்வர வேண்டும் என்று பா.ம.க. தலைவர் அன்புமணி ராமதாஸ் வலியுறுத்தி உள்ளார்.
மாண்டஸ் புயலால் படகுகள் , வீடுகளை இழந்த மீனவர்களுக்கு அரசே வீடுகளை கட்டித்தரவும், படகுகளை சீரமைத்துத் தரவும் முன்வர வேண்டும் என்று பா.ம.க. தலைவர் அன்புமணி ராமதாஸ் வலியுறுத்தி உள்ளார்.
சீரமைப்பு பணி
சென்னையில் மாண்டஸ் புயலால் ஏற்பட்ட பாதிப்புகளை கண்காணிக்கவும் நிவாரணப் பணிகளை மேற்கொள்ளவும் பணியாளர்கள் நியமிக்கப்பட்டு செயல்பட்டு வருகின்றனர். 5,000 பணியாளர்கள் நேற்று இரவு முதல் சீரமைப்பு பணிகளில் ஈடுபட்டு வருகின்றனர். தற்போது கிட்டத்தட்ட 25 ஆயிரம் ஊழியர்கள் நிவாரணப் பணிகளில் ஈடுபட்டு வருகின்றனர்.
கடும் பாதிப்புகள் இல்லை
மாண்டஸ் புயல் காரணமாக கடந்த 24 மணி நேரத்தில் 37 மாவட்டங்களில் மழைப் பொழிவு பதிவாகியுள்ளது. மாநில சராசரியாக 20.08 மி.மீ அளவு மழை பதிவாகியுள்ளது. சென்னை, செங்கல்பட்டு, காஞ்சிபுரம், ராணிப்பேட்டை, திருவண்ணாமலை ஆகிய பகுதிகளில் அதிகபட்சமாக மழை பதிவாகியுள்ளது. அதிகளவு மழை பெய்தாலும், பெருமளவிற்கு பாதிப்புகள் இல்லாத வண்ணம் அரசு நடவடிக்கை எடுத்துள்ளதாகவும் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் தெரிவித்தார்.
புயல்- உயிரிழப்பு
இதுவரை கிடைத்த தகவல்களின் படி, புயல் பாதிப்புகளில் நான்கு பேர் உயிரிழந்துள்ளனர். 98 கால்நடைகள் உயிரிழந்துள்ளன. 181 குடிசைகள், வீடுகள் பாதிக்கப்பட்டுள்ளன. மழை காரணமாக சேத விவரங்கள் முறையாகக் கணக்கெடுக்கப்பட்டு வருவதாகவும் முதலமைச்சர் தெரிவித்தார்.
நிவாரண முகாம்கள்
201 முகாம்களில் 3 ஆயிரத்து 163 குடும்பங்களைச் சேர்ந்த 9 ஆயிரத்து 130 பேர் தங்க வைக்கப்பட்டு அவர்களுக்குத் தேவையான உணவு, சுகாதாரமான குடிநீர் மற்றும் மருத்துவ வசதிகள் செய்து தரப்பட்டுள்ளன.
இந்நிலையில் மாண்டஸ் புயலால் படகுகள் , வீடுகளை இழந்த மீனவர்களுக்கு அரசே வீடுகளை கட்டித்தரவும், படகுகளை சீரமைத்துத் தரவும் முன்வர வேண்டும் என்று பா.ம.க. தலைவர் அன்புமணி ராமதாஸ் வலியுறுத்தி உள்ளார்.
இதுகுறித்து இன்று அவர் வெளியிட்டுள்ள ட்விட்டர் பதிவுகளில் கூறி உள்ளதாவது:
’’தமிழ்நாட்டில் கடுமையான பாதிப்புகளை ஏற்படுத்தக்கூடும் என்று அஞ்சப்பட்ட மாண்டஸ் புயல், பாதிப்புகளை ஏற்படுத்தாமல் சென்றிருக்கிறது. மக்களுக்கு பெரிய அளவில் பொருள் இழப்பும், உயிரிழப்பும் ஏற்படாமல் தவிர்க்கப்பட்டதற்கு அரசு செய்த முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள்தான் காரணம். அரசுக்கு பாராட்டுகள்.
அதே நேரத்தில் கடலோரப் பகுதிகளில் ஏற்பட்ட கடல் சீற்றம் மற்றும் சூறைக் காற்று காரணமாக விழுப்புரம், காஞ்சிபுரம், செங்கல்பட்டு, திருவள்ளூர் மாவட்டங்களில் மீனவர்களின் படகுகள் சேதமடைந்துள்ளன. கடல் அரிப்பின் காரணமாக மீனவர்கள் மற்றும் பொது மக்களின் வீடுகள் இடிந்துள்ளன. மாண்டஸ் புயலால் பாதிக்கப்பட்ட படகுகளை சரி செய்ய லட்சக்கணக்கில் செலவாகும் என்று மதிப்பிடப்பட்டுள்ளது. மீனவர்களின் வலைகள் முழுமையாக நாசமடைந்து விட்டதால் அவர்களால் மீன்பிடிக்கச் செல்ல முடியாது. அதனால் அவர்களின் வாழ்வாதாரம் பாதிக்கப்பட்டுள்ளது.
பாதிக்கப்பட்ட மீனவர்களின் படகுகளை அரசே சரி செய்து தர வேண்டும். மீனவர்களுக்குப் புதிய வலைகளை வாங்கித் தர வேண்டும். கடல் சீற்றத்தால் இடிந்து விழுந்த வீடுகளுக்கு பதிலாக புதிய வீடுகளை அரசின் செலவில் கட்டித்தர தமிழக அரசு முன்வர வேண்டும் என்று வலியுறுத்துகிறேன்’’.
இவ்வாறு அன்புமணி தெரிவித்துள்ளார்.