அஜித்குமார் மரணம்: நாளை சென்னையில் தவெக போராட்டம்! கலந்துக்கொள்வாரா விஜய்? வழிகாட்டு நெறிமுறைகள் வெளியீடு
தமிழக வெற்றிக் கழகத்தின் சார்பில் நாளை (13.07.2025) அஜித் குமாரின் மரணத்தை கண்டித்து காலை 10 மணியளவில் கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெற உள்ளது.

சென்னை நாளை தவெக சார்பில் அஜித்குமார் மரணத்திற்கு நீதி கேட்டும் தமிழகத்தில் நடந்த லாக் அப் மரணத்திற்கு எதிர்ப்பு தெரிவிக்கும் இந்த போராட்டத்திற்கான வழிக்காட்டு நெறிமுறைகளை தவெக சார்பில் வெளியிடப்பட்டுள்ளது.
இது குறித்து தவெக சார்பில் வெளியிட்டுள்ள அறிக்கையில் சிவகங்கை மாவட்டம், திருப்புவனம் காவல் நிலைய எல்லைக்கு உட்பட்ட மடப்புரம் கோவில் காவலர் அஜித்குமார் மரணத்திற்கு நீதி கேட்டும். உயர் நீதிமன்றத்தின் நேரடிக் கண்காணிப்பின்கீழ்ச் சிறப்புப் புலனாய்வுக் குழு அமைத்து நீதி விசாரணை நடத்த வேண்டும் என்பதை வலியுறுத்தியும், கடந்த நான்கு ஆண்டுகளில் 24 பேர் காவல் நிலையத்தில் மரணம் அடைந்தது குறித்து உயர்நீதிமன்றமே அதிருப்தி தெரிவித்துள்ள நிலையில், இது குறித்துத் தமிழ்நாடு அரசு வெள்ளை அறிக்கை வெளியிட வலியுறுத்தியும், கழகத் தலைவர் அவர்களின் உத்தரவின் பேரில், தமிழக வெற்றிக் கழகத்தின் சார்பில் நாளை (13.07.2025) காலை 10 மணியளவில் கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெற உள்ளது.
சென்னை, சிவானந்தா சாலையில் நடைபெற உள்ள இந்த ஆர்ப்பாட்டத்தில் கலந்துகொள்பவர்கள். கீழ்க்கண்ட வழிகாட்டு நெறிமுறைகளைக் கட்டாயம் பின்பற்ற வேண்டும் என்று கேட்டுக்கொள்கிறோம்.
1.ஆர்ப்பாட்டம் சரியாகக் காலை 10.00 மணிக்கு தொடங்க இருப்பதால், அதற்குத் தகுந்தார்போல் ஆர்ப்பாட்டம் நடைபெறும் இடத்தில் நாம் ஒன்றுகூட வேண்டும். எனவே. அனைவரும் தங்களது வாகனங்களை தீவுத்திடலில் நிறுத்திவிட்டு, கடற்கரை சாலை வழியாக சிவானந்தா சாலையை அடைய வேண்டும் எனக் கேட்டுக்கொள்கிறேன்.
2.ஆர்ப்பாட்டத்தைக் கட்டுக்கோப்பாக அமைதியான முறையில் நடத்தி, நமது கோரிக்கைகளை நிறைவேற்றக் கோரி அரசை வலியுறுத்த வேண்டும்.
3.ஆர்ப்பாட்டம் நடைபெறும் இடத்திற்கு வாகனங்களைக் கொண்டு வர வேண்டாம். ஆர்ப்பாட்டம் நடைபெறும் இடத்தில் வாகனங்களை நிறுத்த வேண்டாம்.
4.போக்குவரத்து விதிமுறைகளைக் கண்டிப்பாகப் பின்பற்றி. போக்குவரத்திற்கு எவ்வித இடையூறும் இல்லாமல், வாகனங்கள் மற்றும் பொதுமக்கள் சிரமமின்றிச் சென்று வரும் வகையில் வழி விட்டு ஒத்துழைப்பு தந்து, ஆர்ப்பாட்டத்தில் கலந்துகொள்ள வேண்டும்.
5.தலைக்கவசம் அணியாமல் இருசக்கர வாகனத்தில் பயணிப்பதைத் தவிர்க்கவும்.
6.பொதுமக்களுக்கு இடையூறு உண்டாகும் வகையில் பேனர்கள், பதாகைகள் வைக்கக் கூடாது.
7.எந்த ஒரு மத. சாதி. இன மற்றும் தனிப்பட்ட நபர்களைப் புண்படுத்தும் வகையில் முழக்கங்கள் எழுப்பக் கூடாது.
8.தனிப்பட்ட அதிகாரிகள் மீதும், ஆட்சேபகரமான முறையிலும் பேசுதல் மற்றும் முழக்கங்களை எழுப்புதல் கூடாது.
9.ஆர்ப்பாட்டத்தின் போது உருவ பொம்மைகளைக் கொண்டு வருவது. அவற்றை எரிப்பது. புகைப்படங்களை எரிப்பது உள்ளிட்ட நடவடிக்கைகளில் ஈடுபடக் கூடாது.
10.ஆர்ப்பாட்டம் நடைபெறும் இடத்திற்கு அருகே ஓமந்தூரார் அரசு மருத்துவமனை இருப்பதால் மருத்துவமனைக்கு வந்து செல்பவர்களுக்கு எவ்வித இடையூறும் ஏற்படாத வகையில் நடந்துகொள்ள வேண்டும்.
11.ஆர்ப்பாட்டம் முடிந்தவுடன் அமைதியாகக் கலைந்து செல்ல வேண்டும்.
12.எவ்வகையிலும் கழகத்தின் கொள்கைகள். குறிக்கோள்கள் மற்றும் கோட்பாடுகளுக்கு எதிராகக் கண்டிப்பாகச் செயல்படக் கூடாது.






















