PM Modi TN Visit: 3 மாதங்களுக்குப் பிறகு - ஃபாரின் டூர் முடிந்து தமிழ்நாடு வரும் பிரதமர் மோடி - எப்போது? ஏன்?
PM Modi TN Visit: பிரதமர் மோடி ஜுலை மாத இறுதியில் தமிழ்நாட்டிற்கு இரண்டு நாள் பயணமாக வரவுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.

PM Modi TN Visit: பிரதமர் மோடி மூன்று மாத இடைவெளிக்குப் பிறகு முதல்முறையாக தமிழ்நாட்டிற்கு வரவுள்ளார்.
தமிழ்நாட்டிற்கு வருகை தரும் பிரதமர் மோடி:
வெளிநாடுகளுக்கு சுற்றுப்பயணம் மேற்கொண்ட பிரதமர் மோடி, பிரிக்ஸ் மாநாட்டிலும் பங்கேற்று விட்டு நேற்று காலை டெல்லி திரும்பினார். இந்நிலையில், வரும் ஜுலை 27 மற்றும் 28 ஆகிய தேதிகளில் அவர் தமிழ்நாட்டிற்கு வருகை தரவுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. அரியலூர் மாவட்டம் கங்கைகொண்ட சோழபுரத்தில் நடக்கும் ஆடி திருவாதிரை நிகழ்ச்சியில் பிரதமர் மோடி பங்கேற்க உள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது. சட்டமன்ற தேர்தலுக்கான அதிமுக உடனான கூட்டணி இறுதியான பிறகு, பிரதமர் மோடி தமிழ்நாட்டிற்கு வருகை தருவது இதுவே முதல்முறையாகும். எனவே அந்த கூட்டணியின் முதலமைச்சர் வேட்பாளரும், அதிமுக பொதுச்செயலாளரான எடப்பாடி பழனிசாமியுடன் ஆலோசனை நடத்தவும் வாய்ப்புள்ளதாக கூறப்படுகிறது. முன்னதாக கடந்த ஏப்ரல் 6ம் தேதி தமிழ்நாடு வந்திருந்த பிரதமர் மோடி, ராமேஸ்வரத்தில் புதியதாக கட்டப்பட்ட பாம்பன் பாலத்தை திறந்து வைத்தது குறிப்பிடத்தக்கது.
பிரதமரின் பயண திட்டம் என்ன?
வரும் 26ம் தேதி கேரளாவில் நடைபெற உள்ள அரசு நிகழ்ச்சியில் பங்கேற்ற பின், இரண்டு நாள் பயணமாக பிரதமர் மோடி 27 மற்றும் 28 ஆகிய தேதிகளில் தமிழ்நாட்டில் சுற்றுப்பயணம் மேற்கொள்ள இருக்கிறார். இந்த பயணத்தின் போது அரியலூர், பெரம்பலூர் மற்றும் தஞ்சாவூர் ஆகிய பகுதிகளில் நடைபெற உள்ள நிகழ்ச்சிகளில் பங்கேற்பார்கள் என எதிர்பார்க்கப்படுகிறது. இதனை முன்னிட்டு மத்திய அரசு அதிகாரிகள் உள்ளிட்டோர் கங்கை கொண்ட சோழபுரத்தில் முகாமிட்டு பாதுகாப்பு பணிகளை முடுக்கிவிட்டுள்ளனர்.
அதிமுக - பாஜக கூட்டணி தீவிரம்
தமிழ்நாடு சட்டமன்ற பொதுத்தேர்தலுக்கு இன்னும் 10 மாதங்களே உள்ள நிலையில், அதிமுக உடனான கூட்டணியை மேலும் விரிவுபடுத்த பாஜக விரும்புகிறது. இதனையொட்டி எடப்பாடி பழனிசாமியை, பிரதமர் சந்தித்து ஆலோசிப்பார் என தெரிகிறது. இந்திய ஜனநாயக கட்சி, தமிழ் மாநில காங்கிரஸ் உள்ளிட்ட சில சிறிய கட்சிகள் ஏற்கனவே இந்த கூட்டணியில் உள்ளன. பாமகவில் உள்ள உட்கட்சி பூசல் முடிவுக்கு வந்தால் தான், அவர்கள் யார் கூட்டணியில் இணைய வாய்ப்புள்ளது என்பது தெரிய வரும். தேமுதிகவோ அடுத்த ஆண்டு தங்களது முடிவு அறிவிக்கப்படும் என தெரிவித்துள்ளது. ஓபிஎஸ் தலைமையிலான பிரிவு மற்றும் டிடிவி தினகரன் ஆகியோர் பாஜக கூட்டணியில் இருந்தாலும், அவர்களுடன் சேர்ந்து பயணிப்பதை எடப்பாடி பழனிசாமி விரும்பவில்லை. இதுகுறித்த சமாதான பேச்சுவார்த்தைகளும் பிரதமர் மோடியின் தமிழக வருகையின்போது முன்னெடுக்கப்படும் என எதிர்பார்க்கப்படுகிறது.
இதுபோக, பிரதமர் மோடியை முதலமைச்சர் ஸ்டாலினும் நேரில் சந்தித்து, தமிழ்நாட்டிற்கான நிதி தொடர்பாக கோரிக்கைகள் முன்வைப்பார் என எதிர்பார்க்கப்படுகிறது.





















