Iran Threatens Trump: ஈரானிடமிருந்து கொலை மிரட்டல்; புன்னகையால் டீல் செய்த ட்ரம்ப் - நடந்தது என்ன தெரியுமா.?
அமெரிக்க அதிபர் ட்ரம்ப் மீது ட்ரோன் தாக்குதல் நடத்தி அவரை கொல்லப்போவதாக ஈரான் உச்ச தலைவரின் ஆலோசகர் கூறியுள்ள நிலையில், அதற்கு ட்ரம்ப் என்ன பிதிலளித்தார் தெரியுமா.?

அமெரிக்கா - ஈரான் இடையே அடுத்த கட்ட பேச்சுவார்த்தை நடைபெற உள்ள நிலையில், அமெரிக்க அதிபர் ட்ரோன் தாக்குதல் மூலம் கொல்லப்படலாம் என ஈரான் உச்ச தலைவர் காமேனியின் ஆலேசகர் கூறியுள்ள நிலையில், அது குறித்த கேள்விக்கு, வெறும் சிரிப்பை பதிலாக கொடுத்துள்ளார் ட்ரம்ப்.
“ட்ரம்ப் மீது ட்ரோன் தாக்குதல் நடக்கலாம்“
அமெரிக்க அதிபர் டொனால்ட் டிரம்ப் புளோரிடாவில் உள்ள தனது மார்-எ-லாகோ மாளிகையில் சூரிய குளியலில் ஈடுபடும்போது ஈரானால் தாக்கப்படலாம் என்று ஈரானின் உச்ச தலைவ தலைவர் காமேனியின் முன்னாள் மூத்த ஆலோசகர் முகமது-ஜாவத் லாரிஜானி தெரிவித்துள்ளார்.
மார்-எ-லாகோவில் இனி சூரியக் குளியல் எடுக்க முடியாதபடி டிரம்ப் ஏதோ செய்துள்ளார் என்று லாரிஜானி கூறியதாக ஈரான் இன்டர்நேஷனல் தெரிவித்துள்ளது. அவர் சூரியனுக்கு தனது வயிற்றை காட்டி படுத்துக் கொள்ளும்போது, ஒரு சிறிய ட்ரோன் அவரது தொப்புளில் மோதக்கூடும். இது மிகவும் எளிது என்று அவர் கூறியுள்ளார்.
இதேபோலவே, கடந்த 2020 ஆம் ஆண்டு, அமெரிக்காவின் ட்ரோன் தாக்குதலில் கொல்லப்பட்ட ஈரானிய மேஜர் ஜெனரல் காசெம் சுலைமானியை கொல்ல டிரம்ப் உத்தரவிட்டார் என்பது குறிப்பிடத்தக்கது.
கொலை மிரட்டலுக்கு சிரிப்பை பதிலாக கொடுத்த ட்ரம்ப்
பிரபல ஊடகம் ஒன்றில் நடந்த ஒரு நேர்காணலில், டிரம்பிடம் இந்த மிரட்டல் குறித்து கேள்வி எழுப்பப்பட்டது. ஆனால், அவர் அதை சிரித்துக்கொண்டே புறக்கணித்தார். தொடர்ந்த, அவர் கடைசியாக எப்போது சூரிய குளியல் சென்றார் என்று நெறியாளர் கேள்வி எழுப்ப, அதற்கு டிரம்ப், "ரொம்ப நாளாச்சு, எனக்குத் தெரியாது, ஒருவேளை நான் 7 வயசுல இருந்திருக்கலாம், எனக்கு அதில் அவ்வளவு ஆர்வம் இல்லை" என்று பதிலளித்தார். மேலும், இது ஒரு அச்சுறுத்தல் என்று நினைக்கிறேன். அது ஒரு அச்சுறுத்தல் இல்லை என்று எனக்குத் தெரியும், ஆனால் ஒருவேளை அப்படியும் இருக்கலாம் என்றும் ட்ரம்ப் கூறினார்.
இஸ்ரேல் மற்றும் ஈரானின் 12 நாள் போரில் அமெரிக்கா தலையிட்ட அதே வேளையில், ஈரானின் அணுசக்தி மற்றும் ராணுவ வசதிகளை அமெரிக்கா குண்டுவீசித் தாக்கிய இரண்டு வாரங்களுக்குப் பிறகு இப்படி ஒரு மிரட்டல் வருகிறது.
ஈரானின் அணுசக்தி நிலையங்கள் மீதான அமெரிக்க குண்டுவீச்சுகள் அவற்றை "அழித்துவிட்டதாக" டிரம்ப் பலமுறை கூறியுள்ளார். இருப்பினும், சில நிபுணர்கள் சேதம் போதுமானதாக இல்லை என்றும், தாக்குதல்களுக்கு முன்பு ஈரான் அதன் செறிவூட்டப்பட்ட யுரேனிய கையிருப்பை ரகசியமாக நகர்த்தியிருக்கலாம் என்றும் கூறுகின்றனர்.
ஈரானின் யுரேனியம் நகர்த்தப்படவில்லை என்றும் அணுசக்தி நிலையங்களிலேயே உள்ளது என்றும் உளவுத்துறை தகவல்கள் தெரிவிக்கின்றன என்று இஸ்ரேலிய அதிகாரி ஒருவர் கூறியுள்ளார்.
“அமெரிக்கா உடனான உறவில் நம்பிக்கை ஒரு பிரச்னையாக இருக்கலாம்“
அமெரிக்காவும் ஈரானும் இந்த வாரம் நோர்வேயில் தங்கள் பேச்சுவார்த்தைகளை மீண்டும் தொடங்க உள்ளன. ஒரு கட்டத்தில் ஈரான் மீதான தடைகளை நீக்க விரும்புவதாக டிரம்ப் கூறியுள்ளார். ஆனால், ஈரான் ஜனாதிபதி மசூத் பெஷேஷ்கியன், இரு நாடுகளுக்கும் இடையிலான உறவில் நம்பிக்கை ஒரு பிரச்னையாக இருக்கும் என்று ஒரு பேட்டியில் கூறியுள்ளார்.
ஈரானின் அணுசக்தி செறிவூட்டல் திட்டத்தை உச்ச தலைவர் அயதுல்லா அலி காமெனி முடிவுக்குக் கொண்டுவராவிட்டால், மீண்டும் ஈரானின் மீது குண்டு வீசுவதாக டிரம்ப் மிரட்டல் விடுத்துள்ளது குறிப்பிடத்தக்கது.





















