சென்னையிலே இப்படியா? ஆசிரியர்கள் இல்லா அரசுப்பள்ளிகள்.. அப்புறம் எப்படி பசங்க படிப்பாங்க?
தலைநகர் சென்னையில் அரசுப்பள்ளிகளில் மட்டும் 1152 ஆசிரியர்கள் காலிப்பணியிடங்கள் நிரப்பப்படாமல் இருப்பதால் மாணவர்கள் கல்வி கடுமையாக பாதிக்கப்பட்டுள்ளது.

இந்தியாவில் கல்வி வளர்ச்சி என்பது மற்ற மாநிலங்களில் நல்ல வளர்ச்சியாக இருக்கிறது. தமிழ்நாட்டின் தலைநகரான சென்னையில் உயர்கல்வி பாராட்டும் வகையில் இருந்தாலும், அரசுப் பள்ளிகளின் நிலை என்பது சற்று வருத்தத்திற்குரிய வகையிலே இருப்பதை தரவுகள் காட்டுகிறது.
சென்னையில் அரசுப்பள்ளிகள்:
சென்னை மாநகராட்சிக்கு கீழ் சென்னையில் மொத்தம் 417 அரசுப்பள்ளிகள் இயங்கி வருகிறது. இதில் 206 தொடக்கப் பள்ளிகள், 130 நடுநிலைப் பள்ளிகள் மற்றும் 46 உயர்நிலைப் பள்ளிகள் செயல்பட்டு வருகிறது. சென்னை மாநகராட்சியின் கீழ் 35 மேல்நிலைப் பள்ளிகள் உள்ளது.
ஆனால், மாநிலத்தின் தலைநகரின் இயங்கும் இந்த அரசுப்பள்ளிகளின் தரம் என்பது கவலை அளிக்கும் விதமாக உள்ளது. அதாவது, 2025 -26ம் ஆண்டு கல்வியாண்டில் கடந்த ஜுன் 2ம் தேதி நிலவரப்படி 16 ஆயிரத்து 497 புதிய மாணவர்கள் 1ம் வகுப்பு முதல் 12ம் வகுப்புவரை சேர்ந்துள்ளனர். இந்த மாணவர்கள் சேர்க்கை வரும் செப்டம்பர் வரை நடக்கும் என்பதால், கடந்தாண்டு எண்ணிக்கையான 32 ஆயிரத்தை எட்டும் என்று பள்ளிக்கல்வித்துறை எதிர்பார்க்கிறது.
ஆசிரியர்கள் பற்றாக்குறை:
சென்னை மாநகராட்சியின் கீழ் இயங்கும் பள்ளிகளில் போதியளவு ஆசிரியர்கள் இல்லை. அதாவது, 417 பள்ளிகளில் வெறும் 3 ஆயிரத்து 146 ஆசிரியர்கள் மட்டுமே உள்ளனர். மேலும், 316 தலைமை ஆசிரியர்கள் பணியாற்றி வருகின்றனர். இந்த பள்ளிகளில் மொத்தம் 1152 ஆசிரியர் பணியிடங்கள் காலியாக நிரப்பப்படாமல் உள்ளது. மேலும், நிர்வாக பணிக்கான பணியிடங்களும் காலியாக உள்ளது.
மேலும், பல பள்ளிகளில் மாணவர்களுக்கு வகுப்பறைக்கான போதிய இடங்கள் இல்லாமல் இடப்பற்றாக்குறை இருக்கிறது என்ற குற்றச்சாட்டும் எழுந்துள்ளது. சில பள்ளிகளில் மாணவர்கள் மரத்தடியில் அமரவைக்கப்பட்டு பாடங்கள் எடுக்கப்பட்டு வருவதாகவும் குற்றச்சாட்டு எழுந்துள்ளது. மேலும், சில பள்ளிகளில் இரண்டு வகுப்பு மாணவர்களை ஒன்றாக அமரவைத்து பாடங்கள் நடத்தப்பட்டு வருகிறது. சில பள்ளிகளில் தமிழ் மற்றும் உடற்கல்வி ஆசிரியர்கள் போதிய அளவு இல்லை என்ற குற்றச்சாட்டும் முன்வைக்கப்படுகிறது.
மாநகராட்சி சொல்வது என்ன?
இதுதொடர்பாக, சென்னை மாநகர துணை மேயர் மகேஷ்குமார் கூறியதாவது, சென்னையல் பள்ளிகளின் உட்கட்டமைப்பை மேம்படுத்த ரூபாய் 40 கோடி ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது என்றும், இந்த மாத இறுதிக்குள் பள்ளிகளில் காலியாக உள்ள ஆசிரிய பணியிடங்கள் நிரப்புவது குறித்து நடவடிக்கை எடுக்கப்படும் என்றும் கூறினார்.
கல்வியாளர் பிரின்ஸ் கஜேந்திரபாபு இதுதொடர்பாக கூறும்போது, சென்னை பள்ளிகளில் ஆசிரியர்கள், தூய்மை பணியாளர்கள், வாட்ச்மேன் பணியாளர்கள் பற்றாக்குறை இருப்பதாலே மாணவர்கள் தனியார் பள்ளியை நோக்கி படையெடுக்கின்றனர் என்று கருத்து தெரிவித்தார்.
மாணவர் சேர்க்கையில் தாக்கம்:
தமிழ்நாட்டின் மற்ற மாவட்டங்களுடன் ஒப்பிடும்போது சென்னையில்தான் தனியார் பள்ளிகளில் மாணவர்களைச் சேர்க்க பெற்றோர்கள ஆர்வம் அதிகளவில் காட்டி வருகின்றனர். அதற்கு காரணம், அரசுப்பள்ளிகளில் போதிய கட்டமைப்பு வசதிகள் இல்லாததும், ஆசிரியர்கள் பற்றாக்குறையுமே என்று கூறப்படுகிறது. இந்த விவகாரத்தில் தமிழ்நாடு அரசும், பள்ளிக்கல்வித்துறையும் விரைந்து செயல்பட்டு காலிப்பணியிடங்களை நிரப்ப வேண்டும் என்று கல்வியாளர்கள் வலியுறுத்தி வருகின்றனர்.





















