பும்ரா ரிட்டர்ன்ஸ்.. அசத்துமா இந்திய அணி? வெறியுடன் காத்திருக்கும் இங்கிலாந்து
இந்திய அணிக்கு எதிரான மூன்றாவது டெஸ்ட் போட்டியில் டாஸ் வென்ற இங்கிலாந்து அணி பேட்டிங்கை தேர்வு செய்துள்ளது.

லார்ட்ஸ் மைதானத்தில் இன்று தொடங்கும் மூன்றாவது டெஸ்ட் போட்டியில் டாஸ் வென்ற இங்கிலாந்து அணி பேட்டிங்கை தேர்வு செய்துள்ளது. இந்த போட்டியில் வென்று, இந்திய அணி தொடரில் முன்னிலை வகிக்குமா என்ற எதிர்பார்ப்பு எழுந்துள்ளது.
அசத்துமா இந்திய அணி?
இங்கிலாந்தில் சுற்றுப்பயணம் மேற்கொண்டுள்ள இந்திய அணி, 5 போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடரில் விளையாடி வருகிறது. முதல் இரண்டு போட்டிகள் முடிந்த நிலையில், இரு அணிகளும் தலா ஒரு வெற்றியை பெற்று, தொடர் 1-1 என சமநிலையில் உள்ளது.
இந்த நிலையில் தான், தொடரின் மூன்றாவது போட்டி கிரிக்கெட்டின் மெக்கா என வர்ணிக்கப்படும் லார்ட்ஸ் மைதானத்தில் இன்று தொடங்குகிறது. இந்த போட்டியில் டாஸ் வென்ற இங்கிலாந்து அணி கேப்டன் பென் ஸ்டோக்ஸ், பேட்டிங்கை தேர்வு செய்துள்ளார்.
முதல் போட்டியில் அபாரமான பேட்டிங்கின் மூலம் இங்கிலாந்து அணி வெற்றியை பதிவு செய்தது. அதேநேரம் இரண்டாவது போட்டியில் அபாரமான பேட்டிங் மட்டுமின்றி, துல்லியமான பந்து வீச்சின் மூலம் இந்திய அணி வரலாற்று சிறப்புமிக்க வெற்றியை பதிவு செய்தது.
பும்ரா ரிட்டர்ன்ஸ்:
இதற்கிடையே, லார்ட்ஸ் மைதானத்தில் இன்று தொடங்கும் மூன்றாவது போட்டியில் வெற்றி பெற்று தொடரில் முன்னிலைப் பெறப்போவது யார் என்பது இந்திய அணி ரசிகர்களின் பெரும் எதிர்பார்ப்பாக உள்ளது.
இரண்டாவது டெஸ்டில் ஓய்வளிக்கப்பட்டு இருந்த இந்திய அணியின் நட்சத்திர வேகப்பந்து வீச்சாளர் பும்ரா, இன்றைய போட்டியில் மீண்டும் களமிறங்குகிறார். அதேநேரம், முழங்கையில் ஏற்பட்ட காயம் காரணமாக, கடந்த 2021ம் ஆண்டிற்குப் பிறகு சர்வதேச டெஸ்ட் போட்டிகளில் விளையாடாமல் இருந்த இங்கிலாந்து வேகப்பந்து வீச்சாளர் ஆர்ச்சர் இன்றைய போட்டியில் களமிறங்க உள்ளார். இரண்டு தரமான பந்துவீச்சாளர்கள் லார்ட்ஸ் போட்டியில் களமிறங்குவது ஆட்டத்தை மேலும் சுவாரஸ்யமாக மாற்றியுள்ளது.
லார்ட்ஸ் மைதானத்தில் இந்திய அணி இதுவரை 19 டெஸ்ட் போட்டிகளில் விளையாடியுள்ளது. அதில் வெறும் 3 போட்டிகளில் மட்டுமே வெற்றி பெற்றுள்ளது. 12 போட்டிகளில் தோல்வியும், 4 போட்டிகளில் டிராவும் கண்டுள்ளது. அதேநேரம், கடைசியாக விளையாடிய 3 போட்டிகளில், இரண்டில் இந்திய அணி வெற்றி பெற்றுள்ளது.
இந்தியா அணி விவரம்: யஷஸ்வி ஜெய்ஸ்வால், கே.எல். ராகுல், கருண் நாயர், சுப்மன் கில், ரிஷப் பண்ட், ரவீந்திர ஜடேஜா, நிதிஷ் குமார் ரெட்டி, வாஷிங்டன் சுந்தர், முகமது சிராஜ், ஜஸ்பிரித் பும்ரா, ஆகாஷ் தீப்.





















