அன்புமணி எதற்காக தைலாபுரம் வீட்டிற்கு வந்தார்? - ராமதாஸ் அளித்த பதில் இதோ
தைலாபுரம் வீட்டிற்கு ராமதாஸ் இல்லாத நிலையில் அன்புமணி சென்றது குறித்து ராமதாஸ் பதில் அளித்துள்ளார்.

மயிலாடுதுறை மாவட்டம் சீர்காழி அருகே பூம்புகாரில் வரும் ஆகஸ்ட் 10 -ஆம் தேதி வன்னியர் சங்க மகளிர் மாநாடு நடைபெற உள்ளது. இதனை அடுத்து பாட்டாளி மக்கள் கட்சி நிறுவனத் தலைவர் ராமதாஸ் மாநாடு நடைபெற உள்ள இடத்தினை பார்வையிட்டு ஆய்வு செய்தார். தொடர்ந்து, மாநாட்டு மேடை அமைந்துள்ள இடத்தை பார்வையிட்ட அவர் அப்பகுதியில் சுற்றுலாத் துறை சார்பில் இடித்து விழும் நிலையில் உள்ள கலையரங்க மேடையை இடித்து அப்புறப்படுத்துவது குறித்து சுற்றுலாத்துறை அதிகாரியிடம் கேட்டறிந்தார்.
அதனைத் தொடர்ந்து செய்தியாளர்களை சந்தித்த பாட்டாளி மக்கள் கட்சி நிறுவனர் தலைவர் ராமதாஸ் கூறுகையில்,
நாடே திரும்பி பார்க்கும் அளவிற்கு இந்த மகளிர் மாநாடு
வரலாற்று சிறப்புமிக்க பூம்புகாரில் இதுவரை 13 முறை ஆடிமாதத்தில் மாநாடு நடத்தியுள்ளோம். சற்று இடைவெளிக்கு பின்னர் தற்போது ஆகஸ்ட் மாதம் நடத்த உள்ளோம். மாநாட்டுக்குழு தலைவராக வன்னியர் சங்க தலைவர் பூ.த.அருள்மொழி பொறுப்பேற்று மற்ற குழுக்கள் அமைத்து நாடே திரும்பி பார்க்கும் அளவிற்கு இந்த மாநாடு நடைபெற உள்ளது. தமிழ்நாட்டில் இருந்தும் புதுச்சேரி கேரளா கர்நாடகா உள்ளிட்ட மாநிலங்களில் இருந்து லட்சக்கணக்கான மகளிர் இந்த மாநாட்டில் கலந்து கொள்ள உள்ளனர்.

பெண்களே ஆக்கும், காக்கும் சத்தியாக போற்றப்படுகின்றனர். வீட்டிற்கும் நாட்டிற்கும் உள்ளே இருக்கும் பெண்களே வெளிச்சமாக திகழ்கின்றன. இந்த மாநாட்டில் பண்டையகால தமிழர்களின் வரலாற்றை போற்றும் கண்காட்சி அரங்குகள் அமைக்கப்பட உள்ளது. தமிழ்நாட்டு மீனவர்கள் நலன் உரிமைகள் காக்கப்பட வேண்டும் என்றார்.
மேலும் தொடர்ந்து நேற்று அன்புமணி தைலாபுரம் சென்றது குறித்த செய்தியாளர்கள் எழுப்பிய கேள்விக்கு அன்புமணி அவரது வீட்டிற்கு அவர் சென்றார். இதில் என்ன இருக்கிறது என்றார்.

பா.ம.க இரண்டாக உள்ளதால் வாக்கு வங்கி பாதிக்குமா?
பா.ம.க எந்த அணியில் சேருகிறதோ, அந்த அணி இதுவரை இல்லாத வெற்றி பெரும். ஏனென்றால் அப்படிபட்ட பலமான கூட்டணி பாமக என்றார்.
கட்சி தலைவர் பதவியை தேர்தல் ஆணையத்தில் பதிவு செய்தீர்களா?
இனிமேல் சரியாக, முறையாக, உரிய நேரத்தில் எல்லாம் செய்யப்படும் உங்கள் சந்தேகங்கள் போக்கப்படும்.
தொண்டர்களுக்குள் குழப்பமே இல்லை.
அன்புமணி மாநாட்டில் கலந்து கொள்வாரா? என்ற கேள்விக்கு போக போக தெரியும் என பாடல் மூலம் பதில் தெரிவித்தார்.

திமுக உடன் கூட்டணியா?
மேலே பறந்து சென்ற பத்து காக்காக்களில் ஐந்து காக்கா வெள்ளை காக்கா பறந்து சென்றது அந்த வெள்ளை காக்கா தான் திமுகவுடன் பாமக கூட்டணி என உங்களிடம் தெரிவித்திருக்கும் என எண்ணுகிறேன்.
மத்திய அரசு கல்விக்கான நிதியை வழங்க மறுப்பது குறித்த கேள்விக்கு
அதனை தொடர்ந்து வலியுறுத்தி கேட்டு பெறுவோம், வடக்கு வாழ்கிறது தெற்கு தேய்கிறது. பிரதமர் தன்னுடைய நண்பர் என்பதால் அதனை கேட்டு பெறுவோம், தட்டுங்கள் திறக்கப்படும்.

இந்து சமய அறநிலையத்துறை நிதியை எடுத்து கல்லூரி கட்டுவதாக எடப்பாடி பழனிசாமி பேசியது குறித்த கேள்விக்கு
கோயில்களுக்கு சொந்தமாக நிலங்களோ, பணமோ அதிகமாக இருந்தால் அதனை கல்லூரி கட்டுமான பணிகளுக்கு பயன்படுத்துவது தவறில்லை.






















