Blood Pressure: உயர் ரத்த அழுத்தம் இருக்கா? இந்த உணவுகளை எல்லாம் கண்டிப்பா சாப்பிடுங்க...!
உயர் ரத்த அழுத்தம்(High blood pressure) காரணமாக உடலில் பல்வேறு சிரமங்களை நாம் எதிர்கொள்ள வேண்டிய நிலை ஏற்படும்.
உணவே மருந்து என்பதால் உயர் ரத்த அழுத்தத்தை(High blood Pressure) கூட உணவுப் பழக்கவழக்கத்தால் சீராக்கலாம் எனக் கூறுகிறார்கள் ஊட்டச்சத்து நிபுணர்கள்.
உயர் ரத்த அழுத்தம் எனும் சைலன்ட் கில்லர்:
உயர் ரத்த அழுத்தம் என்பது எப்போதுமே நம் ரத்த அழுத்தத்தின் அளவு 140/90 என்றளவில் இருப்பதாகும். உயர் ரத்த அழுத்தம் தனிப்பட்ட ஒரு நோயாக கவனம் பெறுவதைவிட அதனால் மாரடைப்பு ஏற்படலாம், பக்கவாதம் ஏற்படலாம், சிறுநீரகக் கோளாறு ஏற்படலாம் என்பதனால் அதிக கவனம் பெறுகிறது.
இதில் இன்னொரு கவலை கொள்ளும் விஷயம் என்னவென்றால் உயர் ரத்த அழுத்தம் பெரும்பாலும் ஒரு சைலன்ட் கில்லர் போல் செயல்படுகிறது. சரி, உயர் ரத்த அழுத்தம் ஏன் ஏற்படுகிறது? என்று பார்ப்போம். அதிக மன அழுத்தம், முறையற்ற வாழ்க்கை முறை ஆகியனவையே உயர் ரத்த அழுத்தத்திற்குக் காரணமாக இருக்கின்றன.
இந்த தவறான பழக்கவழக்கங்கள் கூடாது என்று மக்களுக்கு விழிப்புணர்வு ஏற்படுத்தவே ஆண்டுதோறும் உலக உயர் ரத்த அழுத்த தினமானது மே 17 அன்று கடைபிடிக்கப்படுகிறது. உலக சுகாதார அமைப்பின் கூற்றின்படி, உயர் ரத்த அழுத்தம் என்பது உலகம் முழுவதும் நிகழும் அகால மரணங்களுக்கு பெரும் காரணமாக இருக்கிறது. மேலும் உலகம் முழுவதும் 1.13 பில்லியன் மக்கள் உயர் ரத்த அழுத்தத்தால் பாதிக்கப்பட்டுள்ளனர்.
உயர் ரத்த அழுத்தத்தை எப்படி கையாள்வது?
உங்கள் குடும்பத்தில் யாருக்காவது உயர் ரத்த அழுத்தப் பிரச்சினை இருந்தால் உடனடியாக மருத்துவரை அணுகுவது சிறந்தது. மருத்துவர் பரிந்துரைக்கும் மருந்துகளுடன் வாழ்க்கை முறையையும் மாற்றியமைப்பது முக்கியம். அதில் உங்கள் அன்றாட உணவுப் பழக்கங்களும் அடங்கும். அதேபோல் மது அருந்தும் பழக்கம், புகைப்பிடிக்கும் பழக்கம் இருந்தால் அவற்றை கைவிடுவது சிறந்தது.
நிபுணர்கள் பலரும், உப்பைக் குறைக்க வேண்டும் என்றே வலியுறுத்துகின்றனர். காய்கறிகள், பழங்களை உணவில் அதிகம் சேர்த்துக் கொள்வது அவசியம். பொட்டாசியம் சீராக உடலுக்குக் கிடைப்பதை உறுதி செய்ய வேண்டும்.
உயர் ரத்த அழுத்தத்தை குறைக்க உதவும் உணவு வகைகள் | Foods to Lower High Blood Pressure
பச்சைக் காய்கறிகள்:
கீரைகளில் பொட்டாசியம் அதிகமாக உள்ளதால், சோடியத்தின் விளைவுகளை எதிர்த்து இரத்த அழுத்தத்தை குறைக்க உதவுகிறது. தக்காளி, உருளைக்கிழங்கு, பீட்ரூட், சர்க்கரைவள்ளிக்கிழங்கு, காளான்கள், பூண்டு போன்ற காய்கறிகள் மற்றும் முலாம்பழம், வாழைப்பழங்கள், அவகாடோ, கிவி, பெர்ரி பழங்கள், ஆரஞ்சு, ஆப்ரிகாட் போன்ற பழங்களில் நிறைந்துள்ள லைகோபீன், பொட்டாசியம், நைட்ரிக் அமிலம், மெக்னீசியம், வைட்டமின் சி, ஆன்தோசியானின்கள் இரத்த அழுத்தத்தை குறைக்க உதவும்.
பருப்புத் தானியங்கள்:
பீன்ஸ் மற்றும் பருப்பு வகைகளில் புரதம், நார்ச்சத்து மற்றும் பிற ஊட்டச்சத்துக்கள் நிறைந்துள்ளன, இரத்த நாளங்களின் செயல்பாட்டை மேம்படுத்துவதன் மூலமும் வீக்கத்தைக் குறைப்பதன் மூலமும் இரத்த அழுத்தத்தைக் குறைக்க உதவுகின்றன.
நட்ஸ்:
இதேபோல் பாதாம், பிஸ்தா மற்றும் வால்நட் போன்றவற்றில் பொட்டாசியம், மெக்னீசியம் மற்றும் நார்ச்சத்து அதிகம் உள்ளது. இவை அனைத்தும் இரத்த அழுத்தத்தைக் குறைக்க உதவும்.
முழு தானியங்கள்:
முழு தானியங்கள், குறிப்பாக உருட்டப்பட்ட ஓட்ஸில் பீட்டா-குளுக்கன் எனப்படும் நார்ச்சத்து உள்ளது. இது இரத்த அழுத்தத்தை குறைக்க உதவுகிறது. முழு தானிய உணவுகளை சீரான, ஆரோக்கியமான உணவில் சேர்த்துக்கொள்வது இரத்த அழுத்தத்தைக் குறைக்கவும், ஒட்டுமொத்த இதய ஆரோக்கியத்தை மேம்படுத்தவும் உதவும்.
பாக்கெட் உணவுகளை தவிர்த்தல்:
பதப்படுத்தப்பட்ட மற்றும் பாதுகாக்கப்பட்ட உணவுகள், சேர்க்கைகள் மற்றும் செயற்கை சுவையூட்டிகள் கொண்ட உணவுகள், சுத்திகரிக்கப்பட்ட உணவுகள் ஆகியவற்றில் சோடியம் அதிகமாக இருக்கும் என்பதால் அவற்றைப் பயன்படுத்துவதைக் கட்டுப்படுத்துவது அவசியம்.
கஃபினைக் குறைத்தல்:
கஃபினின் அதிகமான உட்கொள்ளுதல், அட்ரினலின் ஹார்மோன் வெளியீட்டைத் தூண்டும். இது தற்காலிகமாக இரத்த அழுத்தத்தை உயர்த்தக்கூடிய ஒரு தூண்டுதலாகும். எனவே, இரத்த அழுத்த அளவைப் பராமரிக்க உதவும் காஃபின் உட்கொள்ளலைக் குறைப்பது நல்லது.
குளிர்ந்த நீரில் குளியல்:
தூங்குவதற்கு முன் குளிர்ந்த நீரில் குளிப்பது நன்மை பயப்பதாகும். ஏனெனில் இது நல்ல தூக்கத்திற்கு சரியான வெப்பநிலையைக் கொண்டுவர உதவுகிறது. ஒரு நல்ல இரவு தூக்கம், இரத்த அழுத்தத்தைக் குறைப்பது உட்பட ஆரோக்கியத்தின் பல பகுதிகளுக்கு முக்கியமானது.