EPS - TVK Vijay: பாஜக-விற்கு குட்பை? எடப்பாடியுடன் கை கோர்க்கிறாரா விஜய்? காத்திருக்கு சம்பவம்!
அதிமுக கூட்டணிக்குள் விஜய்யை கொண்டு வருவதற்காக பாஜக-வை கூட்டணியில் இருந்து வெளியேற்ற எடப்பாடி பழனிசாமி முடிவு எடுத்துள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளது.

தமிழ்நாட்டில் அடுத்தாண்டு சட்டமன்ற தேர்தல் நடைபெற உள்ளது. இந்த தேர்தலில் முன்னிட்டு ஆளுங்கட்சியான திமுக ஆட்சியை கைப்பற்றவும், எதிர்க்கட்சியான அதிமுக மீண்டும் ஆட்சியை கைப்பற்றவும் தீவிரமாக பணியாற்றி வருகின்றனர்.
பலமான திமுக கூட்டணி:
திமுக பக்கம் காங்கிரஸ், மதிமுக, விசிக, இந்திய கம்யூனிஸ்ட், மார்க்சிஸ்ட் ஆகிய கட்சிகள் பக்கபலமாக உள்ளது. அதிமுக-வின் பக்கம் பாஜக, தமாக ஆகிய கட்சிகள் மட்டுமே உள்ளது. திமுக-வை வீழ்த்த இன்னும் பலமான கட்சிகள் சேர வேண்டியது அவசியம் ஆகும். மேலும், பாஜக-விற்கு எதிரான மனநிலை தமிழ்நாட்டில் இருப்பதால் அதிமுக கூட்டணிக்கு பின்னடைவாக உள்ளது.

இந்த நிலையில், அதிமுக கூட்டணியை மேலும் பலப்படுத்த அவர்கள் தங்கள் பக்கம் தவெக, சீமானை கொண்டு வர தீவிரம் காட்டி வருவதாக தொடர்ந்து தகவல்கள் வெளியாகி வந்தது. இதன் அடிப்படையிலே, எடப்பாடி பழனிசாமி தமிழக வெற்றிக் கழகத்திற்கும், நாம் தமிழருக்கும் அழைப்பு விடுத்துள்ளார்.
விஜய்க்கு வலை விரிக்கும் எடப்பாடி:
குறிப்பாக, அதிமுக கூட்டணியில் கோடிக்கணக்கான ரசிகர்களை கொண்ட நடிகர் விஜய் தங்கள் பக்கம் இருக்க வேண்டும் என்று அதிமுக-வினர் விரும்புகின்றனர். அவ்வாறு அமைந்தால் முதல் முறை தேர்தல் களத்தில் இறங்கும் விஜய்க்கு உள்ள வரவேற்பு தங்களுக்கு வாக்கு வங்கி அதிகரிக்கும் என்று அவர்கள் நம்புகின்றனர்.

ஆனால், தங்களது கொள்கை எதிரியான பாஜக இருக்கும் பக்கம் தாங்கள் ஒருபோதும் கூட்டணி வைக்க மாட்டோம் என்று விஜய் திட்டவட்டமாக தெரிவித்துள்ளார். தற்போதைய நிலவரப்படி, பாமகவிலும் அன்புமணி - ராமதாஸ் மோதல் நாளுக்கு நாள் உச்சகட்டமாகிக் கொண்டிருக்கும் நிலையில், ஒருங்கிணைந்த பாமக-வாக இல்லாமல் அவர்கள் கூட்டணிக்குள் வந்தால் அதிமுக-விற்கு பின்னடைவே என்று எடப்பாடி பழனிசாமி கருதுகிறார்.
பாஜக-விற்கு பை பை?
இதனால், தங்களுக்கு பக்கபலமாக நிற்க விஜய்தான் சரியான நபர் என்று எடப்பாடி தரப்பினர் ஆழமாக நம்புவதாக கூறப்படுகிறது. இதனால், விஜய்யை தங்கள் பக்கம் கொண்டு வர அவர்கள் பாஜக-வை கழட்டிவிட தயாராகி வருவதாக தகவல்கள் வெளியாகி வருகிறது. மேலும், தமிழ்நாட்டில் தனித்தே ஆட்சி என்று எடப்பாடி பழனிசாமியும், அதிமுக-வும் தொடர்ந்து கூறி வரும் நிலையில் பாஜக கூட்டணி ஆட்சிதான் என்று தொடர்ந்து அதிமுகவிற்கு தலைவலி தந்து வருகின்றனர்.

அதிமுக-வும், தவெக-வும் இணைந்து தேர்தலை எதிர்கொண்டால் மட்டுமே திமுக கூட்டணியை வீழ்த்த முடியும் என்று அரசியல் நிபுணர்களும் கணித்து வருகின்றனர். இதனால், விஜய் கூட்டணிக்குள் வர தடையாக உள்ள பாஜக-வை கழட்டிவிட எடப்பாடி பழனிசாமி தயாராகி வருவதாக தகவல்கள் வெளியாகியுள்ளது. தேர்தலுக்கு இன்னும் 10 மாதங்களே உள்ள நிலையில், அதிமுக எதிர்வரும் மாதங்களில் பாஜக-விற்கு குட்பை சொல்வார்கள் என்றே கணிக்கப்பட்டுள்ளது.
மேலும், முதலமைச்சர் எடப்பாடி - துணை முதலமைச்சர் விஜய் என்ற ஒப்பந்தத்துடன் இவர்கள் கூட்டணி அமைப்பார்கள் என்றும் தகவல்கள் கசிந்துள்ளது. இதனால், அடுத்து வரும் நாட்கள் தமிழ்நாட்டின் அரசியல் களம் மேலும் சூடுபிடிக்கும்.





















