Guest Lecturer: அரசு கலை, அறிவியல் கல்லூரி; 574 கவுரவ விரிவுரையாளர் இடங்களுக்கு விண்ணப்பிக்கலாம்- தகுதி, வழிமுறை இதோ!
Guest Lecturer Recruitment: நிரந்தர ஆசிரியர்கள் பணியமர்த்தப்படும் வரை, மாணாக்கர்களுக்கான கல்வி கற்றலில் தொய்வு ஏற்படாமல் இருக்க 574 கெளரவ விரிவுரையாளர்களை தற்காலிகமாக பணியமர்த்தப்பட உள்ளனர்.

நடப்புக் கல்வியாண்டில் அரசு கலை, அறிவியல் மற்றும் கல்வியியல் கல்லூரிகளில் 574 தற்காலிக கெளரவ விரிவுரையாளர்கள் பணியமர்த்தப்பட உள்ளனர். இதற்கான விண்ணப்பப் பதிவு தொடங்கி, நடைபெற்று வருகிறது.
சென்னை, இராணி மேரி கல்லூரியில் நடைபெற்ற நிகழ்ச்சியில், உயர்கல்வித் துறை அமைச்சர் முனைவர் கோவி. செழியன், அரசு கலை, அறிவியல் மற்றும் கல்வியியல் கல்லூரிகளில் தற்காலிக அடிப்படையில் நிரப்பபட உள்ள 574 கெளரவ விரிவுரையாளர்கள் நியமனத்திற்கான விண்ணப்ப பதிவு இணையதளத்தினை தொடங்கி வைத்தார்.
புதிதாக 15 அரசு கலை மற்றும் அறிவியல் கல்லூரிகள்
தமிழ்நாடு அரசு கலை மற்றும் அறிவியல் கல்லூரிகளில் 2025- 2026ஆம் கல்வியாண்டிற்கான மாணாக்கர்கள் சேர்க்கை நடைபெற்று வகுப்புகள் தொடங்கப்பட்டுள்ளன. அரசுக் கல்லூரி இல்லாத பகுதிகளில் நடப்பாண்டில் மட்டும் புதிதாக 15 அரசு கலை மற்றும் அறிவியல் கல்லூரிகள் தொடங்கப்பட்டுள்ளன. மேலும், மாணவர்களின் தேவைக்கேற்ப 15,000க்கும் மேற்பட்ட மாணாக்கர் சேர்க்கை இடங்கள் பல்வேறு பாடப் பிரிவுகளில் உருவாக்கப்பட்டன.
இதில் நிரந்தர ஆசிரியர்கள் பணியமர்த்தப்படும் வரை, மாணாக்கர்களுக்கான கல்வி கற்றலில் தொய்வு ஏற்படாமல் இருக்க 574 கெளரவ விரிவுரையாளர்களை தற்காலிகமாக பணியமர்த்தப்பட உள்ளனர்.
அதன்படி, அரசு கலை மற்றும் அறிவியல் கல்லூரிகளில் தற்காலிக கெளரவ விரிவுரையாளர்கள் உரிய கல்வித் தகுதியுடன் ஒளிவுமறைவற்ற முறையில், வெளிப்படைத் தன்மையுடன் நிரப்பிட கல்லூரிக் கல்வி ஆணையருக்கு அனுமதி வழங்ப்பட்டுள்ளது.
விண்ணப்பக் கட்டணம்
எஸ்சி/ எஸ்டி பிரிவினருக்கு - ரூ.100
பிற பிரிவினருக்கு - ரூ.200
ஊதியம்
மாதம் ரூ.25 ஆயிரம் (ஓராண்டில் 11 மாதங்களுக்கு மட்டும்)
விண்ணப்பிப்பது எப்படி?
இதற்கான விண்ணப்பங்களை https://tngasa.org/ என்ற இணையதளம் வழியாக விண்ணப்பிக்க வேண்டும். 34 பாடப்பிரிவுகளுக்கு அனுமதிக்கப்பட்டுள்ள 574 பணியிடங்களின் விவரங்கள் மேற்கண்ட இணையதளத்திலேயே தெரிவிக்கப்பட்டுள்ளன.
தேர்வு முறை என்ன?
இதற்கான விண்ணபப் பதிவு தொடங்கியுள்ள நிலையில், விண்ணப்பங்கள் பெறுவதற்கான இறுதி நாள் 04.08.2025 ஆகும். தமிழ்நாடு அரசின் நெறிமுறைகளைப் பின்பற்றியும், கல்வித்தகுதி மற்றும் நேர்முகத் தேர்வு மதிப்பீடுகளின் அடிப்படையிலும் தெரிவு செய்யப்படுவர்.
- விண்ணப்பதாரர் பதிவு.
- விண்ணப்பம் உள்ளீடு.
- மண்டலம் மற்றும் மாவட்டங்களை தெரிவு செய்தல்
- விண்ணப்பக் கட்டணத்தைச் செலுத்துதல்.
- விண்ணப்பம் பதிவிறக்கி அச்சிடுதல்
- சான்றிதழ்களைப் பதிவேற்றம் செய்தல்
விண்ணப்பதாரர்கள் மேலே உள்ள அனைத்து விவரங்களையும் அவை செய்யப்பட வேண்டிய நாட்களையும் உரிய நேரத்தில் கவனித்துச் செயல்பட வேண்டும்.
இதுதொடர்பான முழு விவரங்களை https://3.109.130.103/pdf/TNGAS-GL-Instruction-Tamil.pdf என்ற இணைப்பை க்ளிக் செய்து, அறியலாம்.
ஆட்சேர்ப்பு தொடர்பான விதிமுறைகளை https://3.109.130.103/pdf/Guidelines.pdf என்ற இணைப்பின் மூலம் பெறலாம்.
காலி இடங்கள் எவ்வளவு?
அதேபோல https://3.109.130.103/pdf/district-wise-GL-New.pdf என்ற இணைப்பில் காலியாக உள்ள பணி இடங்கள் குறித்த விவரங்கள் அளிக்கப்பட்டுள்ளன.
கூடுதல் விவரங்களுக்கு: https://tngasa.org/






















