மதுரையில் த.வெ.க., மாநாடு: மேடை மற்றும் பேரிகேட் அமைக்கும் பணிகள் தீவிரம் !
506 ஏக்கர் பரப்பளவில் மாநாடு நடைபெறுவதற்காக சுத்தம் செய்யப்பட்டு, தற்போது மேடை மற்றும் பொதுமக்கள் பேரிகேட் அமைக்கும் பணி தொடங்கியுள்ளது.

மதுரையில் த.வெ.க., இரண்டாவது மாநில மாநாடு நடைபெறும் இடத்தில் பணிகள் தொடக்கம் - காவல்துறை அனுமதி வழங்காத நிலையில் பணிகளைத் தொடங்கியுள்ளது த.வெ.க.,வினர்.
மதுரையில் த.வெ.க., இரண்டாவது மாநாடு நிகழ்ச்சி
தமிழ்நாடு சட்டசபை தேர்தலுக்கு கிட்ட தட்ட இன்னும் 10 மாதங்களே இருக்கும் சூழ்நிலையில், தமிழக சட்டசபை தேர்தலை சந்திக்க தமிழக வெற்றிக் கழகம் தயாராகி வருகிறது. மதுரை பாரப்பத்தி பகுதியில் 237 ஏக்கர் பரப்பளவில் தவெக இரண்டாவது மாநில மாநாடு நடத்த, இடம் தேர்வு செய்யப்பட்டு சுத்தம் செய்யப்பட்டு வருகிறது. வாகன பார்க்கிங்கிற்கு 217 ஏக்கர் ஒதுக்கப்பட்டு மாநாடுக்கு தயார் செய்யப்பட்டு வருகிறது. மாநாடு நடத்துவதற்காக சமீபத்தில் த.வெ.க., பொதுச் செயலாளர் ஆனந்த் தலைமையில் கால் கோள் ஊன்றும் நிகழ்வு நடைபெற்றது. இதில் மாவட்டச் செயலாளர்கள் உள்ளிட்ட நிர்வாகிகள் ஏராளமான பங்கேற்றனர். இதனை தொடர்ந்து சில மணி நேரங்களிலேயே த.வெ.க., தலைவர் விஜய் மாநாடு குறித்து தேதியையும் அறிவித்தார்.
காவல்துறை பாதுகாப்பு மற்றும் அனுமதி வழங்கக்கோரி மனு
அந்த வகையில் வரும் ஆகஸ்ட் 25- ஆம் தேதி மதுரை - தூத்துக்குடி தேசிய நெடுஞ்சாலை பாரபத்தி பகுதியில் 2- ஆவது மாநில மாநாடு நடைபெறும் என த.வெ.க., தலைவர் விஜய் அறிவித்துள்ளார். இதற்கு காவல்துறை பாதுகாப்பு மற்றும் அனுமதி வழங்கக்கோரி சில நாட்களுக்கு முன்பு தவெக பொதுச்செயலாளர் என்.ஆனந்த், மதுரை மாவட்ட காவல் கண்காணிப்பாளர் அரவிந்தை நேரில் சந்தித்து மனு அளித்தார். தவெக இரண்டாவது மாநில மாநாட்டிற்கு இன்னும் முழுமையாக ஒரு மாதம் உள்ளது. அதற்கான பணிகளை தற்போது தொடங்கி உள்ளது. இதற்காக 506 ஏக்கர் பரப்பளவில் நாடு நடைபெறுவதற்காக சுத்தம் செய்யப்பட்டு, தற்போது மேடை மற்றும் பொதுமக்கள் பேரிகேட் அமைக்கும் பணி தொடங்க உள்ளது.
இந்த மாநாட்டில் அதிகளவு தொண்டர்கள் இருப்பார்கள்
”மாநாட்டில் கொடுக்கப்பட்டுள்ள விதிமுறைகளை பின்பற்றி மக்களுக்கு இடையூறு இல்லாமல் சிறப்பாக நடத்துவோம் என்பதை தெரிவித்துக் கொள்கிறோம். கண்டிப்பாக வெற்றி மாநாடாக இருக்கும். தலைவர் எது தொட்டாலும் வெற்றியாக தான் இருக்கும். முதல் மாநாட்டில் கலந்து கொண்ட தொண்டர்களை விட இரண்டாவது மாநாட்டில் அதிக அளவில் தொண்டர்கள் கலந்து கொள்வார்கள்” - எனவும் கட்சியில் பொதுச் செயலாளர் என்.ஆனந்த் தெரிவித்துள்ளார் என்பது குறிப்பிடதக்கது.
த.வெ.க., மாநாட்டில் அதிகளவு கூட்டம் இருக்கும்
இந்த சூழலில் மாநாடு நடைபெறும் இடத்தை த.வெ.க., தொண்டர்கள் அவ்வப்போது ஆர்வத்துடன் தற்போதே பார்வையிட்டு வருகின்றனர். இதனால் மதுரையில் நடைபெறும் த.வெ.க., மாநாட்டிற்கு அதிகளவிலான கூட்டம் இருக்கும் என சொல்லப்படுகிறது. த.வெ.க., தொண்டர்கள் மாநாட்டிற்கு தொடர்ந்து விளம்பரங்களை செய்து வருகின்றனர்.





















