Rajasthan Election 2023: கோதாவில் 7 பேர்! ராஜஸ்தானில் முதலமைச்சர் நாற்காலிக்கு போட்டா போட்டி! நீங்களே பாருங்க
ராஜஸ்தான் மாநிலத்தில் முதலமைச்சர் பதவிக்கு 7 பேருக்கு மத்தியில் போட்டி நிலவுவது பா.ஜ.க. மத்தியில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
நாடு முழுவதும் பெரும் எதிர்பார்ப்பை ஏற்படுத்திய 5 மாநில தேர்தல்களில் மிசோரம் தவிர மற்ற நான்கு மாநிலங்களுக்கான தேர்தல் முடிவுகள் வெளியாகியது. இதில் தெலங்கானா தவிர சத்தீஸ்கர், ராஜஸ்தான் மற்றும் மத்திய பிரதேச மாநிலங்களில் பா.ஜ.க. வெற்றி பெற்றுள்ளது.
199 சட்டமன்ற தொகுதிகளை கொண்ட ராஜஸ்தான் மாநிலத்தில் அசோக் கெலாட் தலைமையிலான காங்கிரஸ் ஆட்சிக்கு பா.ஜ.க. முற்றுப்புள்ளி வைத்துள்ளது. சுமார் 112 தொகுதிகளில் தற்போது வரை முன்னிலையில் உள்ள பா.ஜ.க. ராஜஸ்தானில் ஆட்சியை பிடித்துள்ளது உறுதியாகியுள்ள நிலையில், ராஜஸ்தானின் அடுத்த முதலமைச்சர் யார்? என்ற கேள்வி எழுந்துள்ளது.
ராஜஸ்தானில் முதலமைச்சர் நாற்காலியில் அமரப் போவது யார்? என்பதற்கான போட்டியில் 7 பேருக்கு இடையே மல்லுக்கட்டு நடந்து வருகிறது.
வசுந்தர ராஜே:
ராஜஸ்தான் மாநிலத்தின் முன்னாள் மற்றும் முதல் பெண் முதலமைச்சரான வசுந்தரா ராஜே இந்த பட்டியலில் முன்னிலையில் உள்ளார். பா.ஜ.க.வின் தேசிய துணைத் தலைவராக உள்ள வசுந்தர ராஜே 5 முறை எம்.பி.யாகவும் பொறுப்பு வகித்துள்ளார். ஆனால், இவருக்கும் பா.ஜ.க.வின் முக்கிய தலைவர்களுக்கும் இடையே கருத்து வேறுபாடு இருப்பதால் இவருக்கு முதலமைச்சர் பதவி வழங்கப்படுமா? என்பதில் கேள்வி எழுந்துள்ளது.
கஜேந்திர சிங் ஷெகாவத்:
56 வயதான மத்திய அமைச்சரான கஜேந்திரசிங் ஷெகாவத் முதலமைச்சருக்கான போட்டியில் உள்ளார். மத்திய நீர்வளத்துறை அமைச்சரான ஷெகாவத் ராஜ்புத் சமூகத்தின் முக்கிய தலைவராக உள்ளார். அசோக் கெலாட்டின் மகன் வைபவை தோற்கடித்து ஜோத்பூர் தொகுதியில் வெற்றி பெற்று எம்.பி.யாக வெற்றி பெற்றார். இவரும் முதலமைச்சர் போட்டியில் முக்கிய நபராக உள்ளார்.
தியா குமாரி:
முதலமைச்சர் போட்டியில் உள்ள முக்கிய நபர் தியாகுமாரி. இவர் ஜெய்ப்பூர் அரச குடும்பத்தைச் சேர்ந்தவர். 2013ம் ஆண்டு பா.ஜ.க.வில் இணைந்தார். குஜராத்தின் முதலமைச்சராக மோடியும், வசுந்தரராஜே மற்றும் ராஜ்நாத்சிங் முன்னிலையில் அவர் பா.ஜ.க.வில் இணைந்தார். பா.ஜ.க. முக்கிய தலைவர்களிடம் செல்வாக்கு மிக்க நபராக இவர் இருப்பதால் இவருக்கு முதலமைச்சர் பதவி தர வாய்ப்பு இருப்பதாக தகவல்கள் வெளியாகியுள்ளது.
சி.பி.ஜோஷி:
முதலமைச்சர் பதவிக்கான போட்டியில் முன்னணியில் இருப்பவர்களில் முக்கியமானவர் சி.பி.ஜோஷி. 2019ம் ஆண்டு நடந்த மக்களவைத் தேர்தலில் காங்கிரஸ் வேட்பாளர் கிரிஜா வியாசை மாபெரும் வாக்கு வித்தியாசத்தில் வீழ்த்தியவர். காங்கிரஸ் மாணவர் அமைப்பில் உறுப்பினராக தன் அரசியல் வாழ்க்கையைத் தொடங்கியவர் தற்போது பா.ஜ.க.வின் முதலமைச்சராக தேர்வு செய்யப்படும் நபர்களில் ஒருவராக உள்ளார்.
பாலக்நாத் யோகி:
உத்தரபிரதேச முதலமைச்சர் யோகி ஆதித்யநாத்தைப் போல, சன்னியாசியான பாலக்நாத் யோகியும் ராஜஸ்தானில் உள்ள முக்கிய சன்னியாசிகளில் ஒருவர். இவருக்கு நாத் மற்றும் ஆழ்வார் சமூக ஆதரவு உள்ளது. 6 வயது முதல் சன்னியாச வாழ்வில் ஈடுபட்டு வரும் பாலக்நாத் யோகி பா.ஜ.க.வின் முதலமைச்சர் பட்டியலில் தேர்வாக வாய்ப்புகள் அதிகளவில் உள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளது.
அர்ஜூன் ராம் மேவால்:
மத்திய அமைச்சர் அர்ஜூன் ராம் மேக்வால் பா.ஜ.க.வின் முக்கிய தலைவர்களில் ஒருவர் ஆவார். மோடியுடன் நெருக்கமான நண்பர்களில் ஒருவரான அர்ஜூன் ராம், அந்த மாநில தலித் தலைவர்களில் ஒருவராக உள்ளார். மோடியின் நெருக்கமான நண்பர்களில் ஒருவராக உள்ள அர்ஜூன் ராம் மேவாலுக்கு முதலமைச்சர் பதவி வழங்கப்படலாம் என்றும் தகவல்கள் வெளியாகியுள்ளது.
சதீஷ் பூனியா:
ராஜஸ்தான் மாநில பா.ஜ.க.வின் முன்னாள் தலைவரான சதீஷ் பூனியாவும் முதலமைச்சராக நியமிக்கப்பட வாய்ப்பு உள்ளதாகவும் தகவல்கள் வெளியாகியுள்ளது.
வட இந்தியாவின் முக்கிய மாநிலமான ராஜஸ்தானில் மீண்டும் ஆட்சியை கைப்பற்றியுள்ள பா.ஜ.க.வின் சார்பில் முதலமைச்சர் நாற்காலியை அலங்கரிக்க 7 பேருக்கு மத்தியில் போட்டி நிலவுவது பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.