கூடுதல் வருமானம் பெற தேக்கு பயிரிடலாமே... விவசாயிகளுக்கு யோசனை
தேக்கிற்கு ஏழு முதல் பத்து நாட்கள் இடைவெளியில் ஈரப்பதத்திற்கு ஏற்ப நீர் பாய்ச்ச வேண்டும். விரைவான வளர்ச்சிக்கு சொட்டுநீர் பாசனம் சிறந்தது. மூன்று மாதத்தில் களை எடுக்க வேண்டும்.

தஞ்சாவூர்: மரம் வளர்ப்பதன் மூலம் மனிதன் வெளிவிடும் கரியமில வாயுவினை உட்கொண்டு மனித குலம் வாழ தேவையான பிராண வாயுவினை வெளியிடுகிறது. இதன் மூலம் காற்றை சுத்தப்படுத்தும் கருவியாக மரம் செயல்படுகிறது. விவசாய நிலங்களில் காற்றின் வேகத்தை கட்டுப்படுத்தும் கருவியாகும், மரங்கள் செயல்பட்டு மழை பெய்ய வைக்கும் மந்திரவாதியாகவும் உள்ளது என்றால் மிகை இல்லை.
கூடுதலாக மண்வளம் காக்கவும், காற்றில் ஈரப்பதத்தை காக்கவும், ஆரோக்கியமான தட்பவெட்ப நிலையை நிலை நிறுத்தவும் மரங்கள் பயன்படுகிறது. மரம் வளர்ப்பவர்களுக்கு கரம் வளர்க்கும் கடின மரம் தேக்கு என்றால் மிகையாகாது.
தேக்கு மரத்தின் விஞ்ஞான பெயர் டெக்டோனியா கிராண்டிஸ். இது வெர்பனேசியே குடும்பத்தை சேர்ந்தது. தரைமட்டத்தில் இருந்து 1200 மீட்டர் உயரம் வரை வளரும் தன்மை கொண்டது. வருடத்திற்கு ஆயிரம் முதல் 5000 மில்லி மீட்டர் வரை மழை பொழியக்கூடிய இடங்களில் வேகமாக வளரும். ஆழமான மண் வகை கொண்ட செழிப்பான மண்படுகைகளில் மளமளவென வளரும். காவிரி டெல்டா பகுதியான நீடாமங்கலம் அருகில் மூணாறு தலைப்பில் முதன்முதலாக நடப்பட்ட தேக்கு மரம் இன்றும் காட்சியளித்துக் கொண்டு உள்ளதை பார்க்கலாம்.
ஜனவரி முதல் ஏப்ரல் வரை பூப்பூத்து மே முதல் ஜூலை வரை விதைகளை தரக்கூடியது. மேட்டுப்பாத்தியில் விதைத்து ஒருநாள் ஈரமாகவும், மறுநாள் காய்ந்தும் 14 நாட்கள் தொடர்ந்து இருக்குமாறு பார்த்துக் கொள்ள வேண்டும். விதைகள் மூன்றாவது வாரத்தில் முளைக்கத் துவங்கும். 12 மாத கன்றினை எடுத்து நடவு செய்யலாம்.
தண்டுப்பகுதி 2.5 சென்டிமீட்டர் நீளம் வைத்து வெட்டி விட வேண்டும். கிழங்கு மற்றும் வேர்ப்பகுதி 22.5 சென்டிமீட்டர் இருக்க வேண்டும். ஒரு அடி ஆழம், ஒரு அடி அகலம், ஒரு அடி நீளம் குழி எடுத்து இரண்டு மீட்டருக்கு இரண்டு மீட்டர் இடைவெளி விட்டு நடவு செய்ய வேண்டும். ஒரு குழிக்கு இரண்டு கிலோ தொழு உரம் மற்றும் 100 கிராம் டிஏபி கலந்து இட வேண்டும். நடவு செய்ய செப்டம்பர், அக்டோபர் மாதம் சிறந்தது.
தேக்கிற்கு ஏழு முதல் பத்து நாட்கள் இடைவெளியில் ஈரப்பதத்திற்கு ஏற்ப நீர் பாய்ச்ச வேண்டும். விரைவான வளர்ச்சிக்கு சொட்டுநீர் பாசனம் சிறந்தது. மூன்று மாதத்தில் களை எடுக்க வேண்டும். ஆறு மாசத்துக்கு ஒரு முறை கட்டாயம் கவாத்து செய்ய வேண்டும். 4,8,12, 18, 26, 36 ஆண்டுகளில் இடைவெளியை களைய வேண்டும். சாதாரணமாக ஒரு ஆண்டில் வேகமாக வளரும். நல்ல பாசனம் உள்ள இடங்களில் 20 ஆண்டுகள் வரையிலும், வயல் வரப்புகளில் 15 ஆண்டுகள் வரை வளர்க்கலாம்.
தேக்கு மரம் மிகவும் அழுத்தமான மர வகையை சேர்ந்தது. இதன் அடர்த்தி 60 கிலோ- மீ3. இதனால் தொழிற்சாலைகளிலும், வீட்டு உபயோக பொருட்களிலும் பயன்படுத்தப்படுகிறது. அபரிமிதமான ஆதாயத்தை பெற விவசாயிகள் வயல்களில் தேக்கு மரத்தை நட்டு கூடுதல் வருமானம் பார்க்கலாம். இவ்வாறு தெரிவிக்கப்பட்டுள்ளது.





















