IND vs ENG 3rd Test: சண்டை செஞ்சு தோக்கனும்.. சிராஜ், பும்ராவுக்கு ராயல் சல்யூட் - பாராட்டும் ரசிகர்கள்
இங்கிலாந்து அணிக்கு எதிரான போட்டியில் இந்திய அணி தோற்றாலும் ஜடேஜாவுடன் சேர்ந்து இந்திய அணிக்காக போராடிய பும்ரா, சிராஜுற்கு பாராட்டுகள் குவிந்து வருகிறது.

இந்தியா - இங்கிலாந்து அணிகள் மோதும் 3வது டெஸ்ட் போட்டி நேற்று நிறைவு பெற்றது. இந்த போட்டியில் இந்திய அணி இறுதிவரை போராடி தோல்வி அடைந்தது. இந்திய அணி இந்த போட்டியில் தோற்றாலும், இந்திய அணி போராடிய விதம் பாராட்டத்தகுந்ததாகவே இருந்தது.
போராடி தோற்ற இந்தியா:
குறிப்பாக, 193 ரன்கள் என்ற இலக்கை நோக்கி ஆடிய இந்திய அணி 4வது நாளான நேற்று முன்தினம் 4 விக்கெட்டுகளை இழந்த நிலையில், 5வது நாளான நேற்று மைதானம் முற்றிலும் பந்துவீச்சுக்கு சாதகமாக மாறியது. ரிஷப்பண்ட் 9 ரன்னில் அவுட்டாக, கே.எல்.ராகுல் 39 ரன்னில் அவுட்டாக, வாஷிங்டன் சுந்தர் டக் அவுட்டாக 82 ரன்களுக்கு இந்திய அணி 7 விக்கெட்டுகளை இழந்தது.
போராடிய பும்ரா, சிராஜ்:
அதன்பின்பு, ஜடேஜாவுடன் சேர்ந்த நிதிஷ் ரெட்டி 13 ஓவர்கள் வரை தாக்குப்பிடித்தார். அவரும் இந்திய அணி 112 ரன்கள் எடுத்தபோது அவுட்டாக, இந்திய அணி அடுத்து என்ன செய்யப்போகிறது? என்றே அனைவரும் கருதினர். ஆனால், ஜடேஜாவுடன் சேர்ந்த பும்ரா முன்னாள் கேப்டன் என்ற பொறுப்புடன் பந்துகளை நிதானமாக எதிர்கொண்டார்.
வெற்றியை விரைவில் பெற வேண்டும் என்ற நோக்கத்தில் வோக்ஸ், ஆர்ச்சர், கேப்டன் பென் ஸ்டோக்ஸ், கர்ஸ் மாறி, மாறி வேகப்பந்துவீச்சு தாக்குதல் நடத்தினர். ஆனால், மனம் தளராமல் பும்ரா பந்துகளை எதிர்கொண்டார். 40வது ஓவரில் உள்ளே வந்த பும்ரா 62வது ஓவர் வரை களத்தில் இருந்தார்.
கடைசியாக அவர் பென் ஸ்டோக்ஸ் பந்தில் அவுட்டானார். அவர் 53 பந்துகளை எதிர்கொண்டார். அதில் 1 பவுண்டரியுடன் 13 ரன்கள் எடுத்தார். 147 ரன்களுடன் இந்திய அணி இருந்தபோது பும்ரா அவுட்டாகியதால், அடுத்து வரும் சிராஜை எளிதில் அவுட்டாக்கி வெற்றி பெறலாம் என்று இங்கிலாந்து நினைத்தது. ஆனால், சிராஜ் அவ்வளவு எளிதாக தனது விக்கெட்டைப் பறிகொடுக்கவில்லை.
சல்யூட்:
ஜடேஜாவுடன் இணைந்து தன் பங்கிற்காக இந்திய அணியின் வெற்றிக்காக போராடினார். பந்துவீச்சாளராக 4 விக்கெட்டுகளை இந்த டெஸ்டில் வீழ்த்திய சிராஜ், பேட்ஸ்மேனாக போராடினார். இந்திய அணி ரசிகர்கள் எதிர்பார்த்தை காட்டிலும் நன்றாகவே போராடினார். ஜடஜோவும் அவருக்கு ஏற்றாற்போல ஓவருக்கு ஓரிரு பந்துகள் மட்டுமே வாய்ப்பு வழங்கினார்.
ஜடேஜா - சிராஜ் பார்ட்னர்ஷிப் மட்டும் 14 ஓவர்கள் வரை ஆடினர். கடைசியாக வெற்றிக்கு 22 ரன்கள் இருந்தபோது, சிராஜ் 30 பந்துகளில் 4 ரன்கள் எடுத்து அவுட்டானார். பஷீர் பந்தில் இவரது பேட்டில் பட்ட பந்து ஸ்டம்பில் பட்டு பெயில்ஸ் கீழே விழுந்து அவர் அவுட்டானார். இதனால், இந்திய அணியின் போராட்டம் கடைசியில் முடிவுக்கு வந்தது.
குவியும் பாராட்டுகள்:
இந்திய அணி இந்த போட்டியில் தோற்றாலும், சவாலான கடைசி நாளில் பந்துவீச்சுக்கு சாதகமாக இருந்த மைதானத்தில் கடைசி 2 விக்கெட்டுகள் ஜோடி மட்டும் 58 ரன்கள் எடுத்தனர். இதில், பெரும்பாலான ரன்களை ஜடேஜா அடித்திருந்தாலும் அவருக்கு நல்ல ஒத்துழைப்பை பும்ராவும், சிராஜும் வழங்கியிருந்தனர். அவர்கள் இருவரையும் இந்திய அணி ரசிகர்கள் பாராட்டி வருகின்றனர்.
பேட்ஸ்மேன்கள் ஜெய்ஸ்வால், கருண் நாயர், கேப்டன் கில், ரிஷப்பண்ட், வாஷிங்டன் சுந்தர், நிதிஷ் ரெட்டி யாரேனும் நீண்ட இன்னிங்ஸ் ஆடியிருந்தால் இந்திய அணி வெற்றி சாத்தியம் ஆகியிருக்கும்.




















