டெல்டா மாவட்டங்களில் அரிசி அரவை ஆலைகள் முடக்கம்: என்ன காரணம்?
மத்திய அரசு செறிவூட்டப்பட்ட அரிசியை, தமிழக நுகர்பொருள் வாணிபக்கழகம் மூலம், ஒவ்வொரு அரிசி ஆலைகளுக்கும் வழங்கும். அதன்படி 50 கிலோ அரிசிக்கு, ஒரு கிலோ செறிவூட்டப்பட்ட அரிசியை கலந்து வழங்குவோம்.

தஞ்சாவூர்: டெல்டா மாவட்டங்களில் அரிசி அரவை ஆலைகள் முடங்கி போய் உள்ளதாக தகவல்கள் வெளியாகி உள்ளன. எதனால் தெரியுங்களா?
செறிவூட்டப்பட்ட அரிசி வழங்கப்படாததால் டெல்டா மாவட்டங்களில் அரிசி அரவை ஆலைகள் செயல்படாமல் முடங்கி உள்ளன. இதனால் தொழிலாளர்களும் வேலை இழந்து வேறு பணிக்கு செல்லும் நிலை ஏற்பட்டுள்ளது.
இந்தியா முழுவதும், பொதுமக்களிடையே ரத்தசோகை மற்றும் நுண்ணூட்டச்சத்து குறைபாட்டை குறைக்கும் நோக்கில், ரூ.17 ஆயிரத்து 82 கோடி செலவில், உணவுச்சட்டத்தின் கீழ் இலவச செறிவூட்டப்பட்ட அரிசி வழங்கும் திட்டத்தை, மத்திய அரசு கொண்டு வந்தது. இந்திய உணவு பாதுகாப்பு மற்றும் தர ஆணையமான எப்.எஸ்.எஸ்.ஏ.ஐ., பரிந்துரைத்த தரத்தின்படி, வழக்கமான அரிசியுடன் இரும்புச்சத்து மற்றும் வைட்டமின் பி12 ஆகியவை சேர்க்கப்பட்டு, பொதுவினியோக திட் டம் மூலம் பொதுமக்களுக்கு வினியோகம் செய்யப்படுகிறது.
இந்த நிலையில், பொதுவினியோகத் திட்டத்திற்கான அரிசி அரவை பணியை தமிழகத்தில் 900 அரிசி ஆலைகள் மூலமும், இதுதவிர அரசு அரிசி ஆலைகள் மூலமும், தமிழ்நாடு நுகர்பொருள் வாணிபக்கழகம் மேற்கொண்டு வருகிறது. இதற்காக விவசாயிகளிடம் இருந்து நேரடி நெல்கொள்முதல் நிலையம் மூலம் பெறப்படும் நெல், குடோனுக்கு கொண்டு சென்று, அரிசி ஆலைகளுக்கு அனுப்பப்படுவது வழக்கம்.
காவிரி டெல்டா மாவட்டங்களான தஞ்சை, நாகை, திருவாரூர், மயிலாடுதுறை மாவட்டங்களிலும் நுகர்பொருள் வாணிப கழகம் மூலம் அரசு நேரடியாக நெல் கொள்முதல் செய்து சேமிப்பு கிடங்கில் இருப்பு வைப்பதோடு, அரிசி அரவை ஆலைகளுக்கும் அனுப்பி வருகிறது. டெல்டா மாவட்டங்களில் மட்டும் 150-க்கும் மேற்பட்ட அரிசி அரவை ஆலைகள் செயல்பட்டு வருகின்றன. இங்கு அரவை செய்யப்படும் அரிசி மூட்டைகள் தமிழகத்தின் பல்வேறு மாவட்டங்களுக்கு சரக்கு ரயில் மற்றும் லாரிகளில் அனுப்பப்பட்டு வருகிறது.
இந்த அரிசி ஆலைகளில், அரைக்கப்பட்டு அரிசியுடன் செறிவூட்டப்பட்ட அரிசியை சேர்க்க தேவையான செறிவூட்டப்பட்ட அரிசிகள் ஆலைகளுக்கு வழங்கப்படவில்லை. இதனால் கடந்த ஒரு மாதமாக அரிசி ஆலைகளில் அரவை பணிகள் முடங்கியுள்ளன. இதனால் நேரடி நெல்கொள்முதல் நிலையங்களில் கொள்முதல் செய்யப்பட்டும் நெல் மூட்டைகள், நேரடி நெல்கொள்முதல் நிலையம், லாரிகள், நுகர்பொருள் வாணிபக் கழக குடோன்களில், பல நாட்களாக தேக்கமடைந்துள்ளது.
பொது வினியோகத்திட்டத்திற்கான அரிசி வினியோக பணிகளும் வெகுவாக பாதிக்கப்பட்டு, ரேஷனில் அரிசி தட்டுப்பாடு ஏற்பாடு அபாயம் உள்ளதாக தனியார் அரிசி ஆலை முகவர்கள் தெரிவிக்கின்றனர். இது குறித்து அரிசி ஆலை முகவர்கள் தரப்பில் கூறியதாவது:
மத்திய அரசு செறிவூட்டப்பட்ட அரிசியை, தமிழக நுகர்பொருள் வாணிபக்கழகம் மூலம், ஒவ்வொரு அரிசி ஆலைகளுக்கும் வழங்கும். அதன்படி 50 கிலோ அரிசிக்கு, ஒரு கிலோ செறிவூட்டப்பட்ட அரிசியை கலந்து வழங்குவோம். இதன்மூலம் தமிழகம் முழுவதும் 11 லட்சம் டன் பொது வினியோக திட்டத்திற்கு அனுப்பி வைக்கப்படும்.
ஒரு மாதம் தமிழகம் முழுவதும் ரேஷன் கடைகளுக்கு 3.50 லட்சம் டன் அரிசி வினியோகிக்கப்படுகிறது. தற்போது மூன்று மாத தேவைக்கான அரிசி மட்டுமே இருப்பு இருப்பதாக கூறுகின்றனர். இந்நிலையில், கடந்த ஒரு மாதங்களாக செறிவூட்டப்பட்ட அரிசி, ஆலைகளுக்கு வழங்கப்படாததால், அரவை பணிகள் பாதிக்கப்பட்டுள்ளன. வேலை இல்லாத சூழலில் அரிசி ஆலையில் வேலை பார்த்தவர்களும் காத்திருந்து, காத்திருந்து குடும்பத்தை காப்பாற்றுவதற்காக வேறு பணிக்கு சென்று விட்டனர். இதனால் உரிமையாளர்கள் வெகுவாக பாதிக்கப்பட்டுள்ளனர். தற்போது இயங்கிக் கொண்டு இருக்கும் சில அரவை ஆலைகளும் நிறுத்தப்படும் சூழல் உருவாகியுள்ளது. இதற்கு அரசு உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும். இவ்வாறு அவர்கள் தெரிவித்தனர்.




















