சோனாலி போகத்துக்கு கட்டாயப்படுத்தி போதை பொருள் அளித்த உதவியாளர்... சிபிஐ அளித்த பகீர் தகவல்
சோனாலியின் உதவியாளர்களான சுதிர் சங்வான், சுக்விந்தர் சிங் ஆகியோர் அவருக்கு கட்டாயப்படுத்த போதைப் பொருள் உட்கொள்ள வைத்து கொலை செய்ததாக குற்றம்சாட்டப்பட்டுள்ளனர்.
பாஜக நிர்வாகி சோனாலி போகத், கடந்த ஆகஸ்ட் 23ஆம் தேதி காலை கோவாவில் மர்மமான முறையில் உயிரிழந்தார். ஹரியானாவைச் சேர்ந்த இவர் ஒரு டிக் டாக் நட்சத்திரம். பிக் பாஸிலும் பங்கேற்றுள்ளார். முதற்கட்ட தகவல்களின்படி, சோனாலி போகத் மாரடைப்பால் இறந்ததாக கூறப்பட்டது.
ஆனால், பின்னர் நடத்தப்பட்ட உடற்கூராய்வில் அவரது உடலில் காயங்கள் இருப்பது கண்டறியப்பட்டது. அவரின் இறப்பில் தொடர் மர்மம் நீடித்து வந்த நிலையில், வழக்கின் விசாரணை சிபிஐக்கு மாற்றப்பட்டது.
ஆகஸ்ட் மாதத்தில் அவர் இறப்பதற்கு சில மணி நேரங்களுக்கு முன்பு சோனாலி போகட்டின் தனி உதவியாளர், அவரை போதைப்பொருள் உட்கொள்ளும்படி கட்டாயப்படுத்தியதாக சிபிஐ பகீர் தகவலை பகிர்ந்தது.
சோனாலியின் உதவியாளர்களான சுதிர் சங்வான், சுக்விந்தர் சிங் ஆகியோர் அவருக்கு கட்டாயப்படுத்தி போதைப் பொருள் உட்கொள்ள வைத்து கொலை செய்ததாக குற்றம்சாட்டப்பட்டுள்ளனர். இருவரும், கடந்த ஆகஸ்ட் மாதம் கைது செய்யப்பட்டிருந்தனர்.
இந்நிலையில், குற்றம் சாட்டப்பட்ட இருவருக்கும் எதிராக கோவா நீதிமன்றத்தில் மத்திய புலனாய்வு அமைப்பு இன்று குற்றப்பத்திரிக்கை தாக்கல் செய்தது. இந்த வழக்கை சிபிஐ வசம் ஒப்படைப்பதற்கு முன்பு, கோவா போலீசார் முதல்கட்ட விசாரணையை மேற்கொண்டனர்.
முன்னதாக, பல தரப்பு ஒப்புதல் வாக்குமூலங்கள் மற்றும் சிசிடிவி கேமராகவை ஆராய்ந்த கோவா காவல்துறை, பல திடுக்கிடும் தகவல்களை வெளியிட்டிருந்தது. அஞ்சுனா கடற்கரையில் உள்ள பிரபல இரவு விடுதியான கர்லீஸில், உதவியாளர்கள் இருவரும் சேர்ந்து மெத்தம்பேட்டமைன் என்ற போதை பொருளை (மெத்) குடிக்க சோனாலியை கட்டாயப்படுத்தி உள்ளனர் என கோவா காவல்துறை தெரிவித்திருந்தது.
போதை பொருளை உட் கொண்ட பிறகு, சோனாலி அசெளகரியமாக உணர்ந்திருக்கிறார். அதைக் குடித்த பிறகு, அவரால் நடக்க கூட முடியவில்லை. மேலும், தாங்கள் தங்கியிருந்த கிராண்ட் லியோனி என்ற ஹோட்டலுக்கு சோனாலியை உதவியாளர்கள் அழைத்து சென்றனர்.
இதன் பின்னர்தான், மறுநாள் காலை செயின்ட் அந்தோணி மருத்துவமனைக்கு அவர் கொண்டு செல்லப்பட்டார். அங்கு அவர் இறந்துவிட்டதாக அறிவிக்கப்பட்டது. இந்த மாத தொடக்கத்தில், கர்லீஸ் உணவகத்தின் உரிமையாளர் எட்வின் நூன்ஸ், போதைப்பொருள் வழக்கில் கோவாவில் உள்ள அஞ்சுனாவில் தெலுங்கானா காவல்துறையால் கைது செய்யப்பட்டார்.
BJP leader Sonali Phogat's personal assistant among 2 accused by #CBI of forcing her to take drugs. Read more here. @BJP4Haryana #BJP #sonaliphogat
— The Telegraph (@ttindia) November 22, 2022
https://t.co/aeV7lJpoNt
இந்த செப்டம்பர் மாதம், சோனாலி போகட்டின் மரணத்திற்குப் பிறகு கைது செய்யப்பட்ட ஐந்து பேரில் நூன்ஸும் ஒருவர். பின்னர், அவர் ஜாமீனில் வெளியே வந்தார்.
மூன்று மாதங்களுக்கு முன்பு, தெலுங்கானாவில் போதைப்பொருள் கடத்தல் சம்பவம் ஒன்று நிகழ்ந்தது. இது தொடர்பாக, ஹைதராபாத்தில் காவல்துறையினரால் தேடப்படும் 12க்கும் மேற்பட்ட போதைப்பொருள் வியாபாரிகளில் நூன்ஸும் ஒருவர் என்பது குறிப்பிடத்தக்கது. கடந்த 2019 சட்டப்பேரவை தேர்தலில், சோனாலி போகட் போட்டியிட்டு தோல்வியடைந்தார். அவர் 2008 முதல் பாஜகவில் இருந்து வந்தார்.