MBBS Counselling 2025: இன்னும் 2 நாளில் தொடங்கும் மருத்துவக் கலந்தாய்வு; தரவரிசைப் பட்டியல், மாநில கலந்தாய்வு, வகுப்புகள் எப்போது?
எம்பிபிஎஸ், பிடிஎஸ் படிப்புகளுக்கான கலந்தாய்வு https://mcc.nic.in என்ற இணையதளத்தில் ஜூலை 21-ம் தேதி தொடங்க உள்ளது.

2025- 26ஆம் கல்வி ஆண்டு எம்பிபிஎஸ், பிடிஎஸ் உள்ளிட்ட இளநிலை மருத்துவப் படிப்புகளுக்கு மாணவர் சேர்க்கைக்கான மத்திய அளவிலான கலந்தாய்வு ஜூலை 21ஆம் தேதி தொடங்குகிறது.
தமிழகத்தில் உள்ள அரசு மருத்துவக் கல்லூரிகளில் இருக்கும் எம்பிபிஎஸ், பிடிஎஸ் இடங்களில் 15 சதவீதம் அகில இந்திய ஒதுக்கீட்டுக்கு ஒதுக்கப்படுகிறது. மீதமுள்ள 85 சதவீத இடங்கள், தனியார் மருத்துவக் கல்லூரிகளில் உள்ள அரசு மற்றும் நிர்வாக ஒதுக்கீட்டு இடங்களுக்கு ஒதுக்கப்படுகின்றன. இந்த நிலையில் ஜூலை 21ஆம் தேதி மத்திய இடங்களுக்கான கலந்தாய்வு தொடங்குகிறது.
இதுகுறித்து மருத்துவ கலந்தாய்வுக் குழு வெளியிட்டுள்ள அறிவிப்பில் கூறியிருப்பதாவது:
எம்பிபிஎஸ், பிடிஎஸ் படிப்புகளுக்கான கலந்தாய்வு https://mcc.nic.in என்ற இணையதளத்தில் ஜூலை 21-ம் தேதி தொடங்க உள்ளது. நீட் தேர்வில் தேர்ச்சி பெற்ற மாணவர்கள் மருத்துவ கலந்தாய்வு குழுவுக்கான இணைய தளத்தில் ஜூலை 21 முதல் 28ஆம் தேதி நண்பகல் 12 மணிக்குள் பதிவு செய்யவேண்டும். அன்று பிற்பகல் 3 மணி வரை கட்டணம் செலுத்தலாம்.
சாய்ஸ் ஃபில்லிங் எப்போது?
ஜூலை 22ஆம் தேதி முதல் 28-ம் தேதி நள்ளிரவு 11.55 மணி வரை இடங்களை தேர்வு செய்யலாம். தரவரிசைப் பட்டியல் அடிப்படையில் 29, 30ஆம் தேதிகளில் கல்லூரிகளில் இடங்கள் ஒதுக்கப்படும். அதன் விவரங்கள் 31ஆம் தேதி வெளியிடப்படும். மாணவர்கள் தங்களுக்கு இட ஒதுக்கீடு பெற்ற கல்லூரிகளில் ஆகஸ்ட் 1 முதல் 6ஆம் தேதிக்குள் சேர வேண்டும். சான்றிதழ் சரிபார்ப்புப் பணிகள் ஆகஸ்ட் 7, 8-ம் தேதிகளில் நடைபெறும்.
அடுத்தகட்டக் கலந்தாய்வு எப்போது?
2ஆம் சுற்றுக் கலந்தாய்வு ஆகஸ்ட் 12ஆம் தேதி தொடங்கி 18ஆம் தேதி வரை நடைபெற உள்ளது. இந்த முடிவுகள் ஆகஸ்ட் 21அம் தேதி வெளியாக உள்ளன. மாணவர்கள் தங்களுக்கு இட ஒதுக்கீடு பெற்ற கல்லூரிகளில் ஆகஸ்ட் 22 முதல் 29ஆம் தேதிக்குள் சேர வேண்டும். 3ஆம் சுற்று கலந்தாய்வு செப்டம்பர் 3ஆம் தேதி தொடங்கி, 8ஆம் தேதி வரை நடைபெற உள்ளது. மாணவர்கள் செப்டம்பர் 18ஆம் தேதிக்குள் கல்லூரிகளில் சேர வேண்டும்.
கலந்தாய்வுகளின் முடிவில் காலியாக உள்ள இடங்களை நிரப்புவதற்கான கலந்தாய்வு செப்டம்பர் 22-ம் தேதி தொடங்கி, 26ஆம் தேதி வரை நடைபெற உள்ளது.
https://mcc.admissions.nic.in/applicant/Root/Home.aspx?enc=yVQCIiq12npg+pcvNJRdcxL4RGWRavwvITXxESt2ZELsj6tl61jSOLd8ZN3rxrts என்ற இணைப்பை க்ளிக் செய்து, கலந்தாய்வுக்கு விண்ணப்பிக்கலாம்.
முக்கியத் தேதிகள் குறித்த விவரங்களை https://cdnbbsr.s3waas.gov.in/s3e0f7a4d0ef9b84b83b693bbf3feb8e6e/uploads/2025/07/20250712100.pdf என்ற இணைப்பை க்ளிக் செய்து அறியலாம்.
மாநிலக் கலந்தாய்வு விவரம்
மாநில அளவிலான கலந்தாய்வு தேதி அதிகாரப்பூர்வமாக இன்னும் அறிவிக்கப்படவில்லை. மத்திய அரசு சார்பில் ஜூலை 30 முதல் ஆகஸ்ட் 6ஆம் தேதி வரை கலந்தாய்வு நடத்தலாம் என்று தெரிவிக்கப்பட உள்ளது. இந்த மாணவர்களுக்கு விரைவில் தரவரிசைப் பட்டியல் வெளியிடப்பட உள்ளது.
இந்த விவரங்களை https://cdnbbsr.s3waas.gov.in/s3e0f7a4d0ef9b84b83b693bbf3feb8e6e/uploads/2025/07/2025071299.pdf என்ற இணைப்பில் காணலாம்.
வகுப்புகள் எப்போது?
இளநிலை மருத்துவப் படிப்புகளில் சேரும் மாணவர்களுக்கு, செப்டம்பர் 1ஆம் தேதி முதல் வகுப்புகள் தொடங்க உள்ளதாகவும் மருத்துவ கலந்தாய்வுக் குழு தெரிவித்துள்ளது.






















