Akshay Kumar: 650 ஸ்டண்ட் கலைஞர்களுக்கு மிகப்பெரிய உதவி; அசத்திய அக்ஷய் குமார் - என்ன செஞ்சுருக்கார் பாருங்க
பாலிவுட் நடிகர் அக்ஷய் குமார், 650 ஸ்டண்ட் கலைஞர்களுக்கு உதவும் வகையில் ஒரு விஷயத்தை செய்துள்ளார். அப்படி என்ன செய்தார் தெரியுமா.? பார்க்கலாம்.

பாலிவுட் நடிகர் அக்ஷய் குமார், இந்திய திரையுலகின் 650 ஸ்டண்ட் கலைஞர்களுக்கு பயனளிக்கும் வகையில், தனிப்பட்ட காப்பீடு ஏற்பாடு செய்து அசத்தியுள்ளார். அது குறித்த விவரங்களை தற்போது பார்க்கலாம்.
ரசிகர்களுக்காக ரிஸ்க் எடுக்கும் ஸ்டண்ட் கலைஞர்கள்
திரைப்படங்களில் வரும் ஸ்டண்ட் காட்சிகளுக்கென்று தனி ரசிகர்கள் பட்டாளம் உண்டு. அதற்காகவே ஸ்டண்ட் மாஸ்டர்கள், மிகவும் ரிஸ்க் எடுத்து ஸ்டண்ட் காட்சிகளை உருவாக்குவார்கள். அதிலும், பெரிய ஸ்டார்களின் படம் என்றால், ரிஸ்க் ரொம்பவே அதிகம். ஏனென்றால், தனித்துவமான ஸ்டண்ட் காட்சிகளை உருவாக்குவதற்காக, ஸ்டண்ட் யூனிட்டில் உள்ள அனைவருமே மெனக்கெடுவார்கள்.
இதனால், ஸ்டண்ட் கலைஞர்களின் வேலை மிகவும் ஆபத்தானது என்பது பெரும்பாலானோருக்கு தெரிந்த விஷயம்தான். திரையில் அட்டகாசமாக தெரிந்தாலும், கரணம் தப்பினால் மரணம் என்ற நிலையில்தான் ஸ்டண்ட் கலைஞர்கள் பணியாற்றுவார்கள்.
அவர்கள் பணியாற்றும்போது விபத்து ஏற்பட்டால், அது அவர்களது ஒட்டுமொத்த குடும்பத்தையே முடக்கிவிடும். இப்படி, ரசிகர்களுக்காக ரிஸ்க் எடுக்கும் அவர்களில் பலருக்கு காப்பீடு கிடையாது என்பது வருத்தத்திற்குரிய ஒரு விஷயம்.
650 ஸ்டண்ட் கலைஞர்களுக்கு காப்பீடு
இப்படிப்பட்ட சூழலில், ஸ்டண்ட் கலைஞர்களின் நிலையை உணர்ந்த அக்ஷய் குமார், அதற்கான தீர்வாக, 650 ஸ்டண்ட் கலைஞர்களுக்கு தனிப்பட்ட காப்பீடு ஏற்பாடு செய்துள்ளார். ஸ்டண்ட் கலைஞர்களின் உடல்நலன் மற்றும் விபத்து காப்பீடு உள்ளிட்ட பாதுகாப்பு திட்டத்தை அவர் உருவாக்கியுள்ளார்.
அதில், ஸ்டண்ட் கலைஞர்களுக்கு விபத்து ஏற்படும் பட்சத்தில், அவர்களுக்கு 5 லட்சம் முதல் 5.5 லட்சம் வரை பணமில்லா சிகிச்சை வசதி வழங்கப்படுகிறது.
அக்ஷய் குமார் இந்த முடிவை எடுக்க தூண்டிய விபத்து
தமிழில், பிரபல இயக்குநர் பா. ரஞ்சித் இயக்கத்தில் உருவாகும் வேட்டுவம் என்ற படத்தின் ஸ்டண்ட் காட்சி படமாக்கப்பட்டபோது, கார் பறப்பது போன்ற காட்சி உருவாக்கப்பட்டபோது விபத்து ஏற்பட்டு, ஸ்டண்ட் கலைஞர் ராஜு உயிரிழந்தார்.
அது குறித்த வீடியோவும் வெளியாகி பெரும் பரபரப்பை ஏற்படுத்தியதுடன், அதிர்வலைகளையும் ஏற்படுத்தியது. இச்சம்பவத்தால் ஏற்பட்ட தாக்கத்தால், பாலிவுட் ஹீரோ அக்ஷய் குமார், இத்தகைய ஒரு உதவியை ஸ்டண்ட் கலைஞர்களுக்கு செய்துள்ளார்.
தமிழ் திரையுலகில் எவ்வளவோ பெரிய ஹீரோக்கள் இருந்தும், அவர்களுக்கு உதிக்காத இந்த விஷயத்தை, பாலிவுட் ஹீரோ ஒருவர் செய்துள்ளார். அக்ஷய் குமார் இதற்கு முன்னரும் மனித நேயத்திற்காக அறியப்பட்டுள்ளார். அவரது இந்த செயல், ஒட்டுமொத்த ஹீரோக்களுக்கும் ஒரு பாடமாகவே உள்ளது. திரையில் நல்லது செய்தால் மட்டும் போதாது, நிஜத்திலும் செய்தால் தான் அவன் உண்மையான ஹீரோ என்பதை உணர்த்தியுள்ள அக்ஷய் குமார், ஒரு நிஜ ஹீரோவாக இப்போது ஜொலிக்கிறார்.





















