MBBS Fees: ஏழைகளுக்கு எட்டாக்கனி ஆகும் எம்பிபிஎஸ்; 10 ஆண்டுகளில் 200% அதிகரித்த மருத்துவப் படிப்பு கட்டணம்
MBBS Fees Hike: 2015ஆம் ஆண்டு 10 லட்சம் ரூபாயாக இருந்த ஆண்டு கல்விக் கட்டணம், 10 ஆண்டுகளில், 3 மடங்கு அதிகரித்து 30 லட்சம் ரூபாயாக உயர்ந்துள்ளது.

கடந்த 10 ஆண்டுகளில், எம்பிபிஎஸ் உள்ளிட்ட இளநிலை மருத்துவப் படிப்புகளில், தனியார் பல்கலைக்கழகங்களில் சேர்ந்து படிப்பதற்கான கட்டணம் 200 சதவீதம் அதிகரித்துள்ளது.
நீட் நுழைவுத் தேர்வு கட்டாயம்
நாடு முழுவதும் மருத்துவப் படிப்புகளில் சேர நீட் நுழைவுத் தேர்வு கட்டாயம் ஆக்கப்பட்டுள்ளது. இதில் தேர்ச்சி பெற்று, பெறும் மதிப்பெண்களின் அடிப்படையில் மாணவர்களுக்கு கல்லூரிகளில் இடம் ஒதுக்கப்படுகின்றன.
அரசு மருத்துவக் கல்லூரிகளில் அரசு ஒதுக்கீட்டு இடங்கள், மேலாண்மை ஒதுக்கீட்டு இடங்கள், தனியார் மருத்துவக் கல்லூரிகளில் அரசு ஒதுக்கீட்டு இடங்கள், மேலாண்மை ஒதுக்கீட்டு இடங்கள், நிகர்நிலைப் பல்கலைக்கழகங்களில் மேலாண்மை ஒதுக்கீட்டு இடங்கள் என மருத்துவ இடங்கள் பிரிக்கப்பட்டுள்ளன.
அந்த வகையில், கலந்தாய்வின்கீழ் அரசு மருத்துவக் கல்லூரிகளில் இருக்கும் எம்பிபிஎஸ், பிடிஎஸ் இடங்களில் 15 சதவீதம் அகில இந்திய ஒதுக்கீட்டுக்கு ஒதுக்கப்படுகிறது. மீதமுள்ள 85 சதவீத இடங்கள், தனியார் மருத்துவக் கல்லூரிகளில் உள்ள அரசு மற்றும் நிர்வாக ஒதுக்கீட்டு இடங்களுக்கு ஒதுக்கப்படுகின்றன. இந்த நிலையில் ஜூலை 21ஆம் தேதி மத்திய இடங்களுக்கான கலந்தாய்வு தொடங்குகிறது. மாநில இடங்களுக்கான கலந்தாய்வு ஜூலை 30ஆம் தேதி தொடங்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
கட்டணம் 200 சதவீதம் அதிகரிப்பு
இந்த நிலையில் கடந்த 10 ஆண்டுகளில், எம்பிபிஎஸ் உள்ளிட்ட இளநிலை மருத்துவப் படிப்புகளில், தனியார் பல்கலைக்கழகங்களில் சேர்ந்து படிப்பதற்கான கட்டணம் 200 சதவீதம் அதிகரித்துள்ளது தெரிய வந்துள்ளது.
அதாவது 2015ஆம் ஆண்டு 10 லட்சம் ரூபாயாக இருந்த ஆண்டு கல்விக் கட்டணம், 10 ஆண்டுகளில், 3 மடங்கு அதிகரித்து 30 லட்சம் ரூபாயாக உயர்ந்துள்ளது. இது கல்விக் கட்டணம் மட்டுமே. இதுபோக, விடுதிக் கட்டணம், பிற கட்டணங்களுடன் சேர்ந்து 33 முதல் 34 லட்சம் ரூபாய் ஆண்டுக்கு செலவாகிறது.

குறைந்தபட்சம் 1.5 கோடி ரூபாய் தேவை
தனியார் நிகர்நிலைப் பல்கலைக்கழகங்களில், ஒரு மாணவர் சேர்ந்து எம்பிபிஎஸ் படிப்பை படித்து முடிக்க குறைந்தபட்சம் 1.5 கோடி முதல் 1.9 கோடி ரூபாய் தேவைப்படுகிறது. இதனால் அரசுக் கல்லூரிகளில் இடம் கிடைக்காத ஏழை மாணவர்களுக்கு எம்பிபிஎஸ் படிப்பு என்பது எட்டாக் கனியாகி வருவதாக கல்வியாளர்களும் பெற்றோர்களும் வேதனை தெரிவித்து வருகின்றனர்.






















