பள்ளிகளில் ப வடிவ இருக்கை கட்டாயமா? அமைச்சர் அன்பில் மகேஸ் சொன்னது என்ன?
’’இருக்கை முறையை, ப வடிவத்துக்கு மாற்றிப் பாருங்கள். உங்களுக்கு பயனுள்ளதாக இருந்தால், அதை பின்பற்றிக் கொள்ளலாம் என்றே தெரிவித்துள்ளோம்.’’

பள்ளிகளில் ப வடிவ இருக்கை கட்டாயமில்லை என்று பள்ளிக் கல்வித்துறை அமைச்சர் அன்பில் மகேஸ் பொய்யாமொழி தெரிவித்துள்ளார்.
பள்ளிக் கல்வித் துறை அமைச்சர் அன்பில் மகேஸ் பொய்யாமொழி, ஜவ்வாது மலை பட்டறைக்காடு கிராமத்தில் உள்ள அரசு பழங்குடியினர் உண்டு உறைவிடப் பள்ளியில் கட்டப்பட்டு வரும் கூடுதல் வகுப்பறை கட்டடங்களைப் பார்வையிட்டு, புதிதாக கட்டப்படவுள்ள மாணவர் விடுதி குறித்து கேட்டறிந்தார். தொடர்ந்து செய்தியாளர்களைச் சந்தித்தார்.
கட்டாயம் என்று நாங்கள் சொல்லவில்லை
ப வடிவ இருக்கை முறையால், மாணவர்களுக்கு கழுத்து வலி ஏற்படும் என்று கூறப்படுகிறதே என்று செய்தியாளர் எழுப்பிய கேள்விக்கு பதிலளித்த அமைச்சர் அன்பில், ''பள்ளிகளில் ப வடிவ இருக்கை முறை கட்டாயம் என்று நாங்கள் சொல்லவில்லை. இருக்கை முறையை, ப வடிவத்துக்கு மாற்றிப் பாருங்கள். உங்களுக்கு பயனுள்ளதாக இருந்தால், அதை பின்பற்றிக் கொள்ளலாம் என்றே தெரிவித்துள்ளோம்.
தொடக்கப் பள்ளிகளில் ஏற்கெனவே ப வடிவ இருக்கை முறையில்தான் மாணவர்களை அமர வைத்து இருக்கிறோம். அந்த விதத்தில் குழந்தைகளை ப வடிவத்தில் உட்கார வைத்தால், கவனம் அதிகமாக இருக்கும் என்பதால் தெரிவித்தோம். இந்த முறை கட்டாயம் கிடையாது'' என்று அமைச்சர் அன்பில் மகேஸ் பொய்யாமொழி தெரிவித்துள்ளார்.
நடந்தது என்ன?
தமிழ்நாடு முழுவதும் உள்ள பள்ளிகளில், ஒன்றன்பின் ஒன்றாக உள்ள இருக்கை முறைக்கு பதிலாக, ப வடிவ இருக்கை முறை அறிமுகம் செய்யப்படுவதாக, அண்மையில் பள்ளிக் கல்வித்துறை அறிவிப்பு வெளியிட்டது.
இதன்படி ’’மாணவர்களில், கடைசி இருக்கை மாணவர்கள் இருக்க மாட்டார்கள், கவனச் சிதறல் இருக்காது, கற்றல் திறன் மேம்படும்’, குழு விவாதம், வினா விடை அமர்வுகள், சக கற்றல் ஆகியவற்றை ஊக்குவிக்கும். பிற மாணவர்கள் சக மாணவர்களிடம் பேசவும் பார்க்கவும் உதவும்’’ என்று பள்ளிக் கல்வித்துறை இயக்குநரகம் தெரிவித்து இருந்தது.
பிரச்சினைகளை பட்டியலிட்ட கல்வியாளர்கள்
எனினும் ப வடிவ இருக்கை முறை, பல்வேறு பிரச்சினைகளுக்கு வித்திடும் என்று எதிர்ப்புக் குரல்கள் எழுந்தன. கழுத்து வலி, நரம்புப் பிரச்சினை, பார்வைக் குறைபாடு ஆகியவை ஏற்படலாம் என்று கல்வியாளர்களும் ஆசிரியர்களும் கூறினர்.
’’பெரிய வகுப்பறைகள், தனித்தனி இருக்கைகள், வகுப்பறைக்கு 20 மாணவர்கள் என்றால் மட்டுமே இந்த இருக்கை முறை சாத்தியப்படும்’’ எனவும் கருத்துக் கூறப்பட்டது. இந்த நிலையில், அமைச்சர் இருக்கை முறை கட்டாயமில்லை என்று தெரிவித்துள்ளார்.






















