விவசாயிகள் கவனத்திற்கு... மானிய திட்டத்தில் பயன்பெற வேண்டுமா? - இதை படிங்க
5 ஏக்கர் பரப்பளவு வரையுள்ள சிறு,குறு விவசாயிகளுக்கு பாசனம் அமைப்பதற்கான கருவிகள் வாங்கும் செலவில் 100 சதவீத மானியம் வழங்கப்படும். பிற விவசாயிகளுக்கு 75 சதவீத மானியம் வழங்கப்படும்.

தஞ்சாவூர்: நுண்ணீர் பாசன மானிய திட்டத்தில் பயன்பெற விவசாயிகளுக்கு தஞ்சாவூர் வேளாண்மை இணை இயக்குனர் அழைப்பு விடுத்துள்ளார்.
தஞ்சாவூர் மாவட்ட விவசாயிகள் வேளாண் பயிர்களுக்கு பிரதமர் மந்திரி நுண்ணீர் பாசனத் திட்டத்தின்கீழ் மானியம் பெற்று பயனடையலாம் என வேளாண்மை இணை இயக்குநர் வித்யா தெரிவித்துள்ளார். இதுகுறித்து அவர் மேலும் தெரிவித்துள்ளதாவது:
தஞ்சாவூர் மாவட்டத்தில் தற்போது 2,700 ஏக்கர் பரப்பில் நுண்ணீர் பாசனம் அமைக்க இலக்கு நிர்ணயிக்கப்பட்டு ரூ.6 கோடி மானியம், வழங்கப்பட்டு வருகிறது. இதில் ஆதிதிராவிடர் பிரிவினருக்கு 718 ஏக்கர் ஒதுக்கப்பட்டுள்ளது. இத்திட்டத்தில் 5 ஏக்கர் பரப்பளவு வரையுள்ள சிறு,குறு விவசாயிகளுக்கு பாசனம் அமைப்பதற்கான கருவிகள் வாங்கும் செலவில் 100 சதவீத மானியம் வழங்கப்படும். பிற விவசாயிகளுக்கு 75 சதவீத மானியம் வழங்கப்படும்.
மேலும், சொட்டு நீர் பாசனத்தின் முக்கியமான சிறப்பம்சம் பாசன நீர் சேமிப்பு ஆகும். மற்ற பாசன முறைகளைக் காட்டிலும் சொட்டு நீர் பாசனத்தில் அதிக அளவில் நீர் சேமிக்கப்படுகிறது. பயிரிடப்பட்டுள்ள பரப்பளவில் 30 முதல் 40 விழுக்காடு மட்டுமே பாசனம் பெறுவதன் மூலமும், வாய்க்கால் வழிநீர் விரயம் முற்றிலும் தவிர்க்கப்படுவதன் மூலம் நுண்ணீர் பாசன நீர் 50 முதல் 60 விழுக்காடு வரை சேமிக்கப்படுகின்றது.
மேலும், இத்திட்டம் செயல்படுத்தப்படுவதால் நீர் பயன்பாட்டு திறன் அதிகரித்து அதிக விளைச்சல் அளிப்பதற்கும் உர பயன்பாட்டில் சிக்கனம் ஏற்படவும், களை வளர்ச்சி மற்றும் பூச்சி பூஞ்சாண தாக்குதல் குறைவாக உள்ளதென அறியப்பட்டுள்ளது. எனவே, விவசாயிகள் அனைவரும் மேற்கண்ட சொட்டுநீர் பாசனத்தின் பயன்களை அறிந்து, தங்கள் விளை நிலங்களில் வட்டார வேளாண்மை உதவி இயக்குநர்களை தொடர்பு கொண்டு சொட்டுநீர் பாசனம் அமைத்திட கேட்டுக்கொள்ளப்படுகிறது. இவ்வாறு அவர் கூறினார்.
இன்றைய சூழலில் பெருகிவரும் மக்கள் தொகைக்கேற்ப உணவு உற்பத்தியை பெருக்குவதும், நஞ்சற்ற உணவுகளை வழங்குவதும் விவசாயிகளுக்கும், விஞ்ஞானிகளுக்கும் மிகப்பெரிய சவாலாகவே இருந்து வருகிறது. வேளாண்மை தொழில், தமிழகத்தில் ஊரகப்பகுதிகளில் வாழும் 70 சதவீத மக்களின் வாழ்வாதாரமாக இருக்கிறது. வேளாண்மையில் ஏற்படும் மாற்றங்கள், தமிழகத்தின் பொருளாதார வளர்ச்சியில் பெரும் மாற்றங்களை ஏற்படுத்தும் என்பதால், வேளாண்மைக்கு அதிக முக்கியத்துவம் அளிக்கப்பட்டு வருகிறது.
வேளாண்மையை பொறுத்த வரையில், தோட்டக்கலைத்துறையில் தமிழக அரசு அதிக ஆர்வம் காட்டி வருகிறது. மேலும், தோட்டக்கலை சாகுபடியில் இந்தியாவிலேயே முதன்மை மாநிலங்களில் ஒன்றாகவும் தமிழகம் சிறந்து விளங்குகிறது. தேசிய அளவில் தோட்டக்கலை சாகுபடி உற்பத்தியில் 6.09 சதவீதத்தையும், பரப்பளவில் 5.47 சதவீதத்தையும் கொண்டுள்ளது. ஆண்டு முழுவதும் பல்வேறு வகையான தோட்டக்கலை பயிர்களை சாகுபடி செய்வதற்கு ஏற்ற வகையில் வேளாண் காலநிலையையும், புவியியல் நிலையையும் கொண்ட மாநிலமாகவும் தமிழகம் விளங்கி வருகிறது.
தோட்டக்கலை பயிர்களை மாற்று பயிராக சாகுபடி செய்வதின் மூலம் சிறு, குறு விவசாயிகளும் அதிக வருமானம் பெறுகிறார்கள். தோட்டக்கலை விளைபொருட்களை வேளாண் சார்ந்த தொழில்களுக்கு மூலப்பொருட்களாக பயன்படுத்துவதாலும், மதிப்புக்கூட்டு பொருட்களாக மாற்றுவதாலும் வேலைவாய்ப்பு ஏற்படுத்தப்படுவதுடன், ஏற்றுமதிக்கான வாய்ப்பும் பெருகுகிறது. எனவே தோட்டக்கலை மலைப்பயிர்கள் துறை, விவசாயிகளின் சீரான உயர்வுக்கான உற்பத்தியை அதிகரிப்பதுடன், மக்களின் அன்றாட அத்தியாவசிய தேவைகளை பூர்த்தி செய்வதற்கும், விளைபொருட்கள் குறுகிய கால சேமிப்பு திறனை கொண்டுள்ளதால், அவற்றை சேமிக்க முறையாக திட்டமிடுவதற்கும் பல்வேறு வளர்ச்சி திட்டங்கள் செயல்படுத்தப்பட்டு வருகிறது என்பதும் குறிப்பிடத்தக்கது.





















