சரசரவென விற்பனைக்கு வந்த இனிப்பு பட்டாசுகள்... நெல்லையில் புது முயற்சிக்கு வரவேற்பு...
பட்டாசு போன்று சாக்லேட் வடிவமைக்கப்பட்டு காட்சிப்படுத்தப்பட்டுள்ளதால் பெரியவர்களைவிட பட்டாசு மீது அதிகம் விரும்பம் கொண்ட இளையோர்கள், சிறு குழந்தைகளை இந்த பட்டாசு சாக்லேட்டுகள் வெகுவாக கவர்ந்துள்ளது .
நெல்லை வண்ணார்பேட்டையில் பிரபல தனியார் ஹோட்டல் நிறுவனம் செயல்பட்டு வருகிறது. குறிப்பாக இந்த ஹோட்டலில் புத்தாண்டு, பொங்கல் திருவிழா, கிறிஸ்துமஸ் என அனைத்து விழாக்காலங்களிலும் வாடிக்கையாளர்களை கவரும் வண்ணம் அந்த விழாவின் சிறப்பம்சங்களை கூறும் வகையிலும் உணவுகள், இனிப்பு வகைகள் என புதுமையாக முயற்சியை கையாள்வது வாடிக்கை.. இந்த நிலையில் இந்தாண்டு தீபாவளி பண்டிகை வரும் 24 ஆம் தேதி கொண்டாடப்பட உள்ளது. குறிப்பாக இன்னும் 4 நாட்களே உள்ள நிலையில் இறுதி கட்ட நிலையில் பட்டாசு, இனிப்பு, புத்தாடை என வாங்குவதில் ஆர்வம் காட்டி வருகின்றனர்.
அதிலும் தித்திக்கும் தீபாவளி என்றாலே இனிப்பு வகைகள் இன்றியமையாததாக காணப்படும். அந்த வகையில் இந்தாண்டு இனிப்பு வகைகள் தயார் செய்வதில் புதுமையை படைத்து வாடிக்கையாளர்களை கவர்ந்து வருகிறது பிரபல தனியார் ஹோட்டல் நிறுவனம். குழந்தைகளுக்கு இனிப்பு என்றாலே அலாதி ப்ரியம்தான். அதிலும் சாக்லேட் என்றால் அவர்கள் சந்தோஷத்திற்கு அளவு என்பதே இல்லை, அப்படியான சாக்லேட் வகைகளை பட்டாசு வடிவில் தயாரித்து குழந்தைகள் முதல் பெரியவர்கள் வரை அனைவரையும் ஈர்த்து வருகிறது. இதனை பொதுமக்கள் பலரும் தங்கள் குழந்தைகளுடன் வந்து ஆர்வமுடன் பார்த்து பார்த்து வாங்கி செல்கின்றனர். பட்டாசு போன்று அப்படியே சாக்லேட் வடிவமைக்கப்பட்டு காட்சிப்படுத்தப்பட்டுள்ளதால் பெரியவர்களை விட பட்டாசு மீது அதிகம் விரும்பம் கொண்ட இளையோர்கள், சிறு குழந்தைகளை இந்த பட்டாசு சாக்லேட்டுகள் வெகுவாக கவர்ந்துள்ளது .
இதனை தயாரித்த உணவு கலை நிபுணர்கள் கூறுகையில், தீபாவளிப்பண்டிகையில் பட்டாசு முக்கியத்துவம் பெறுவதுடன் அனைவரும் விரும்புவதால் பட்டாசை மையமாக வைத்து இந்த சாக்லேட்டை சிறப்பாக தயாரித்துள்ளோம், இதில் பல்வேறு ரகங்களில் முந்திரி, பாதாம் போன்ற உடலுக்கு நன்மை தரும் நட்ஸ் வகைகளை பயன்படுத்தி தயார் செய்துள்ளோம். ஒவ்வொரு ஆண்டும் மக்களை கவரும் வகையில் வித்தியாசமான முயற்சிகள் மேற்கொள்ளப்படும், அந்த வகையில் இந்தாண்டு பட்டாசு வடிவில் இனிப்புகள் தயார் செய்யப்பட்டுள்ளது. இது வட மாநிலங்களில் கிடைக்கும் சூழலில் தமிழ் நாட்டிலும் கிடைக்கும் வகையில் தயார் செய்து காட்சிபடுத்தியிருப்பது பெருமையான விசயமாக உள்ளது. 10 வடிவில் கிப்ட் பேக்காக 100 ரூபாய் முதல் 1000 ரூபாய் வரை வடிவமைக்கப்பட்டுள்ளது. குறிப்பாக மக்களின் பார்வையை கவரும் விதமாகவும், அவர்களின் சுவைக்கு தகந்தார் போலவும் செய்துள்ளோம். தீபாவளிப்பண்டிகைக்கு இன்னும் ஒரு சில நாட்களே உள்ள நிலையில் பட்டாசு சாக்லேட் அனைத்து தரப்பு மக்களையும் கவரும் என நம்புவதாகவும் தெரிவித்தனர்.
மேலும் செய்திகளை காண, ABP நாடு செய்திகளை Google News -ல் பின் தொடர இங்கே கிளிக் செய்யவும்