விவசாயிகளுக்கு ஓர் முக்கிய அறிவிப்பு! கடைசி தேதி ஜூலை 31 - இழப்பீடு பெற உடனே விண்ணப்பியுங்கள்!
மயிலாடுதுறை மாவட்டம் விவசாயிகள் குறுவை நெல் சாகுபடிக்கான காப்பீடு செய்ய ஜுலை 31 கடைசி நாள் என மயிலாடுதுறை மாவட்ட ஆட்சியர் தெரிவித்துள்ளார்.

எதிர்பாராத இயற்கை இடர்பாடுகளால் ஏற்படும் பயிர் இழப்புகளில் இருந்து விவசாயிகளைப் பாதுகாக்கும் நோக்கில், பிரதம மந்திரியின் திருத்தியமைக்கப்பட்ட பயிர் காப்பீட்டுத் திட்டம் நடைமுறையில் இருந்து வருகிறது. இந்நிலையில் இந்த காப்பீட்டுத் திட்டத்தின் கீழ், 2025-26 ஆம் ஆண்டு குறுவை பருவ நெல் பயிருக்குக் காப்பீடு செய்வதற்கான அறிவிப்பினை மயிலாடுதுறை மாவட்ட ஆட்சியர் வெளியிட்டுள்ளார். மேலும் விவசாயிகள் தங்கள் வாழ்வாதாரத்தைப் பாதுகாக்க இந்த வாய்ப்பைப் பயன்படுத்திக்கொள்ளுமாறு மயிலாடுதுறை மாவட்ட ஆட்சியர் ஹெச்.எஸ். ஸ்ரீகாந்த் கேட்டுக்கொண்டுள்ளார்.
புதுப்பிக்கப்பட்ட பிரதம மந்திரியின் பயிர் காப்பீட்டுத் திட்டம் 2020
புதுப்பிக்கப்பட்ட பிரதம மந்திரியின் பயிர் காப்பீட்டுத் திட்டம் 2020 -ஆம் ஆண்டு முதல் செயல்பட்டு வருகிறது.
இத்திட்டத்தின் முக்கிய நோக்கங்கள்
- இயற்கை இடர்பாடுகளால் ஏற்படும் பயிர் இழப்புகளுக்கு விவசாயிகளுக்கு இழப்பீடு வழங்குவது.
- விவசாயிகளின் வாழ்வாதாரத்தை நிலைப்படுத்துவது.
- வேளாண்மையில் நவீன தொழில்நுட்பங்களைப் பயன்படுத்த விவசாயிகளை ஊக்குவிப்பது.
மயிலாடுதுறை மாவட்டத்திற்கான விவரங்கள்
மயிலாடுதுறை மாவட்டத்தில் நடப்பு குறுவை பருவத்தில் பயிர் காப்பீட்டுத் திட்டத்தைச் செயல்படுத்த அக்ரிகல்சுரல் இன்சூரன்ஸ் கம்பெனி ஆப் இந்தியா லிமிடெட் நிறுவனம் (தொகுதி 10) தேர்வு செய்யப்பட்டுள்ளது.
மயிலாடுதுறை, குத்தாலம், சீர்காழி, கொள்ளிடம் மற்றும் செம்பனார்கோயில் ஆகிய வட்டாரங்களில் நெல் ஐ (குறுவை பருவம்) பயிரிடும் 235 வருவாய் கிராமங்கள் இத்திட்டத்தின் கீழ் அறிவிக்கை செய்யப்பட்டுள்ளன.
காப்பீட்டுத் தொகை மற்றும் பிரீமிய விபரம்
குறுவை நெல் பயிருக்கான காப்பீட்டுத் தொகையாக ஏக்கருக்கு 37,600 ரூபாய் நிர்ணயிக்கப்பட்டுள்ளது. விவசாயிகள் செலுத்த வேண்டிய பிரீமியம் தொகை 2 சதவீத விகிதத்தில் ஏக்கருக்கு ரூ.752 ஆகும்.
விண்ணப்பிப்பதற்கான கடைசி நாள் மற்றும் முறை
பயிர் காப்பீடு செய்ய கடைசி நாள் ஜூலை 31, 2025 ஆகும்.
கடன் பெறும் விவசாயிகள் :
தங்கள் பயிர்க்கடன் பெறும் தொடக்க வேளாண்மை கூட்டுறவு கடன் சங்கங்கள் அல்லது தேசியமயமாக்கப்பட்ட வங்கிகள் மூலமாக தங்கள் விருப்பத்தின் பேரில் பிரீமியம் செலுத்திப் பதிவு செய்துகொள்ளலாம்.
மற்ற விவசாயிகள்: தங்கள் பகுதியில் உள்ள பொது சேவை மையத்தை அணுகிப் பதிவு செய்துகொள்ளலாம்.
தேவையான ஆவணங்கள்
விவசாயிகள் இத்திட்டத்தின் கீழ் பதிவு செய்யும்போது, பின்வரும் ஆவணங்களைச் சமர்ப்பிக்க வேண்டும்
- முன்மொழிவு விண்ணப்பம்
- பதிவு விண்ணப்பம்
- கிராம நிர்வாக அலுவலர் வழங்கும் அடங்கல் (பசலி 1435)
- வங்கி கணக்கு புத்தகத்தின் முன் பக்க நகல்
- ஆதார் அட்டை நகல்
முக்கிய குறிப்புகள்
- காப்பீடு செய்யும்போது, பயிர் சாகுபடி செய்துள்ள வருவாய் கிராமத்தின் பெயர், புல எண், சாகுபடி பரப்பு, வங்கி கணக்கு எண் ஆகியன சரியாக உள்ளதா என்பதைச் சரிபார்த்துக்கொள்ள வேண்டும்.
- பதிவு செய்ததற்கான ரசீதை, பதிவு செய்த இடத்திலேயே பெற்றுக்கொள்ள வேண்டும்.
- பதிவு செய்த விவரங்களில் தவறு இருந்தால், காப்பீடு செய்யும் கடைசி தேதிக்குள் பதிவு செய்த இடத்திலேயே சரி செய்துகொள்ளலாம்.
தொடர்புக்கு
கூடுதல் விவரங்களுக்கு, அக்ரிகல்சுரல் இன்சூரன்ஸ் கம்பெனி ஆப் இந்தியா லிமிடெட் நிறுவன மாவட்ட ஒருங்கிணைப்பாளர் - செல்வம், தொலைபேசி எண் 9790004303 என்ற எண்ணில் தொடர்பு கொண்டு விளக்கங்களைப்பெற்றுக்கொள்ளலாம் எனவும் மாவட்ட ஆட்சியர் ஹெச்.எஸ். ஸ்ரீகாந்த் தெரிவித்துள்ளார்.
கடைசி நேரக் கூட்ட நெரிசலைத் தவிர்க்கவும், விண்ணப்பங்கள் விடுபடாமல் இருக்கவும், விவசாயிகள் முன்கூட்டியே பதிவு செய்து, பயிர்களுக்கு ஏற்படும் எதிர்பாராத மகசூல் இழப்புகளில் இருந்து பாதுகாத்து பயனடையுமாறு அறிவுத்தப்பட்டுள்ளது.





















