PM Modi: ”செஞ்ச வரைக்கும் போதும், நீங்க கிளம்புங்க” பிரதமர் மோடிக்கு செண்ட் ஆஃப் கொடுக்க RSS தீவிரம்?
PM Modi RSS: பிரதமர் மோடியை வீட்டிற்கு அனுப்ப ஆர்எஸ்எஸ் தீவிரம் காட்டுவதாக, எதிர்க்கட்சிகள் விமர்சித்து வருகின்றன.

PM Modi RSS: 75 வயதாகும் தலைவர்கள் பதவியில் இருந்து விலகி அடுத்தவர்கள் பணியாற்ற வாய்ப்பளிக்க வேண்டும் என, ஆர்எஸ்எஸ் தலைவர் மோகன் பகவத் பேசியுள்ளார்.
ஆர்எஸ்எஸ் தலைவர் பேச்சு:
தலைவர்கள் 75 வயதில் ஓய்வு பெற வேண்டும் என ஆர்எஸ்எஸ் தலைவர் மோகன் பகவத் பேசியது, ஓய்வு பெறும் விவகாரத்தில் சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது. நாக்பூரில் நடைபெற்ற நிகழ்ச்சியில் அண்மையில் பேசும்போது, 75 வயதில் ஒதுங்குவது குறித்து ஆர்எஸ்எஸ் சித்தாந்தவாதியான மறைந்த மொரோபந்த் பிங்லி கூறியதைக் குறிப்பிட்டார். அதன்படி, 75 வயது எனும் சால்வை உங்கள் மீது போர்த்தப்பட்டால், நீங்கள் ஒரு குறிப்பிட்ட வயதை அடைந்துவிட்டீர்கள் என்றும், நீங்கள் ஒதுங்கி மற்றவர்களை வேலை செய்ய விட வேண்டும் என்றும் அர்த்தம் என்று பிங்லி கூறியதாக” மோகன் பகவத் குறிப்பாகக் குறிப்பிட்டார். இதை கையிலெடுத்த காங்கிரஸ் கட்சி, ஆர்.எஸ்.எஸ் தலைவர் மற்றும் பிரதமர் நரேந்திர மோடியை கடுமையாக விமர்சித்துள்ளது. காரணம் இருவருமே வரும் செப்டம்பரில் 75 வயதை எட்ட உள்ளது குறிப்பிடத்தக்கது.
”பிரதமர் மோடிக்கு இப்படி ஒரு வரவேற்பா”
5 நாடுகளுக்கான வெளிநாட்டு சுற்றுப்பயணத்தை முடித்துக் கொண்டு பிரதமர் மோடி வியாழனன்று நாடு திரும்பிய நிலையில், புதன்கிழமை அன்று மோகன் பகவத் பேசியதை வைத்து,காங்கிரஸ் எம்.பி., ஜெய்ராம் ரமேஷ் சில கேள்விகளை எழுப்பியுள்ளது. இதுதொடர்பான டிவிட்டர் பதிவில், “விருதுகளை வென்ற பிரதமரே உங்களுக்கு இப்படி ஒரு வரவேற்பா. செப்டம்பர் 17ம் தேதி உங்களுக்கு 75 வயதாகிறது என்பதை ஆர்எஸ்எஸ் தலைவர் மீண்டும் நினைவூட்டியுள்ளார். அதேநேரம், செப்டம்பர் 11ம் தேதியுடன் மோகன் பகவத்திற்கும் 75 வயதாகிறது என்பதை அவருக்கு மோடியாலும் நினைவுபடுத்த முடியும்” என ஜெய்ராம் ரமேஷ் தெரிவித்துள்ளார்.
”ஆர்எஸ்எஸ் - மோடி இடையே மோதல்”
மோகன் பகவத்தின் பேச்சு பாஜக மற்றும் ஆர்எஸ்எஸ் இடையே மோதல் போக்கு நிலவுவதை அம்பலப்படுத்தியுள்ளதாக, உத்தவ் தாக்ரே ஆதரவு எம்.பி., ஆன பிரியங்கா சதுர்வேதி தெரிவித்துள்ளார். இதுதொடர்பாக பேசுகையில், “ இது ஒரு தெளிவான செய்தி, மேலும் இது செப்டம்பரில் தனது 75வது பிறந்தநாளைக் கொண்டாடப் போகும் நபரை நோக்கி இந்த கருத்து முன்னெடுக்கப்படுகிறது. ஆர்எஸ்எஸ் மற்றும் பாஜக இடையே என்ன நடக்கிறது என்பது அவர்களின் அறிக்கைகளிலிருந்து தெளிவாகத் தெரிகிறது. 2014 இல் பாஜக அரசாங்கத்தை அமைத்தபோது, அவர்கள் 75 வயதுக்கு மேற்பட்ட தலைவர்களை வழிகாட்டிகள் பிரிவில் வைத்தனர். இப்போது, 11 ஆண்டுகளுக்குப் பிறகு பாஜகவுக்கு அது அளித்த வாக்குறுதிகளையே ஆர்எஸ்எஸ் நினைவூட்டியுள்ளது. உள் மோதல்கள் இப்போது பகிரங்கமாகிவிட்டன... இந்த மோதலின் விளைவு யாருக்கும் தெரியாது” என பேசியுள்ளார்.
ஆம் ஆத்மி அட்டாக்:
முன்னதாக கடந்த ஆண்டு பேசிய ஆம் ஆத்மி கட்சி தலைவர் அரவிந்த் கெஜ்ரிவால், “75 வயதானவர்கள் ஓய்வு பெறுவார்கள் என்ற விதியை 2014 ஆம் ஆண்டு மோடி பிறப்பித்தார். அதன்படி, இந்த ஆண்டு அவர் ஓய்வு பெறுவார். தொடர்ந்து அமித் ஷா பதவி ஏற்பார்” என்று தெரிவித்து இருந்தார்.
இதனிடையே, முதல் 10 ஆண்டுகள் பாஜக தனிப்பெரும்பான்மை வகித்தபோது, ஆட்சியில் ஆர்எஸ்எஸ் பெரியதாக தலையிடவில்லை. ஆனால், கடந்த ஆண்டு நடைபெற்ற பொதுத்தேர்தலில் தனிப்பெரும்பான்மை ஆட்சியை இழந்தது முதலே, கட்சிக்குள் ஆர்எஸ்எஸ் தலையீடு அதிகரித்துள்ளதாக கூறப்படுகிறது. இதன் விளைவாகவே தற்போது வரை பாஜகவின் புதிய தேசிய தலைவரை நியமிப்பதில் சிக்கல் நீடிக்கிறதாம்.





















